தேர்வு பயம் என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவான உணர்வாக உள்ளது. தேர்வு காலங்களில் மாணவ, மாணவிகள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இது மாணவச் செல்வங்களின் கற்றல் செயல்பாட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேர்வு பயத்தால் மாணவச் செல்வங்கங்கள் மோசமான மதிப்பெண்கள்/கிரேடுகளுக்கு வழிவகுக்கும் என்று கல்வியாளர்கள் சொல்கின்றனர். தேர்வு பயத்தைப் போக்க கல்வியாளர்கள் சில எளிய டிப்ஸ்களைத் தருகின்றனர்.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 80% மாணவர்கள் தேர்வுக் கவலையால் பாதிக்கப்படுவதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது .தேர்வு பயத்துக்கு பல்வேறு காரணங்களால் இருக்கலாம் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். கணிதம் உள்ளிட்ட சில பாடங்கள் கடினமாக இருப்பதாகவும், அதனால் அந்தத் தேர்வை எழுதுவது கடினம் என்று மாணவச் செல்வங்கள் சிலர் கருதுகின்றனர். மேலும் தேர்வின்போது நல்ல மதிப்பெண்கள் பெறுவதில் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கலாம். அதனால்தான் தேர்வு பயம் வருகிறது என்றும் அவர்கள் சொல்லலாம். தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றால் பெற்றோர் திட்டுவார்களே என்ற பயம் காரணமாகக் கூட இருக்கலாம்.
தேர்வு பயத்தை வெல்வது என்பது முடியாத காரியம் அல்ல. புதிய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் மாணவர்கள் தேர்வுகளை நோக்கிய அணுகுமுறையை மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம், அவர்கள் பதட்டத்தைக் குறைக்கலாம், அவர்களின் மன ஆரோக்கியத்தைப் பேணலாம் மற்றும் வரவிருக்கும் சவாலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம். நேர்மறை ஆற்றலுடன் அவர்கள் தங்கள் படிப்பை சரியான திசையில் செய்ய முடியும். தேர்வு பயத்தை சமாளிக்க சரியான காரணங்களையும் அறிகுறிகளையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

தேர்வு பயமானது, மாணவர்களை பல வழிகளில் பாதிக்கும். இது படிக்கும் போது குழப்பத்தை ஏற்படுத்தலாம், படித்ததை மறந்துவிடலாம், மேலும் அவர்களின் கவனத்தில் குறுக்கிடவும் செய்யலாம். தேர்வு பயம் மாணவர்களின் செயல்திறனில் மோசமான விளைவை ஏற்படுத்தும். மேலும் பதட்டத்துடனும் அவர்களை வைத்திருக்கும்.
அதுமட்டுமல்லாமல், மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்படுவது இயல்பு. தேர்வில் மோசமாக மதிப்பெண் பெறுமோ என்ற பயம், தன்னம்பிக்கையின்மை, தயார்நிலையின்மை, பாடங்களைப் புரிந்துகொள்வதில் சிரமம், கவனம் செலுத்துவதில் உள்ள சிரமம் போன்ற சில காரணங்களால் மாணவர்கள் இந்த அச்சத்தை அனுபவிக்கின்றனர் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தேர்வு பயத்தைப் போக்கி தேர்வை பயமின்றி எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை நீங்கள் தொடங்கவேண்டும். தேர்வு பயம் உங்கள் சுயமரியாதையைக் குறைக்கும். எனவே பயத்தைப் போக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
தற்போதுள்ள மாணவர்களுக்குத் தேர்வுபயம் போனால்தான் அவர்கள் ஓரளவு நன்றாகத் தேர்வு எழுத முடியும். தேர்வை எப்படி எழுதினால் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்.
ஆண்டு இறுதித் தேர்வும் காலாண்டு, அரையாண்டு, பருவத் தேர்வுகள் போன்றதுதான். அதை எளிதில் எதிர்கொண்டு மதிப்பெண் பெறுவேன் என்று மனதை தைரியப்படுத்திக் கொள்ளவேண்டும்.
பயத்தைப் போக்குவதற்கு தேர்வுக்கு முன் செய்யக்கூடாதவை...
தேர்வுக்கு முதல்நாள் இரவு புதியதாக எதையும் படிப்பதோ, இரவு நீண்ட நேரம் படிப்பதோ கூடாது. தேர்வுக்காக எடுத்த குறிப்புகளை அன்று காலையில் மீண்டும் நினைவுப்படுத்திப் பார்ப்பதுதான் சரியான முறை என்பதை மாணவச் செல்வங்கள் உணரவேண்டும்.
இரவு நேரத்தில் நன்கு தூங்கி எழுந்து தேர்வுக்கு அமைதியான மனநிலையில் செல்வதுதான் அதிக மதிப்பெண் பெற உதவும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
தேர்வுக்கு சிறிது நேரத்துக்கு முன் உங்கள் நண்பர்கள், அந்தப் பாடங்களைப் படித்தாயா? இந்த சூத்திரத்தைப் படித்தாயா? இந்தச் செய்யுளைப் படித்தாயா ? என்று உங்கள் பயத்தை அதிகப்படுத்த முயற்சிக்கலாம். அதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம்.
நண்பர்களை அழைத்து தேர்வுக்கான தயாரிப்புகளைப் பற்றி விவாதிப்பது மிகவும் பொதுவானது. அவர்களின் தயாரிப்பு நிலை, முன்னேற்றம் மற்றும் ஆய்வுத் திட்டங்கள் பற்றி அறிந்துகொள்வது சில அழுத்தம் அல்லது பதட்டத்திற்கு வழிவகுக்கும். இதைச் சமாளிப்பதற்கான சிறந்த வழி, உங்கள் வகுப்பு, பள்ளித் தோழர்கள் அல்லது நண்பர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருப்பதுதான். ஒவ்வொருவருக்கும் அவரவர் கற்றல் வேகம் உள்ளதை என்பதை உணரவேண்டும். எனவே, உங்கள் நண்பரின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்காமல், உங்கள் மீதும் உங்கள் படிப்பின்மீதும் கவனம் செலுத்துவது நல்லது.
தேர்வு அறையில் வினாத்தாள் வாங்குவதற்கு முன் 3 நிமிஷங்கள் உங்கள் மனதை ப்ரீயாக இருக்குமாறு செய்து கொள்ளுங்கள். பதட்டம் வேண்டாம். இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக மூச்சை இழுத்துச் சிறிது சிறிதாக வெளியே விடுங்கள்.

வினாத்தாளை வாங்கியதும் பதட்டம் அடையக்கூடாது. நான் மிகவும் நன்றாகத் தேர்வு எழுதுவேன்.. முழு நம்பிக்கை இருக்கிறது என்று குறைந்தபட்சம் 5 முறையாவது உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். இதற்காக 2 நிமிஷங்கள் செலவழிக்கலாம். கேள்வித்தாளை வாங்கிய உடன் 2 அல்லது 3 நிமிஷங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு நிமிஷங்கள் ஒதுக்குவது எனத் திட்டமிடுங்கள்.
குறைவாக எழுத வேண்டிய கேள்விகளுக்கு அதிகமாக எழுதியும் அதிகமாக எழுத வேண்டியவற்றுக்கு நேரம் இன்மையால் குறைவாகவும் எழுத வேண்டாம். அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிப்பது முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தேர்வுகளில் சரியான மற்றும் நேர்மறை மற்றும் சரியான அணுகுமுறையைப் பெற முயற்சி செய்யுங்கள், இது நீங்கள் அமைதியாக இருக்க உதவும்.
உங்கள் பலவீனமான பாடங்கள் அல்லது பகுதிகளைக் கண்டறிந்து கவனம் செலுத்துவது அவசியம் என்றாலும் , மற்ற பாடங்களை முற்றிலும் புறக்கணிப்பது சமநிலையின்மை மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும். உங்கள் படிப்பு நேரத்தை அனைத்து பாடங்களுக்கும் சமமாக விநியோகிக்கவும், ஒவ்வொன்றிற்கும் போதுமான கவனம் செலுத்துங்கள். ஒரு பாடத்தில் அதிக நேரம் செலவழிப்பதைத் தவிர்க்கவும், அதே நேரத்தில் மற்றவர்களைப் புறக்கணிக்கவும், ஏனெனில் இது தேர்வின் போது அமைதியற்ற உணர்வுகளுக்கு பங்களிக்கும்.
முழுவதும் எழுதிய பிறகு கடைசியில் குறைந்தது 5 நிமிடங்களாவது எழுதியதைப் படித்துப் பார்க்க நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். விடைகளைப் பக்கம் பக்கமாக எழுதாமல் பாயிண்ட் பாயிண்ட்டாக சுருக்கமாக எழுதுதல் நல்லது. கையெழுத்து நன்றாக வருமாறு, பிறருக்கு புரியுமாறு எழுத வேண்டும்.
திட்டமிடாமல் கடைசி நேரத்தில் படிப்பது மற்றும் அவசரப்படுவது, டென்ஷனைத் தான் உருவாக்கும். எனவே இதை மாணவர்கள் செய்யக்கூடாது. மேலும் உங்கள் லட்சியங்களையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் எண்ணிப் பார்த்து, அதிக மதிப்பெண்கள் பெற உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். மதிப்பெண் பட்டியல் எதிர்காலப் படிப்புக்கு முக்கியம் என்று நினைத்து செயல்படுங்கள்.
தேர்வுக்கு கடைசி நாட்களில் ஒருநாள் முழுவதும் செய்ய வேண்டிய, படிக்க வேண்டிய வேலையை பட்டியலிட்டு படியுங்கள். அவசரமாக படிக்க வேண்டிய பாடங்களை அதிகாலையிலும், முக்கியமானதை மாலையிலும் படிக்கலாம். எழுத்து வேலைகளை நிதானமாக செய்துகொள்ளுங்கள்.
தேர்வு பயம் உங்கள் உடல் மற்றும் மனதை செயல் இழக்கச் செய்வதுடன், தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, அவநம்பிக்கை மற்றும் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி விடும். இதனால் தேர்வுகளில் உங்கள் மதிப்பெண் குறையலாம்.
படிப்பதை ஒத்தி போடாமல், எதைப்படித்தாலும் விரைவாகவும், சுறுசுறுப்பாகவும், மனிதல் நிற்கும்படியும் படியுங்கள். படிப்பதற்கு அதிகாலை நேரமே ஏற்றது. அதிகாலைப் பொழுதில் மனமும், உடலும் மிகவும் ஒன்றிணைந்து இருக்கும். சுறுசுறுப்பாகவும் படிக்க முடியும். இரவு முழுவதும் கண்விழித்துப் படிக்கக்கூடாது.
இரவில் அதிகபட்சம், 11:00 மணி வரை படிக்கலாம்; பின், ஐந்து மணி நேரம் நிம்மதியான தூக்கம். அதன்பின், அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து படிக்கும் போது, மனதில் பாடங்கள் அருமையாகப் பதியும்.
ஒரு பாடத்தை படிக்கும் போது, மொத்தமாக படிக்காமல், அதை பல பிரிவுகளாக பிரித்து, சிறு சிறு தலைப்புகளைச் சூட்டி, அதை குறிப்புகளாக தயாரித்து படிக்கலாம். இதனால் அந்தப் பாடங்கள் மனதில் எளிதில் நிற்கும். தேர்வு நேரத்தில் எளிதில் ஞாபகத்திற்கு வரும்.
தேர்வுக்குப் படிக்கும் போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும், ஐந்து நிமிடம் இடைவெளி கொடுக்கலாம். தொடர்ந்து படிப்பதால், மூளை எளிதில் சோர்வடைந்து விடும். திறந்த வெளி அல்லது ஜன்னலின் ஓரம் நின்று, நன்றாக மூச்சை இழுத்து, மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். காலாற நடந்த பின்போ, உங்களுக்கு பிடித்தமான இசையை கேட்ட பின்போ படிக்கலாம். ஆனால், மறுபடியும் படிப்பதை மறக்காமல் தொடர வேண்டும்.

படிக்கும் நேரத்தில் கீரைகள், பழங்கள், காய்கறிகள், கொண்டைக்கடலை, பேரீட்சை, பாதாம் பருப்பு, பசும் பால் மற்றும் தயிர் சாப்பிடலாம்
தேர்வு கூடத்தில் (எக்ஸாம் ஹால்) உண்டாகும் மன பதற்றம், கை, கால் வியர்வை, நடுக்கம், பய உணர்வு போன்றவைகளை தவிர்க்க வேண்டும். கையெழுத்து அழகாக இல்லாவிட்டாலும், தெளிவாக, புரியும்படி, வாசிக்கும்படி இருக்க வேண்டும். தேவையான இடங்களில், உதாரணங்களை மறக்காமல் எழுதுவது அவசியம் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தேர்வின்போது காலை உணவை மாணவர்கள் தவிர்க்காதீர்கள். தேர்வுக்குச் செல்வதற்கு முன், உங்களிடம் பேனாக்கள், பென்சில்கள் மற்றும் பிற பொருட்கள் உள்ளதா எனச் சரிபார்க்கவும். கடைசி நேர டென்ஷன் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உங்கள் தேர்வுக் கூடத்தை முன்கூட்டியே அடையுங்கள்.
நீங்கள் பதிலளிக்கத் தொடங்கும் முன் உங்கள் மனதை அமைதியாக வைத்து, கேள்விகளை கவனமாகப் படியுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிப்பதில் எப்போதும் நேரத்தை கடைபிடிக்கவும். விடைத்தாளை தேர்வு பொறுப்பாளரிடம் ஒப்படைப்பதற்கு முன் 10 நிமிடங்களை விடைத்தாளைப் படித்துப் பார்ப்பதற்கு
ஒதுக்குங்கள்.
சரியான திட்டமிடல் மற்றும் அணுகுமுறைகள், உத்தி மூலம் தேர்வு பயத்தை போக்கி எந்த தேர்விலும் வெற்றி பெறலாம். முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் படித்துப் பார்க்கலாம்.
மேலும் அவ்வப்போது, இசையைக் கேட்பதன் மூலமோ அல்லது நண்பர்களுடன் பேசுவதன் மூலமோ சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுதல் நல்லது.
நல்ல தூக்கத்தைப் பெற முயற்சி செய்யவேண்டும், மேலும் உங்களை ஆரோக்கியமாகவும் நன்றாகவும் வைத்திருக்க தினமும் சில உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள். இந்த பழக்கவழக்கங்கள் அனைத்தும் நேர்மறையான ஆய்வு அணுகுமுறையை வளர்க்க உதவும். பயம், பதட்டத்தைத் தவிர்க்கவேண்டும்.
தேர்வுத் தேதி நெருங்கி வருவதால் படிப்பதை தள்ளிப் போடுவது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் அதிகரிக்கும். உங்கள் படிக்கும் நேரங்களை தாமதப்படுத்துவதைத் தவிர்க்கவும். மேலும், உங்கள் படிப்புத் திட்டத்தை ஒழுக்கமான முறையில் கையாளவும். சீக்கிரம் படிக்கத் தொடங்குங்கள், உங்கள் படிப்பு அட்டவணையை பின்பற்றிப் படியுங்கள்.
மேற்கண்ட டிப்ஸ்களை பின்பற்றும் மாணவச் செல்வங்கள் எந்தவிதத் தேர்வையும் எந்தவித பயமும் இன்றி எதிர்கொண்டு வெற்றி காண முடியும் என்று கல்வியாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே...!!


Click it and Unblock the Notifications












