மத்திய அரசு திடீர் உத்தரவு- பத்தாம் வகுப்பு புத்தகங்களில் மாற்றம்

Posted By:

சென்னை: பத்தாம் வகுப்புக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் சில மாற்றங்களை செய்து புதிய பத்தகங்களை அச்சிட்டு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு மாணவர்கள் புதிய புத்தகத்தின்படிதான் படிக்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் இலவச உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் இலவச பாடப் புத்தகங்களும் அடங்கும்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 16 கோடி புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல்கழகம் அச்சிட்டு தருகிறது. கடந்த 2008 ம் ஆண்டு முதல் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்ததால் மல்டி கலரில் பிரிண்டிங் செய்ய வேண்டி நிலை தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு ஏற்பட்டது. 2011ம் ஆண்டுக்கு பிறகு முப்பருவ கல்வி முறை அறிவிக்கப்பட்டதால் ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாக பாடப்புத்தகங்களை அச்சிட்டு வழங்கி வருகின்றனர்.

புதிய உத்தரவு

இந்நிலையில், கடந்த மாதம் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அவசரம் அவசரமாக ஒரு உத்தரவை வெளியிட்டு அனைத்து மாநில அரசுகளும் அந்த உத்தரவை உடனடியாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்து விட்டது. அதன்படி, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பாடங்களில் இயற்கை இடர்பாடுகள் குறித்த பாடங்களை அவசியம் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை வலியுறுத்தியுள்ளது.

பேரிடர் மேலாண்மை புதிய பாடம்

அதனால் தமிழகத்தில் தற்போது பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் பேரிடர் மேலாண்மை என்ற தலைப்பில் புதியபாடப் பகுதியை சேர்க்க உள்ளனர்.

இதற்காக, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு பேரிடர் மேலாண்மை குறித்த பாடங்களை தயார் செய்து வருகின்றனர். இந்த பாடங்களில் இருந்து பொதுத்தேர்வில் கேள்விகளும் இடம் பெறும் என்று தெரிகிறது. அதேபோல மாரல் சையின்ஸ் என்னும் நீதி நெறிகள் தொடர்பாகவும் சில பகுதிகள் இடம் பெற உள்ளன.

 

அதிக கேள்விகள்

மேலும், பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில், ஒவ்வொரு பாடத்தின் பின்பகுதியில் இடம் பெறும் கேள்விகள், பயிற்சி கேள்விகள் தற்போதைய புத்தகத்தில் மிகவும் குறைவாக இருப்பதாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்ததின் பேரில், அறிவியல் பாடப் புத்தகத்திலும் பாடப்பகுதியில் அதிக அளவில் கேள்விகளை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் மேற்கண்ட இரு பாடப் புத்தகங்களும் அச்சிடும் பணிகள் தொடங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல்..

எனவே அடுத்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படிக்க உள்ள மாணவர்கள் புதிய பாடப் புத்தகத்தைதான் படிக்க வேண்டும். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில்தோல்வி அடையும் மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டில் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதும் போது இந்த புதிய பாடப்புத்தகங்களை படித்துதான் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படும்.

English summary
Centre is planning to modify the SSLC Science and Social Science curriculum from next year by including new subjects

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia