தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்போது குரூப்-4 தேர்வுக்கான தேதியை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்காகக் காத்திருந்த இளைஞர்கள், இளைஞிகள் தேர்வுக்கு மும்முரமாகத் தயாராகி வருகின்றனர். இந்தத் தேர்வுக்கு மிகவும் சிறப்பான முறையில் தயாராவது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் 10 டிப்ஸ்களை தந்துள்ளனர்.
அதிக சம்பளத்துடன் ஒரு நல்ல வேலையைப் பெறுவது தற்போதுள்ள ஒவ்வொரு இளைஞரின் கனவாகும். அவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக வந்துள்ளது டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிடும் போட்டி தேர்வுகளில் முக்கியமான ஒன்று TNPSC குரூப் 4. TNPSC Group 4 வில் தேர்ச்சி பெற்றால் என்ன பதவிகள் கிடைக்கும்? என்பதைப் பார்க்கலாம்.
பதவிகள்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றால் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), இளநிலை உதவியாளர் (பிணையம்), வரித் தண்டலர் நிலை I, தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III ), பண்டகக் காப்பாளர் (தமிழகம் விருந்தினர் இல்லம், உதகமண்டலம்),
இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்),
இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்),
வரித் தண்டலர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்),
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III ) (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) ஆகிய பணிகளில் சேர முடியும்.
மேலும் நல்ல ஊதியமும் கிடைக்கும். டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு முறை
குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதனை கட்டாயம் தேர்வர்கள் எழுத வேண்டும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். முன்னர் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்தை தேர்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. தற்போது தமிழ் மொழிப்பாடம் மட்டுமே உள்ளது. இதனை தேர்வர்கள் கண்டிப்பாக எழுதி குறைந்தப்பட்ச மதிப்பெண்ணை எடுக்க வேண்டும்.
அடுத்தப்பகுதியாக, பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்டம், பழைய பாடத்திட்டத்தை ஒத்துத்துள்ளது. இருப்பினும், புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே மொத்தம், இந்த எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
மொழிப்பாடம்
முதல் 100 வினாக்கள் தமிழ் மொழி பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளில், இந்த பகுதி விருப்ப மொழிப் பாட பகுதியாக இருந்தது. அதாவது தேர்வர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது தமிழ் மொழித் தேர்வை தகுதி தேர்வாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. எனவே தமிழ் மொழிப்பாட பகுதியில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம்பெறும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த பகுதி வினாக்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
அதாவது உங்களுக்கு வேலை கிடைக்காது. இருப்பினும் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இதனால், தமிழ் மொழிப் பாடப் பகுதியில் 40 சதவீத மதிப்பெண்கள் மட்டும் எடுத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. ஏனெனில் தமிழ் மொழிப் பாடப் பகுதி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக உள்ளது. எனவே தமிழ் மொழிப் பாட பகுதி மதிப்பெண்களும் இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே தமிழ் பாடப் பகுதியை எப்போதும் போல் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம் என்பதை தேர்வர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இலக்கணம்
தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
பொது அறிவு
இதற்கு அடுத்தபடியாக, பொது அறிவுப்பகுதியில் கேள்விகள் வரும். அதாவது, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.
தேர்வுக்கு நல்ல முறையில் தயாராவது எப்படி?
தேர்வு முறையை அறிந்துகொண்டுள்ள தேர்வர்கள் தற்போது குரூப் 4 தேர்வுக்கு நல்ல முறையில் தயாராக 10 டிப்ஸ்களை நிபுணர்கள் வழங்கியுள்ளனர்.
அந்த 10 டிப்ஸ்கள் வருமாறு...

1. பாடத்திட்டம்:
இந்த குரூப் 4 தேர்வுக்கு நல்ல முறையில் தயாராக நினைப்பவர்கள் முதலில், புத்தகங்களை சேகரிக்க வேண்டும். பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு 6 முதல் 10 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களை முதலில் வாங்கிக் கொண்டு அதில் நல்ல பயிற்சியைப பெறவேண்டும்.
2. தீவிரமான படிப்பு:
இதற்கு அடுத்ததாக, ஒவ்வொரு பாடப்புத்தகமாக நன்றாகப் படித்து முடியுங்கள். முதலில் தமிழ் மொழிப்பாடத்திற்கு படிக்கிறீர்கள் என்றால், 6 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தை படித்துக் கொள்ளுங்கள். அதில், செய்யுள், உரைநடை, இலக்கணம் என அனைத்து பிரிவுகளையும் தொடர்ச்சியாக படியுங்கள். அடுத்ததாக 7, 8,9,10 வகுப்பு தமிழ் பாடப்புத்தகங்களை இதேபோல் படிக்க வேண்டும். முடிந்தவரை செய்யுள் தனியாக, உரைநடை தனியாக, இலக்கணம் தனியாக படிப்பதை தவிர்க்கலாம். ஏனெனில் நீங்கள் பாடப்புத்தகங்களை திருப்பி படிக்கும்போது, தனித்தனியாக படிக்க சிரமமாக இருக்கலாம். மேலும் அந்தந்த பாடங்களுக்கு உரிய இலக்கணப்பகுதிகளை அதோடு, சேர்த்து படித்தால் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்.
3. செய்யுள் பகுதிகள்:
செய்யுள் பகுதியை படிக்கும்போது, பாடல்களை ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள். பின்னர் பாடலின் அர்த்தத்தைப் படித்து தெளிவு பெற வேண்டும். கூடவே அந்த பாடலுக்கான இலக்கணப் பகுதியையும் சேர்த்து படித்துக் கொள்ளுங்கள். செய்யுள் படிக்கும்போது, நூற்குறிப்பு, நூலாசிரியர் குறிப்பு, நூலாசிரியர் எழுதிய பிற நூல்கள், காலம் போன்ற அனைத்து தகவல்களையும் படித்துக் கொள்வது அவசியம்
4. கணிதப் பாடங்கள்:
இதைத் தொடர்ந்து அடுத்ததாக கணித பாடங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தலைப்பின் கீழ் வரும் வினாக்களை ஒவ்வொரு நாளாக பயிற்சி செய்து வாருங்கள். கணித பகுதிக்கு ஷார்ட் கட் வைத்து படிப்பது நல்லது. ஆனால், வினாக்களை படிக்காமல், பயிற்சி செய்து பார்ப்பது அவசியம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
5. பொது அறிவு:
அடுத்ததாக பொது அறிவு பகுதியை பொறுத்தவரை, அறிவியல், வரலாறு, புவியியல், அரசியலமைப்பு உள்ளிட்ட பாடங்களுக்கு பாடப்புத்தகத்தை படிக்கும் போது, பெட்டிச் செய்தி, அடைப்புகுறிக்குள் உள்ள தகவல்கள், ஹைலைட் செய்யப்பட்ட தகவல்களை முக்கியமாக படிக்க வேண்டும். மிக முக்கியமாக பாடங்கள் முடிவில் உள்ள (புக் பேக் கொஸ்டின்) வினாக்களை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

6. புவியியல் பாடங்கள்:
புவியியல் பாடங்களைப் படிக்கும்போது இந்திய வரைபடத்துடன் இடங்களை பொருத்தி படித்துக் கொண்டால், உங்களுக்கு எப்போதும் மறக்காது என்பது நிச்சயம். அரசியலமைப்பில், பகுதிகள், அட்டவணைகள், ஆர்டிக்கிள், சட்டத்திருத்தம் ஆகியவற்றில் முக்கியமானவற்றை வரிசையாக படித்து வைத்துக் கொள்ளுங்கள். முன்னதாக ஆங்கிலேயர் கால சட்டங்கள், அரசியலமைப்பு உருவானவிதம் ஆகியவற்றை படித்து தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.
7. செய்தித்தாள்கள் படித்தல்...
இதற்கு அடுத்தபடியாக நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படித்தல் அவசியமாகும். செய்தித்தாள்களை படிக்கும்போது தேவையற்ற செய்திகளை படிக்காமல், சிலபஸூக்கு ஏற்றவாறு படித்தல் அவசியம்.
8. டி.வி. செய்திகள்:
இறுதியாக நடப்பு நிகழ்வுகளுக்கு நாள்தோறும் செய்தித்தாள்களை படிக்க வேண்டும். மேலும் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு செய்திகளை கண்டறிந்து படிக்க வேண்டும். மேலும் டி.வி. செய்திகளைப் பார்க்கலாம். வானொலி செய்திகளையும் கேட்கலாம். அதுமட்டுமல்லாமல் செய்திகளை அள்ளித் தரும் செல்போன் செயலிகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
9. சிறந்த திட்டம், அட்டவணை:
முதலில் பாடத்திட்டத்தை அதில் எது எங்கு படிக்க வேண்டும் என்பதை சார்ந்து அவர் அவருக்கான கால அட்டவணையைத் தயார் செய்து தேர்வுக்கு ஒரு மாதம் முன்பு முடிக்க முயற்சிக்கவும். அப்போது தான் ரிவிஷன் எனப்படும் மீண்டும் படிப்பது சாத்தியம் ஆகும்
தினமும் ஒரு வினாத்தாள் பயிற்சி செய்ய வேண்டும். இலவச ஆன்லைன் தேர்வுகள் பல tnpscக்கு என தற்போது உள்ளன.
தினசரி நாளிதழ் படிக்கும் பழக்கம் இருந்தாலும் நல்லது. டிஎன்பிஎஸ்சி பொது அறிவு விடைத்தாள் பார்க்கவும். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை கணித பகுதிக்கு ஒதுக்கவும். தினமும் கொஞ்சமாவது படிப்பதை வழக்கமாக கொள்ளவும். தேர்வு சமயம் மட்டும் படிப்பது நிச்சயம் உதவாது. தொடர்ந்து படிப்பது உடன் பயிற்சியும் செய்வது வெற்றியை எளிதாக்கும். தினமும் தூர்தர்ஷன் நியூஸ் அல்லது ஆல் இந்தியா ரேடியோ செய்திகளைக் கேட்கவும்.
10. இறுதியான டிப்ஸ்:
குரூப் 4 தேர்வின் பாடத்திட்டம் பள்ளி பாடப் புத்தகங்களில் பெரும்பாலும் உள்ளது. அதனால் பள்ளி பாடப்புத்தகங்களை நன்றாக படித்து கொள்ள வேண்டும். பள்ளிப் புத்தகங்களை முழுவதுமாகப் படித்து முயற்சி செய்தால் தேர்வுகளுக்கு நல்ல முறையில் தயாராகலாம். புத்தகத்தின் எந்த மூலையில் இருந்து கேட்டாலும் நாம் பதில் அளிக்க முடியும். இதன்மூலம் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று பதவி என்ற இலக்கை அடைய முடியும் என்று நிபுணர்கள் அடித்துச் சொல்கின்றனர்.


Click it and Unblock the Notifications












