ப்ளஸ் டூ தேர்வு முடிஞ்சுபோச்சு.... உயிரியல் கஷ்டமாம்!!

Posted By:

சென்னை: ப்ளஸ் டூ தேர்வுகளை முடித்துவிட்ட உற்சாகத்தில் இருக்கின்றனர் மாணவர்கள். உயிரியல் வினாத்தாள் கடினமாக இருந்தாலும் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. இத்தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இதில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம். தமிழ் வழியில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

சிறைப்பறவைகள்

பள்ளி மாணவர்கள் தவிர, 42 ஆயிரத்து 963 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதினர். தேர்வுக்காக 2 ஆயிரத்து 377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. புழல் சிறையில் 77 சிறை கைதிகளும் பிளஸ் 2 தேர்வை எழுதினர்.

 

 

உயிரியல் கடினம்

கடைசி நாளான இன்று உயிரியல் தேர்வு நடைபெற்றது. இதில் விலங்கியல் பிரிவில் மூன்று மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. புத்தகம், புளூபிரிண்ட் படி கேள்விகள் கேட்டிருந்தாலும், சற்று ஆழமாக இருந்தன என்று ஆசிரியர்களும் கருத்து கூறியுள்ளனர்.

 

தவறான கேள்விகளுக்கு

இதனிடையே பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

13 கேள்விகள் குழப்பம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், மார்ச் 20ஆம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு, தேர்வுகள் நடந்தன. தொழிற்கல்வி பாடமான வேளாண் செயல்முறைகள் தேர்வில், 13 வினாக்கள், புரியாத வகையில் இடம் பெற்றிருந்தன. இதனால், மாணவர்கள் திணறினார்களாம்.

வினாக்கள் குளறுபடி

இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகவே, கல்வித்துறை அதிகாரிகள், வேளாண் செயல்முறைகள் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் கமிட்டியிடம் விசாரணை நடத்தினர். இதில், வினாக்கள் குளறுபடியாக இருப்பது தெரிய வந்தது.

கருணை மதிப்பெண்கள்

இந்நிலையில், வேளாண் செயல்முறைகள் தேர்வில், நன்செய் பயிர் குறித்த, 10 மதிப்பெண் கேள்வி; ஒரு மதிப்பெண்ணுக்கான, மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விக்கு, மொத்தம் 12 கருணை மதிப்பெண் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி கணக்கு

இதனிடையே நேற்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் அனைத்து வினாக்களும் எளிதாக கேட்கப்பட்டிருந்தன; 100 மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும்,' என, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் தெரிவித்துள்ளனர்.

தேர்வு எழுதியபின் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட மாணவ, மாணவியர், "எதிர்பார்த்ததை விட, கணக்கு பாட வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. பலமுறை பயிற்சி செய்த வினாக்களே, கேட்கப்பட்டிருந்தன என்றார்.

 

 

சதம் உறுதி

சுமாராக படித்தவர்கள் கூட, 70 மதிப்பெண் வரை எளிதாக பெறலாம். தேர்வை நல்ல முறையில் எழுதியவர்களுக்கு, 100 மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும்,' என்றனர்.இத்தேர்வை 30,146 மாணவ, மாணவியர் எழுதினர்; 510 பேர் பங்கேற்கவில்லை. 811 தனித்தேர்வர் எழுதினர்; 195 பேர் வரவில்லை. இதனிடையே ஏப்ரம் 6ஆம் தேதி திங்கட்கிழமையன்று அறிவியல் தேர்வும், ஏப்ரல் 10ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளது.

தேர்வு முடிவுகள் எப்போது?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே கடைசி வாரத்திலும் வெளியாகும்" என, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியுள்ளார்.

English summary
+ 2 students are happy about the exams and they said Biology paper was little tough.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia