தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்: தேர்வுத் துறை அறிவிப்பு

Posted By:

சென்னை: பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் விதித்துள்ளது. குறிப்பாக தேர்வு அறைக்குள் பெல்ட், டை, ஷ¨ அணிந்து வரக்கூடாது என்றும், செல்போன், கால்குலேட்டர் போன்றவற்றை எடுத்து வரவதும் கூடாது என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தேர்வு எழுதும் போது விடைத்தாளில் எழுத வேண்டிய முறைகள் குறித்தும் தெரிவித்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையாக தேர்வுத்துறை அனுப்பியுள்ளது.

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுகள்: மாணவர்கள் செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு நடக்கும் போது தமிழத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3000 பள்ளிகள் வரை தேர்வு மையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நோக்கில் விடைகளை பள்ளிகளே எழுதிக் கொடுப்பதாக பல புகார்கள் தேர்வுத்துறைக்கு வந்தபடி உள்ளன.

திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு பள்ளியிலும், நாமக்கல்லில் ஒரு பள்ளியிலும் இது போன்ற சம்பவங்கள் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் புதுச்சேரியை சேர்ந்த கல்வி அமைச்சரே திண்டிவனம் தேர்வு மையத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் போது துண்டுச் சீட்டு வைத்திருந்ததாக கையும் களவுமாக பிடிபட்டார்.

இது போன்ற சம்பவங்களை அடுத்து பல்வேறு கெடுபிடிகளை தேர்வுத் துறை கொண்டுவந்துள்ளது. முதற்கட்டமாக தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தொடங்கி அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலம் செய்ய வேண்டும் என்று தேர்வுத் துறை தெரிவித்துவிட்டது.

அதேபோல் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகளும் அந்தந்த பள்ளிக்கு ஆன்லைன் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்களே அவற்றை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கும் வகையில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு நடக்கும் போது முறைகேடுகளை தவிர்க்க இந்த ஆண்டும் பல கெடுபிடிகளை தேர்வுத்துறை கொண்டு வந்துள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது. இயற்பியல், கணிதத் தேர்வுகளில் கால்குலேட்டர் பயன்படுத்த கூடாது என்றும் தெரிவித்து விட்டது.

மேலும், பெல்ட், டை, ஷ¨ அணிந்து வந்தால் அவற்றை தேர்வு அறைக்கு வெளியில் வைத்துவிட்டுத்தான் தேர்வு எழுத வரவேண்டும். துண்டுச் சீட்டுகள் வைத்து பார்த்து எழுதுதல், விடைத்தாள் மாற்றிக் கொள்வது போன்றவை கடுமையான குற்றங்களாகவும் அறிவித்துள்ளது. அப்படிச் செய்யும் மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், 2 முதல் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தவிர தேர்வு எழுதும் முன்பாக விடைத்தாளில் முதல் பக்கத்தில் மாணவர்கள் விவரங்கள் எழுத 5 நிமிடம், கேள்வித்தாள் படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. பின்னர் காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடியும். பத்தாம் வகுப்பு தேர்விலும் மாணவர்களுக்கு 15 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டு காலை 10.15க்கு தேர்வு தொடங்கி மதியம் 12.45க்கு தேர்வு முடியும்.

இந்நிலையில், தேர்வு எழுதும் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து தேர்வுத்துறை சில விவரங்களை தெரிவித்துள்ளது.

செய்ய வேண்டியவை:
__________________________

 • விடைத்தாளின் முகப்பு சீட்டில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மாணவர்கள் தங்கள் கையெழுத்தை போட வேண்டும்.
 • விடைத்தாளில் ஒரு பக்கத்துக்கு 20 முதல் 25 வரிகள் வரை மட்டுமே எழுத வேண்டும்.
 • விடைத்தாளின் இரு பக்கங்களிலும் எழுத வேண்டும். ஒரு பக்கம் எழுத மறுபக்கத்தை விட்டுவிடக்கூடாது.
 • செய்முறை அல்லது மதிப்பீடுகள் அனைத்தும் விடைத்தாளின் இடம் பெற்றுள்ள பகுதியில் தான் இடம் பெற வேண்டும்.
 • வினா எண் தவறாமல் எழுத வேண்டும்.
 • இரு விடைகளுக்கு இடையே இடைவெளி விட்டு எழுத வேண்டும்.
 • வினாத்தாளின் வரிசைகளான 'ஏ' அல்லது 'பி' என்பதை மதிப்பெண்களுக்காக விடைத்தாளில் ஒதுக்கப்பட்ட பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
 • விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு மை கொண்ட பேனாவினால்தான் எழுத வேண்டும். அடித்தல் திருத்தல் இல்லாமல் தெளிவாக எழுத வேண்டும்.
 • விடைத்தாளில் விடை எழுதாத பக்கங்களில் குறுக்கு கோடு இட வேண்டும்.

செய்யக் கூடாதவை:
_________________

 • கேள்வித்தாளில் எந்த குறியீடும் எழுதக் கூடாது.
 • விடைத்தாளை எந்த வித சேதமும் செய்யக்கூடாது.
 • விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் மாணவரின் தேர்வு எண் அல்லது பெயரை எழுதவே கூடாது.
 • பல நிறம் கொண்ட பேனா அல்லது பென்சில் எதையும் விடைத்தாளில் பயன்படுத்தக் கூடாது.
 • விடைத்தாளில் உள்ள மார்ஜின் பகுதியில் விடைகள் எழுத கூடாது.
 • விடைத்தாள் புத்தகத்தில் இருந்து எந்த தாளையும் கிழிக்கவோ அல்லது நீக்கவோ கூடாது.

English summary
Tamil Nadu education department has come out with set of rules what the Plus Two, SSLC students should do and what should not be done while writing final exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia