வர வர வேலை ரொம்ப போரடிக்குதா? வேற வேலை தேடுறீங்களா? இதப்படிங்க பாஸ்!

Posted By: Gowtham Dhavamani

"என்னோட வேலை எனக்கு பிடிக்கல". "என்னோட நிறுவனத்தை எனக்கு பிடிக்கல". "என்னோட முதலாளிய எனக்கு பிடிக்கல". இன்றைய காலகட்டத்துல அவுங்க வேலையயோ இல்ல அது சம்மந்தமான ஏதோ ஒரு விஷயத்தை மக்கள் வெறுக்கதான் செய்யறாங்க. இந்த மாதிரி விஷயங்களை கடந்த காலத்துல எவளோ தரம் கேட்டிருப்போம்னு சொல்றது சிரமம்.

உங்க வேலைய நீங்க வெறுக்கறப்போ என்ன செய்யணும் :

உண்மையா சொல்லணும்னா அது நல்லது இல்ல. ஏன்னா புடிக்காத வேலைய தினமும் செய்யறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அடுத்ததா நமக்கு நம்ம வேலை புடிக்கலைன்றத இணையத்துல ஊருக்கே தெரியற மாதிரி எழுதறது ரொம்ப தப்பு.

அப்போ என்னதான் செய்யமுடியும்? அதே வேலைல இருக்கணுமா? இல்ல. அதுக்குன்னு வழிமுறை இருக்கு. உங்க வேலைல நீங்க சந்தோஷமா இல்லாதப்போ, அத நீங்க வெறுக்கறப்போ, அதுல இருந்து விடுபட சரியான வழிமுறைகள் இருக்கு. நமக்கு புடிக்காத ஒரு வேலைல இருக்க, அந்த சூழல்ல இருக்க நாம அதிகமான நேரம் செலவு செய்யறோம். சந்தோஷமா இல்லைன்றத விட, நமக்கு புடிச்ச வேலைல நாம இருந்த அதிகமா நாம உழைப்போம்.

 

"எனக்கு இந்த வேலை பிடிக்கல" இந்த வார்த்தைகளை உள்ளுக்குல்லையே வெச்சுக்குங்க:

உங்க வேலை உங்களுக்கு பிடிக்கலையா. பரவால்ல. அத உங்க மனசுக்குள்ள, உங்க குடும்பத்துக்குள்ள, உங்க நெருங்கிய நண்பர்கள் கிட்ட மட்டும் சொல்லுங்க. உலகத்துக்கே தெரியற மாதிரி இணையத்துல எழுத வேண்டாம். ஏன்னா நாளைக்கு பாக்க கூடாதவங்க பாத்தா பெரிய சிக்கல் ஆகும். சந்தேகம் இருந்தா ட்விட்டர்ல
"ஐ ஹேட் மை ஜாப்"னு தேடி பாருங்க.

வேலை செய்யறவங்க மட்டும் இங்க சமூக வலைத்தளங்கள பயன்படுத்தல, வேலை குடுக்கறவங்களும் பயன்படுத்தறாங்க. அவுங்களும் நீங்க எழுதறத படிக்க வாய்ப்பு இருக்கு. தெளிவா சொல்லனும்னா உங்கள பத்தி கூகுள்ல தேடின நீங்க எழுதுன "டிவீட்ஸ்" முன்னாடி வந்து நிக்கும். அதவிட "பேஸ்புக்" அதுல நீங்க சரியான அமைப்புகள் செய்யலைன்னா, தப்பான ஆட்கள் கண்ணுல உங்க தகவல் பட வாய்ப்பு இருக்கு.

புதுசா ஒரு வேலை கிடைக்கறதுக்கு முன்னாடி, நாம அத பத்தி புலம்புனதுக்காக இருக்கற வேலைய இழக்க கூடாது. சரியான படி சிந்திச்சிச்சு அடுத்த வேலைல சேர பாக்கணும்.

 

நீங்க மட்டும் இல்ல, உலகமே அப்பிடித்தான் :

"ஐ ஹேட் மை ஜாப்"னு சொல்றது நீங்க மட்டும்னு இல்ல, அந்த நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

நீங்க நெனச்ச மாதிரி, இந்த வேலை இல்லாம இருக்கலாம். நீங்க எதிர்பாத்தது ஒன்னாவும் கிடைக்கறது ஒன்னாவும் இருக்கலாம். அப்படி இல்லாம, வேலை புடிச்சிருந்து கூட வேலை செய்யறவங்கல புடிக்காம போகலாம். வேலை செய்யற நேரம், செய்யற இடம், உங்க வாடிக்கையாளர்கள் இப்பிடி வேலைல பல விஷயங்க சிக்கலாக வாய்ப்பு இருக்கு.

உங்களுக்கு இந்த வேலை புடிக்கலன்ற தருணம் உங்க வாழ்க்கைல வந்துருச்சுன்னா அது நல்லது தான். அடுத்து என்ன செய்யலாம்னு நீங்க யோசிக்க ஒரு வாய்ப்பு அமையும்.

 

வேலையை ராஜினாமா செய்யக்கூடாது :

அவசரத்துல வேலைய விட்டுட்டு, பொறுமையா வருத்தப்படறது இத நம்ம மக்கள்ல பல பேர் செய்யற விஷயம். வேலைய ராஜினாமா செய்யறத கடைசி கட்டமா வெச்சுக்கிட்டு, முதலல்ல இந்த வேலைய எப்பிடி நமக்கு ஏத்த மாதிரி மாத்தணும் பாக்கணும். உண்மையையே நாம வேலைய விட்டுத்தான் ஆகணுமா இல்ல, இப்போ நாம கடினமான ஒரு கட்டத்துல இருக்கமான்னு யோசிக்கணும்.

ஏதாவது ஒரு விஷயத்த வித்தியாசமா செய்தா இந்த நிலைல மாற்றம் வருமான்னு சிந்திக்கணும். இந்த இடம் இல்லாம வேற இடத்துக்கு மாறுதல் கேக்கலாமா? இல்ல வேலை செய்யற நேரத்துல மாற்றம் கேக்கலாமா? சில நேரங்கள்ல இந்த மாதிரி சின்ன மாற்றங்கள் நமக்கு தகுந்த மாதிரி அமையும். அப்போ வேலை புடிக்கலைன்னாலும் விட்டுட்டு போற அவசியம் இருக்காது. அதனால ராஜினாமா பத்தி சிந்திக்கறதுக்கு முன்னாடி இந்த வேலைய எப்பிடி செய்தா நாம சந்தோஷமா இருக்க முடியும்னு சிந்திக்கணும். வேலை கிடைக்கறது சுலபமில்ல. வாய்ப்பு இருந்த இருக்கற வேலைய தக்க வெச்சுக்க பாக்கணும்.

 

வீரர்களே தயாராகுங்கள் : வேலை தேட!

வாய்ப்பே இல்ல. வேலைய விட்டுத்தான் ஆகணும். இதுக்கு மேல பொறுத்துக்க முடியாதுன்னு உங்க மனசு உங்க கிட்ட சொல்லறப்போ, நீங்க ராஜினாமா பத்தி முடிவு எடுக்கலாம். ஆனா அந்த நேரத்துலையும் வேற வேலை இல்லாம இருக்கற வேலைய விடாதீங்க. எதனால சொல்லறோம்னா, ஒரு வேலைல இருந்துட்டு இன்னொரு வேலை தேடறது சுலபம்.

அதனால அந்த நேரத்துல சமூக வலைத்தளங்கள உங்களோட சுயவிவரங்களா மேம்படுத்துங்க. மற்ற நிறுவன மேலாளர்கள் உங்க விவரங்களை கவனிக்கிற மாதிரி மாத்துங்க. மத்த நிறுவனங்கள்ல இருக்கற நண்பர்கள் கிட்ட பேசுங்க. புதுசா வேற நிறுவன ஊழியர்கள நண்பர்களை ஆக்குங்க. இதுக்கு "நெட்வொர்க்கிங்"னு ஆங்கிலத்துல சொல்லுவாங்க. வேலைய ராஜினாமா செய்யறதுக்கு முன்னாடி எந்த அளவுக்கு நீங்க தயாரா இருக்கீங்களோ அந்த அளவுக்கு நல்லது.

 

வேலை தேடும் படலத்தை ஆரம்பியுங்கள் :

வேலை தேடுவது எப்பிடி இருக்கணும்னா, வலது கைல எழுதற விஷயம் இடது கைக்கு தெரியாத வகைல இருக்கணும். எதனால அவ்வளவு ரகசியமா தேடணும்னா, வேற யாரும் உங்க திட்டங்களுக்கு இடைல வந்து குழப்பம் தராம இருக்கறதுக்கு.

உங்க அனுபவத்துக்கு ஏத்த மாதிரி, உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி எந்த நிறுவனத்துல வேலை இப்போ இருக்குனு தெரிஞ்சுக்க வலைத்தளங்கள உபயோகிங்க. மின்னஞ்சல் மூலமா வேலைக்கு விண்ணப்பிக்க ஆரம்பியுங்க. ஆனா வேலை கிடைக்க நாட்கள் அதிகம் ஆகலாம். அதனால எதுக்கும் தயாரா இருங்க.

 

என்ன சொல்ல போறீங்க? அது முக்கியம்..

ராஜினாமா செய்யும்போது, என்னதான் ஊருக்கே சொல்லணும்னு ஆசை இருந்தாலும், அப்பிடி செய்யாம, முடிஞ்ச அளவுக்கு நிதானமா செயல் படறது நல்லது. ஏன் என்றால் தற்போது நிறுவனங்கள் முன்னர் வேலை செய்த நிறுவனங்களில் விவரங்களை சரிபார்ப்பது மட்டுமின்றி, உங்களிடமும் அது தொடர்பான சில கேள்விகளை கேட்பார்கள். அதற்கு நீங்கள் கொடுக்கும் பதில் மிகவும் முக்கியம்.

நமக்கு பிடிக்காத வேலையை பற்றி நாம் தவறாக பேசுவதால், அடுத்து நமக்கு கிடைக்க போகும் வேலையிலும் அதே போன்ற நடத்தை இருக்கும் என அவர்கள் முடிவு செய்ய வாய்ப்பு இருக்கின்றது.

 

ராஜினாமா செய்யும் விதம் :

ராஜினாமா கொடுக்கும் போது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு மரியாதையுடன் பணிவுடன், விடை பெறுவது நலம். இரு வாரம் அல்லது ஒரு மாதம் இறுதி அறிக்கை கொடுங்கள். மேலும் அடுத்து வருபவர்களுக்கு வேலையை பற்றி கற்று தர உறுதியளியுங்கள். மேலும் அத்தருணங்களில் அடுத்த வேலையில் எப்பிடி சிறப்பாக செயல் பட இயலும் என சிந்திப்பது நலம்.

English summary
Things To Do When You Start Bored of Your Job!

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia