தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாளம் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணி முடிவடைந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெறவுள்ளது. திட்டமிட்டப்படி மே 10-ம் தேதி வரும் ரிசல்ட்டுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரையும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி முடிவடைந்தது.
இதையடுத்து தற்போது பாடத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் மதிப்பெண்களை கணினியில் பதிவு செய்யும் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்பப் பாடத்தில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2024-25-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்து பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கருதாமல் மூன்றாவது மொழியை தேர்வு செய்து படித்து வருகின்றனர். முன்னதாக, பொதுத் தேர்வில் மூன்றாவதாக எடுக்கும் விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற நடைமுறை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து மூன்றாவதாக எடுக்கப்படும் விருப்பப் பாடத்திலும் மாணவ, மாணவிகள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், 5 பாடங்களை தாண்டி 6-வது பாடமாக விருப்பப்பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்கள் பொதுத்தேர்வில் அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை பயிலும் மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதினால் போதும். ஆனால், விருப்ப பாடமாக மலையாளம், உருது, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பாடங்களை தேர்வு செய்யும் மாணவ, மாணவிகள் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகளை எழுத வேண்டும். அவர்கள் விருப்ப பாடத்திலும் குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது 2024 - 25-ம் கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வரும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி தமிழக தேர்வுத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் விடைத்தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. பின்னர் அவை, அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு ஏப்ரல் 10 முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக தமிழகம் முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி மே 10-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
மாணவச் செல்வங்கள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வழிமற்றும் ஆங்கில வழி விடைத்தாள்களை அதற்குரிய ஆசிரியர்கள் மட்டுமே திருத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அந்த அதிகாரி கூறினர்.
தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி திட்டமிட்டபடி வரவுள்ளதால் மாணவர்கள் அதற்காக வெயிட்டிங்கில் உள்ளனர்.
10-ம் வகுப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் பெரும்பாலும் பிளஸ் 1, பிளஸ் 2 முறையைத்தான் தேர்வு செய்கின்றனர்.
பிளஸ் 2 படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்கள் பெரும்பாலும், எம்பிபிஎஸ், இன்ஜினியரிங் அல்லது இளங்களை, இளம் அறிவியல், இளம் வணிகவியல் பாடப்படிப்புகளைத் தேர்வு செய்கின்றனர்.
அதற்கேற்றார் போல் அவர்கள் பிளஸ் 1 பிரிவில் முதல் குரூப், பியூர் சயின்ஸ் குரூப் படிப்புகளைத் தேர்வு செய்கின்றனர். இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ள குரூப்புகளைத் தேர்வு செய்கின்றனர்.
பி.காம் படிக்க விரும்பும் மாணவர்கள் பொருளியல், கணக்குப் பதிவியல் படிப்பு உள்ள குரூப்புகளைத் தேர்வு செய்கின்றனர்.

அதைப் போலவே ஏராளமான மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து டிப்ளமோ படிப்புகளைப் படிக்கின்றனர். டிப்ளமோ பிரிவில் சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளை மாணவர்கள் அதிகம் பயில விரும்புகின்றனர். இந்தப் படிப்புகளைக் கற்றுத் தர தமிழ்நாட்டில் நிறைய அரசு பாலிடெக்னிக்குகளும், ஏராளமான தனியார் பாலிடெக்னிக்குகளும் உள்ளன. இங்கு குறைந்த கட்டணத்தில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளைப் படித்து முடிக்கலாம்.
படிப்பை முடித்தவுடன் பொறியியல் சார்ந்த நிறுவனங்களில் எளிதாக வேலைவாய்ப்பைுயும் இளைஞர்கள் பெற முடியும். மூன்றாண்டு வேலை அனுபவத்துடன் பகுதி நேர பி.இ. / பி.டெக் படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கவும் மாணவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும். எனவே, மாணவச் செல்வங்கள் டிப்ளமோ படிப்புகளை படித்து முடித்தாலும் அவர்களுக்கான வேலைவாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
டிப்ளமோ பிரிவில் ஏராளமான படிப்புகள் மாணவர்களுக்காகக் காத்திருக்கின்றன என்பதை அவர்கள் நினைவில் கொள்வது அவசியம். மெக்கானிக், சிவில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில் நுட்பத் துறைகள் , மருத்துவத் துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள், ஹோட்டல் நிர்வாகப் படிப்புகள் என வேலைவாய்ப்பை அள்ளித் தரும் முக்கியத் துறையைச் சேர்ந்த டிப்ளமோ படிப்புகள் பரவிக் கிடக்கின்றன.
தொழில் நுட்ப டிப்ளமோ படிப்புகளில் ஆட்டமொபைல், இஇஇ, இசிஇ, மெக்கானிக்கல், சிவில் போன்ற டிப்ளமோ படிப்புகள் மிகவும் பிரபலமானவையாக உள்ளன. இதுபோன்ற டிப்ளமோ படிப்புகளை பெரும்பாலான மாணவ, மாணவிகள் தேர்வு செய்து படிக்கின்றனர். மேலும் டிப்ளமோ படித்துவிட்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து பி.இ., பி.டெக் படிக்கும் வாய்ப்பும் மாணவர்களுக்கு இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கடல்சார்ந் படிப்புகளான மரைன் டெக்னாலஜி தொடர்பான டிப்ளமோ படிப்புகளையும் மாணவ, மாணவிகள் தற்போது அதிகம் தேர்வு செய்து சேர்ந்து வருகின்றனர். இந்தப் படிப்புகளையும் மாணவர்கள் தேர்வு செய்து படிக்கும்போது அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் இந்த போட்டி சூழ்ந்த உலகில் காத்திருக்கின்றன.
டிப்ளமோ படிப்புகளை மாணவர்களுக்கான வரப்பிரசாதம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு டிப்ளமோ படிப்புகள் மூலம் மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றனர்.
அதேபோல், ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஐடிஐ-களில் சேர்ந்து தொழில் சார்ந்த சான்றிதழ் படிப்புகளைப் படிக்கின்றனர். அரசு நடத்தும் ஐடிஐகளில் உதவித்தொகையுடன் கூடிய சான்றிதழ் படிப்புகள் ஏராளமாக உள்ளன. இந்த ஐடிஐ வழங்கும் சான்றிதழ் படிப்புகளில் எலெக்ட்ரீஷியன், கம்ப்யூட்டர் மெக்கானிக், ஏ.சி மெக்கானிக் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. தற்போது ஐ.டி.ஐ-யில் சேர போட்டி குறைவாக உள்ளது.
மேலும், இங்கு திறன் மேம்பாட்டுக்கான ஏராளமான படிப்புகளும் மாணவ, மாணவிகளுக்காக கற்பிக்கப்படுகின்றன. இதில் சேர்ந்து படிப்பவர்களுக்குச் சொந்தமாகத் தொழில் தொடங்கவும், வங்கிக் கடனுதவி வழங்கவும் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே, ஐடிஐ படிப்புகளையும் மாணவர்கள் விரும்பிப் படிக்கலாம். இதனால் அவர்களுக்கு கைத்தொழிலுடன், படிப்பும் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications












