மகாத்மா காந்தி, அன்னை தெரேசா, இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூர், முன்னா் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாம் ஆகியோர் வந்து சென்ற அற்புதமான கல்லூரியாகத் திகழ்கிறது
பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி (Women's Christian College). தமிழ்நாட்டின் சென்னை நுங்கம்பாக்கத்தின் கல்லூரி சாலையில் உள்ள ஒரு புகழ்பெற்ற மகளிர் கல்லூரியாக பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி உள்ளது. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளை பட்டதாரிகளாகவும், கல்வி நிபுணர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் மாற்றி அனுப்பி வருகிறது இந்தக் கல்லூரி.
1915-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி அரசு உதவி பெறும் படிப்புகளையும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற தகுதியில் சுயநிதி படிப்புகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. 9 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்தக் கல்லூரி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தது.

வரலாறு
பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி 1915-ம் ஆண்டில் 41 மாணவர்கள் மற்றும் 7 ஆசிரியர்களுடன் இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்காவில் அமைந்துள்ள 12 மிஷனரி சங்கங்களின் கூட்டு முயற்சியின் விளைவாக, கலை மற்றும் அறிவியலில் இந்திய பெண்களுக்கு உயர் கல்வியை வழங்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட கல்லூரியாகும்.
ஆரம்பத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த இக்கல்லூரி 1982-ம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) ஒரு தன்னாட்சி கல்லூரியாக (அட்டானமஸ்) அங்கீகாரம் பெற்றுள்ளது.
தற்போது இக்கல்லூரியில் இது நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 209 ஆசிரியர்களோடு அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பிரிவுகளில் பாடங்களை பயிற்றுவிக்கிறது.
இந்தியாவின் முதல் பெண் அரசியல் கைதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான ருக்மிணி லட்சுமிபதி இக்கல்லூரியின் முதல் வருட மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரியின் முதல்வர்கள்
இந்தக் கல்லூரியின் முதல்வர்களாக எலினோர் மெக்டோகல், எலினோர் ரிவெட், 1938-1947, எலிசபெத் ஜார்ஜ், 1947-1950, எலினோர் டி.மேசன், 1950-1956, ரேணுகா முகர்ஜி, 1956-1965, அன்னா டி.சக்கரியா, 1965-1971,
ரேணுகா சோமசேகர், 1971-1981, இந்திராணி மைக்கேல், 1981-1994, கண்மணி கிறிஸ்டியன், 1994-1998,
குளோரி கிறிஸ்டோபர், 1998-2003, ரீட்டா ஜேக்கப் செரியன், 2003-2006, ரிட்லிங் மார்கரெட் வாலர் 2006-2017 இருந்துள்ளனர். தற்போதைய முதல்வராக லிலியன் ஐ ஜாஸ்பர், 2017-ம் ஆண்டிலிருந்து உள்ளார்.
அங்கீகாரம்
1982-ம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவால் ஒரு தன்னாட்சி கல்லூரியாக அங்கீகாரம் பெற்றுள்ள இக்கல்லூரி, 2019 -ம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (என்ஏஏசி) ஏ தரத்தை பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-ம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பால் (NIRF) இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் இந்த கல்லூரி தரவரிசைப்பட்டியலில் 72 வது இடத்தைப் பிடித்துள்ளது.
முன்னாள் மாணவிகள்:
கல்லூரியின் முன்னாள் மாணவிகளாக மேகா ஆகாஷ், நடிகை, சுபாசினி அலி, அரசியல்வாதி,
ரெஜினா கசாண்ட்ரா, நடிகை மற்றும் மாடல், ஆண்ட்ரியா ஜெரெமையா, பாடகி மற்றும் நடிகை, அனஸ்வரா குமார், நடிகை, ருக்மிணி லட்சுமிபதி, சுதந்திர போராட்ட வீராங்கனை மற்றும் சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர், எம். சாரதா மேனன், மனநல மருத்துவர் மற்றும் பத்ம பூஷண் விருது பெற்றவர்,
நடிகை ரேஷ்மி மேனன், சோனஜாரியா மின்ஸ், துணைவேந்தர், சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழகம்,
சி. பி. முத்தம்மா, இந்தியாவின் முதல் பெண் அரசு ஊழியர், சோபா நாராயண், பத்திரிகையாளர்,
தங்கம் பிலிப், ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர், சரண்யா பொன்வண்ணன், நடிகை
ஹீரா ராஜகோபால், நடிகை, லத்திகா சரண், சென்னை மாநகர காவல் ஆணையர், மல்லிகா சீனிவாசன், தொழிலதிபர், ரூபா உன்னிகிருஷ்ணன், விளையாட்டு துப்பாக்கி சுடும் வீராங்கனை, விபா பத்ரா, எழுத்தாளர், கவிஞர், விளம்பரதாரர், சுதா கொங்கரா, இயக்குனர். ஷாமிலி, இந்திய நடிகை,
கல்லூரி
அமெரிக்காவின் மஸ்ஸாசுசெட்ஸ் மாகாணத்தில் சவுத் ஹாட்லியில் உள்ள மவுண்ட் ஹோலியோக் கல்லூரி, 1920 முதல் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் சகோதரி கல்லூரியாக இருந்து வருகிறது.
