சர்வதேச பல்லுயிர் தினம் , ஒவ்வொரு ஆண்டும் மே 22 அன்று கொண்டாடப்படுகிறது, இது பல்லுயிர் பிரச்சினைகள் பற்றிய புரிதலையும் விழிப்புணர்வையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஒரு மையகருத்தினை வைத்து கொண்டாடப்படுகிறது, 2024-ன் மையகருத்து 'திட்டத்தின் ஒரு பதியாக இருப்போம்' என்பதாகும். பல்லுயிர் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

பல்லுயிர் அல்லது உயிரினப் பல்வகைமை என்பது உலகில் உள்ள கண்களுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் தொடங்கி பெரிய திமிங்கிலம் வரை அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும்.
பல்லுயிர்களை பாதுகாபத்தின் அவசியம்
அடிப்படை தேவைகள்;
மனிதர்கள் தற்போது நவீன காலத்தில் வாழ்ந்தாலும் இன்றும் தங்களது இன்றியமையாத தேவைகளுக்கு இயற்கையே சார்ந்துள்ளனர். உதாரணத்திற்கு மனித உணவில் 80 % அதிகமானவை தாவரங்களில் இருந்து பெறப்படுகின்றன.

நாம் உண்ணும் உணவுப் பயிர்கள், மருத்துவ தாவரங்கள் மற்றும் இதர தாவரங்களின் பலன்களை பெறுவதற்கு மகரந்த்ரச்சேர்க்கை அவசியம். 80% தாவரங்களின் மகரந்த்ரச்சேர்க்கையானது பறவைகள், பூச்சிகள், நத்தைகள், மற்றும் வவ்வால் மூலம் நடைபெறுகின்றன. இதில் தேனீக்கள் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
உலகில் உள்ள அனைத்து தேனீக்களும் அழிந்துவிட்டால், அதன்பின் மனிதனால் நான்கு ஆண்டுகளுக்கு மேல் வாழமுடியாது என ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியிருக்கிறார்.
மருத்துவம்;
தற்போது வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள 80 % மக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களை சரிசெய்ய நேரடியாக தாவரங்களையே பயன்படுத்துகின்றார்கள் மற்றும் இன்றைய நவீன மருத்துவத்தில் பயன்படுத்படும் 40% மருந்தின் மூலக்கூறுகள் தாவரங்களில் பெறப்படுகின்றன.

கரியமிலவாயுவை கட்டுப்படுத்துதல் மற்றும் பேரிடர் தடுப்பு
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுபடுத்துவதில் பல்லுயிர்கள் இயற்கை அரணாக செயல்படுகிறது. நிலம் மற்றும் கடல் மனித சமூகத்தினால் வெளியிடப்படும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை 60% உறிஞ்சுகின்றன. உதாரணமாக, சதுப்புநிலக் காடுகள், கரியமில வாயுவைச் சேமித்து ஆக்ஸிஜனை உருவாக்கும் அதே வேளையில், தீவிர வானிலையின் போது புயல் மற்றும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கிறது.
பொருளாதார மதிப்பு;
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55% க்கும் அதிகமானவை பல்லுயிர்களையே சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் மூலம் நாம் ஆண்டுக்கு 125-140 டிரில்லியன் டாலர் சேவைகளை பெறுகிறோம், அதாவது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகமாகும்.

இந்தியாவின் பல்லுயிர்கள் வளம் மற்றும் பாதுகாப்பு;
உலக நிலப்பரப்பில் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியா வெறும் 2 சதவீதம் மட்டுமே உள்ளது, ஆனால் உலகின் பல்லுயிர்களில் 8 சதவீதம் இந்தியாவில் காணப்படுகிறது. மேலும் ஈரமான, வறண்ட, வெப்பமான மற்றும் குளிரான பகுதிகள் காணப்படுகின்றன, இதனால் உலகில் உள்ள 36 உயிரினப் பன்மய வள மையங்களில் (Hotspot) 4 இந்தியாவில் உள்ளது. நமது அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழ்நாட்டில் அதிகப்படியான பல்லுயிர்கள்/உயிரினப் பல்வகைமை உள்ளன. உதாரணத்திற்கு இந்தியாவில் காணப்படும் தாவரங்களில் இனங்களில் 33% தமிழ்நாட்டில் காணப்படுகிறது.
பல்லுயிர்களுக்கான அச்சுறுத்தல்கள்;
நாம் பயன்படுத்தப்படும் புதைபடிம எரிபொருட்கள், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் தொழிற்சாலை, விவசாயம், இதுபோன்ற இன்னும் பல தேவைகளுக்காக காடுகளை அழிப்பதின் மூலம் ஏற்படும் பருவநிலை மாற்றம் போன்றவை பல்லுயிர்களுக்கான அச்சுறுத்தல்களாகஉள்ளன. சுமார் 75% நிலப்பரப்பு சூழலும், 66% கடல் சூழலும் மனித நடவடிக்கைகளால் கணிசமாக மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது ஏறக்குறைய 1 மில்லியன் விலங்கு மற்றும் தாவர இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன.
பல்லுயிர்களை அழிவில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்;
பல்லுயிர்களானது காடுகள் விவசாய நிலங்கள், பாலைவனம் மற்றும் ஈரப்புல நிலங்கள் போன்ற அனைத்து விதமான சூழ்நிலை மண்டலங்களில் உள்ளது. இதில் ஈரப்புல நிலங்களில் மட்டுமே 40% பல்லுயிர்கள் உள்ளது. எனவே இதுபோன்ற சூழலியல் உணர்த்திறன் மிக்க (Eco-Sensitive Zone) பகுதிகளை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் தொழிற்சாலை விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை விவசாயத்தின் மூலம் மண்ணின் வளம், தேனீக்களை பாதுகாக்கலாம். தற்போது ஆக்கிரமிப்பு அன்னிய உயிரினங்களான (Invasive Alien species) பார்த்தீனியம், உண்ணிச்செடி, ஆகாயத்தாமரை, ராட்சத ஆப்பிரிக்க நில நத்தை மற்றும் ஆப்பிரிக்கன் கெளுத்தி போன்றவை, பல்லுயிர் பரவலுக்கு பெரும் தடையாகவுள்ளது. ஆகையால் ஆக்கிரமிப்பு அன்னிய உயிரினங்களை கட்டுபடுத்துதல் போன்ற செயல்களின் மூலம் பல்லுயிர்களை அழிவில் இருந்து பாதுகாக்கலாம்.


Click it and Unblock the Notifications