சிறப்பு:
இந்தக் கல்லூரிக்கு மகாத்மா காந்தி வருகை தந்துள்ளார் என்பது மிகச்சிறப்பான விஷயமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் சமூகத் தொண்டு புரிந்து அன்பை போதித்த அன்னை தெரேசா, இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்ற ரவீந்திர நாத் தாகூர், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல்கலாம் போன்ற தலைவர்கள் இங்கு வந்து கல்லூரியை சிறப்பித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
1925-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி மகாத்மா காந்தி கல்லூரிக்கு வந்து சிறப்புரை ஆற்றி விட்டு சென்றுள்ளார். மகாத்மா காந்தி வந்து சென்று 100 வருடங்கள் நிறைவடையவுள்ளன. அதற்கான நூற்றாண்டு நினைவு விழா அண்மையில் கல்லூரியில் நடைபெற்றது.
தரவரிசை:
2019-ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்தப் பிரிவில் சென்னை என்ஐஆர்எஃப் தரவரிசையில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி 32-வது இடத்தில் உள்ளது.
இந்தியா டுடே 2021 தரவரிசையின்படி, ஒட்டுமொத்தப் பிரிவினருக்கான இந்தியாவின் முதல் 50 கல்லூரிகளில் WCC இடம் பெற்றுள்ளது.
பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சென்னை தரவரிசை 2022, இந்தியாவின் சிறந்த 20 கலைக் கல்லூரிகளில் 18 வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியா டுடே கணக்கெடுப்பின்படி, WCC இந்தியாவின் சிறந்த 25 வணிகக் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ளது. 2021-ம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த 10 அறிவியல் கல்லூரிகளில் WCC ஆனது.
இந்தியா டுடே கணக்கெடுப்பின்படி, சிறந்த BCA கல்லூரிகளில் 7 வது இடத்தைப் பிடித்துள்ளது .
மனிதநேயம் & சமூக அறிவியல் விஷயத்தில்; கல்லூரி இந்தியா டுடே 17 வது இடத்தில் உள்ளது
BBA படிப்புக்கு; அனைத்து மாநிலங்களிலும் WCC 50வது இடத்தில் உள்ளது
படிப்புகள்:
சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் வழங்கப்படும் படிப்புகள் இரண்டு வகைகளாகும், முக்கியமாக அரசு உதவி மற்றும் சுயநிதி கல்லூரியில் வழங்கப்படும் படிப்புகளாகும். அனைத்து முக்கிய பிரிவுகளிலும் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டிலும் படிப்புகள் கிடைக்கின்றன. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி யுஜி படிப்புகள் பிஏ, பி காம், பிபிஏ, பிசிஏ மற்றும் பிஎஸ்சி ஆகியவற்றில் கிடைக்கின்றன. பிஜி நிலை MA, M Com மற்றும் MSc ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதலாக, பிஎச்.டி(Ph.D) போன்ற ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளையும் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி வழங்குகிறது.
தனிநபர்களின் அறிவு மற்றும் திறன் தளத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து பாடத்திட்டங்களும் நன்கு வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் வழங்கப்படுகின்றன. மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் சுயநிதி படிப்புக் கட்டணம் அரசு உதவி பெறும் படிப்புகளுடன் ஒப்பிடும்போது சிறிது கூடுதலாக இருக்கும்.
வளாக வசதிகள்:
பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பல்வேறு வசதிகள் மாணவிகளுக்காக வழங்கப்பட்டுள்ளன.
நூலகம்: அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் பத்திரிகைகள் உள்ளன. இ-ஜர்னல்கள் மற்றும் இணைய வசதிகள் சிறந்த தானியங்கி இணைய சேவைகளை கல்லூரி நிர்வாகம் வழங்குகிறது.
ஆலோசனை மையம்: கல்லூரி 'விகாஸ்' என்ற பெயரில் ஒரு முக்கிய மையத்தை நடத்துகிறது, அங்கு அனைத்து தனிப்பட்ட பிரச்சினை ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. ஆளுமை வளர்ச்சி மற்றும் உளவியல் மதிப்பீடுகள் குறித்த குழு ஆலோசனை திட்டங்கள் உள்ளன.
மகளிர் விடுதி: கல்லூரி குறைந்த எண்ணிக்கையில் தங்கும் விடுதியை வழங்குகிறது. சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி விடுதிக் கட்டணம் சுமார் ரூ. 28000 என குறிப்பிடப்பட்டுள்ளது.
மையங்கள்: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையம், பெண்கள் படிப்புக்கான மையம், சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கான மையம் மற்றும் நிறுவன முன்னேற்றத்திற்கான மையம் போன்ற முக்கிய மையங்கள் உள்ளன.
சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க; ஏரோபிக்ஸ், யோகா, தைச்சி, கராத்தே, மற்றும் ஜூம்பா போன்ற செயல்பாடுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
கல்லூரியில் உள்ள கிளப்புகள்: வினாடி வினா கிளப், இந்தியன் மியூசிக் கிளப், இந்திய டான்ஸ் கிளப், ஆர்ட்ஸ் கிளப் என பல கிளப்கள் கல்லூரியில் அமைந்துள்ளன.
கல்லூரி நிர்வாகம்:
பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி நிர்வாகமானது, 1798-ம் ஆண்டு கட்டப்பட்ட டோவெட்டன் ஹவுஸை வாங்கியது. பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள கூம் ஆற்றின் கரையோரத்தில் 11 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இடம் வாங்கப்பட்டது.
நோக்கம்:
பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியின் முக்கிய நோக்கமாக தரமான கல்வியை மாணவிகளுக்க வழங்கி அவர்களுக்கு சமூகத்தில் நல்ல இடத்தைப் பெற்றுத் தருவதாகும். பெண்களுக்கு முழுமையான, அர்த்தமுள்ள மற்றும் பொருத்தமான கல்வியை வழங்குவதன் மூலம் அவர்கள் அறிவார்ந்த முறையில் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும், ஒழுக்க ரீதியாக நேர்மையாகவும், சமூக விழிப்புணர்வு மற்றும் ஆன்மீக ரீதியில் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.
ஆரம்ப ஆண்டுகளில் இருந்தே, கல்லூரி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள ஒத்த நிறுவனங்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் மசாசுசெட்ஸில் உள்ள மவுண்ட் ஹோலியோக் கல்லூரி, இதன் சகோதரிக் கல்லூரியாக அமைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்புப் பிரிவு
மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில், கல்லூரியின் வேலை வாய்ப்பு பிரிவு சிறப்பானதாக அமைந்துள்ளது, நிறுவன முதலாளிகளுக்கும் மாணவிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு சிறந்த மாணவிகளுக்கு நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற்ருத் தருகிறது. கல்லூரியானது ஆண்டுதோறும் கேம்பஸ் தேர்வை நடத்துகிறது.
இந்த கேம்பஸ் இன்டர்வியூவில் புகழ்பெற்ற நிறுவனங்கள் அழைக்கப்படுகின்றன. மேலும், தொழில் வழிகாட்டுதலுக்காக பல கருத்தரங்குகள் மற்றும் வேலை வாய்ப்பு பிரிவுத் திட்டங்களையும் ஏற்பாடு செய்கிறது.
இந்த வளாகத் தேர்வில் புகழ்பெற்ற நிறுவனங்களான IBM, Wipro, Infosys, Google, HCL, Taj, Tech Mahindra, Fitness one, ITC, TATA உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஆண்டுதோறும் பங்கேற்கின்றன.
முகவரி:
கல்லூரியானது
Women's Christian College, #51, College Road, Chennai 600 006 என்ற முகவரியில் செயல்படுகிறது.
தொலைபேசி: 044 2827 5926, 044 2823 1676
ஃபேக்ஸ்: 044 2827 6798
இமெயில்: [email protected]
இணையதள முகவரி: https://wcc.edu.in/


Click it and Unblock the Notifications












