தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி )நடத்தும் விரைவில் குரூப் - 4 தேர்வுகளை நடத்தவுள்ளது. இந்தத் தேர்வில் வெற்றி பெற உதவும் 12 அம்ச வெற்றித் திட்டங்கள் குறித்து கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC) என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்து அனுப்புகிறது. ஆள்தேர்வுக்காக போட்டித் தேர்வுகளை (குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4, குரூப் 8 மற்றும் VAO) நடத்துவதற்கு பொறுப்பான மாநில தலைமை ஒழுங்குமுறை அமைப்பாக டிஎன்பிஎஸ்சி உள்ளது.
இந்நிலையில்தான் டிஎன்பிஎஸ்சி தற்போது குரூப் 4 தேர்வுக்கான தேதி விவரங்களை அறிவித்துள்ளது.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர் (விஏஒ), இளநிலை உதவியாளர், வனக் காப்பாளர், வன காவலர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
தேர்வர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக இன்று முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே பெறப்படுகின்றன. ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 28.02.2024, இரவு 11.59 மணி வரை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024 ஆகும்.
அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை உள்ளது. தேர்வை பொறுத்த அளவில், வரும் ஜூன் 9ம் தேதி நடைபெறும். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு, மதியம் 12.30 வரை நடைபெறும்.

இந்த குரூப்-4 தேர்வுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் குறிக்கோளுடன் படிக்கவேண்டும்.
போதுமான புத்தகங்கள், வினா வங்கி புத்தகங்கள், மாதிரித் தேர்வுகள், திட்டமிட்ட கால அட்டவணை, மீண்டும் மீண்டும் படித்தல் போன்றவை இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகளாகப் பார்க்கப்படுகிறது.
பாடத்திட்டங்கள்:
குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தை சரியாக தெரிந்து கொண்டு அதற்கேற்ப படிக்கத் தொடங்குங்கள். பாடத்திட்டத்தை தெரிந்து கொள்ளாமல் படித்துக் கொண்டிருந்தால், பாடத்திட்டத்தில் (சிலபஸ்) இல்லாத விஷயங்களை நீங்கள் கூடுதலாக படிக்க நேரிடும். இதனால் உங்களின் நேரவிரயத்தை தவிர்க்க முடியாது. எதைப் படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தால், நீங்கள் குரூப்4 தேர்வுக்குத் தயாராவதற்கு எளிமையாக இருக்கும்.
தேர்வுக்குத் திட்டமிடல்
சரியானப் பாடத்திட்டத்தை தெரிந்து கொண்ட நீங்கள் ஒவ்வொரு பாடத்திட்டத்துக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அதாவது சரியாக திட்டமிடல் வேண்டும். ஒரு வாரத்தில் உள்ள 7 நாட்களில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பாடம், அதை இத்தனை மணி நேரம் படிக்கவேண்டும் என திட்டமிடுதலாகும்.
அதற்கேற்ப நாள்தோறும் பயிற்சி எடுக்க வேண்டும். படிக்க வேண்டும், அதனை மீண்டும் மீண்டும் படித்தல் (ரிவிஷன்) வேண்டும்.தமிழ் பாடத்திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதில் இருக்கும் இலக்கணம், செய்யுள் ஆகியவற்றை பிரித்து மனப்பாடம் செய்ய வேண்டும். அதேபோல் சமூக அறிவியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களையும் படிக்க வேண்டும்
பயிற்சி எப்படி....
குரூப் 4 தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும்போதே நாள்தோறும் பயிற்சி எடுப்பது அவசியமாகும். அதிகமாக படிக்கும்போது மறப்பது இயல்பு என்பதால், அடிக்கடி படித்துப் பார்த்ததை மீண்டும் ரிவிஷன் செய்வது அவசியமாகும். தேர்வுக்கு குறைவான காலம் மட்டுமே இருக்கும் சூழலில் படிக்கும் பாடங்களில் கட்டாயம் மாதிரித் தேர்வு எழுதி உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
ஆலோசனை
தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு இருந்தால் கட்டாயம் அதை நீங்கள் செய்வது நல்லது. அவர்களிடம் இருந்து உங்களை நீங்கள் தயார் செய்து கொள்வதற்கு கட்டாயம் ஏதேனும் ஒரு தந்திரம், திட்டம் நமக்குக் கிடைக்கும்.
அவர்களுடன் உரையாடும்போது உங்களுக்கு புதிய திட்டங்கள் மற்றும் பாடத்திட்டம் பற்றிய தெளிவு, கேள்விகளை அணுகும்முறை உள்ளிட்டவைகளுக்கான ஆலோசனை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன்மூலம் தேர்வை நல்ல முறையில் அணுகும் வாய்ப்பை உங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும். இந்த டிப்ஸ்கள் பின்பற்றுவது அவசியமாகும்.

முந்தைய கேள்வித்தாள்கள்
நாம் எந்தப் போட்டித் தேர்வுக்குத் தயார் செய்தாலும் அதற்கான பாடத்திட்டம், முந்தைய ஆண்டு கேள்வித்தாள்கள், புத்தகங்களை படித்துப் பார்க்கவேண்டும். இவற்றில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வின் அறிவிப்பிலேயே பாடத்திட்டம் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நீங்கள் பதிவிறக்கம் செய்து அடிக்கடி படித்துப் பார்த்துக் கொள்ளலாம்.
இந்தத் தேர்வில் பெரும்பாலான கேள்விகள் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்படுவதால், பாடத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் தமிழ்நாடு பள்ளிப் பாடத்திட்டப் புத்தகங்களே முதன்மையான புத்தகங்களாகும்.
எந்த ஒரு போட்டித் தேர்வுக்கும், முந்தைய கேள்வித்தாள்களைப் போன்று வேறு யாரும் வழிகாட்ட முடியாது. 2014 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள், எந்தெந்தப் பாடப் பிரிவுகளிலிருந்து கேட்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து, இந்த ஆண்டு தேர்வுக்குத் தங்களின் தேர்வுத் தயாரிப்பு முறை நிர்ணயிக்கலாம்.
புத்தகங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்களே போதுமானது. பெரும்பாலான கேள்விகள் (95 % கேள்விகளுக்கு மேல்) பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்து தான் கேட்கப்படுகின்றன. எனவே, சந்தையில் கிடைக்கும் புத்தகங்களை அதிகம் படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். கடந்த ஆண்டு வினாத்தாள்களைக்கொண்ட வினா வங்கியைக்கொண்டு, உங்களது தயாரிப்பை அவ்வப்போது சரியான வழியில் உள்ளதா எனச் சோதித்துக்கொள்வது அவசியமாகும்.
இந்தத் தேர்வில் வெற்றி பெற உதவும் 12 அம்சத் திட்டங்கள் குறித்து கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளன. அவை கீழே தரப்பட்டுள்ளன.
1. மொழிப்பாடத்துக்கு முக்கியத்துவம்:
தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் / ஆங்கிலம் பாடத்திலிருந்து கேட்கப்படுவதால், உங்கள் தயாரிப்பில் பெரும்பாலான நேரத்தை மொழிக்குச் செலவிடுதல் சிறப்பான வழியாக இருக்கும்.
மாணவர்கள் மொழிப்பாடங்களை எளிமையாகக் கருதுகின்றனர். இதனால் அவற்றுக்காக அதிக சிரமம் எடுப்பதில்லை. ஆனால், மொழிப்பாடமே வெற்றியை நிர்ணயிக்கும் பகுதியாக உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
6 முதல் 10 வகுப்பு வரை உள்ள தமிழ்ப் புத்தகங்களை / ஆங்கிலப் புத்தகங்களை நன்கு படிக்கவேண்டும். வெற்றியாளர்கள், மொழிப்பாடத்தில் முழுமையான மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

2. பாடங்களை வரிசைப்படுத்தி பயில வேண்டும்:
ஏற்கெனவே பாடவாரியாக எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை நாம் புரிந்து வைத்திருக்கவ வேண்டும். அதிகப்படியான கேள்விகள் கேட்கப்படும் பாடம் உங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்க வேண்டும்.
3. சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்: பல்வேறு பாடங்களும், அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளும் உங்களுக்குத் தெரியும். ஒரு வெள்ளைத்தாளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பாடத்திலும் நீங்கள் எந்த அளவுக்கு அறிந்துள்ளீர்கள் என எழுதுங்கள். அதிக மதிப்பெண் தரும் முக்கியமான பாடத்தில் குறைவாகப் படித்திருந்தால், உடனடியாக அந்தப் பாடத்தைப் படியுங்கள். இவ்வாறு ஒவ்வொரு வாரமும் உங்களைப் பரிசோதனை செய்து, உங்கள் தயாரிப்பைச் சரியான வழியில் செலுத்துங்கள்.
4. திரும்பத் திரும்பப் படியுங்கள்: போட்டித்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி, படித்தால் மறந்துவிடுகிறது. அதற்கு என்ன செய்வது' என்பதுதான். மறந்தால் மட்டுமே அவன் மனிதன். இல்லையெனில், மெஷின். ஒரு முறை படித்தால் மறக்கும். ஐந்து முறை படித்தால், பத்து முறை படித்தால் நிச்சயம் மறக்காது.
5. படிப்பை, தேர்வோடு தொடருங்கள்: நீங்கள் ஒரு பாடத்தைப் படித்தால் அந்தப் பாடம்சார்ந்து முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்து, உங்களது தயாரிப்பைச் சோதித்துக்கொள்ளுங்கள். உங்கள் தயாரிப்பு, அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு தயாரிப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளுங்கள். தொடர்ச்சியான தயாரிப்பே வெற்றிக்கு வழிவகுக்கும்.
6. கணிதத்துக்கு முக்கியத்துவம்: பொதுஅறிவுப் பகுதியில் உள்ள கேள்விகளில் 25/100 கணிதப் பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. பெரும்பாலான மாணவர்கள் கணிதப் பகுதியைக் கடினமாகக் கருதுவதால், கணிதப் பகுதியில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் வெற்றிக்கு வழிவகுக்கும். பள்ளிப் புத்தகங்களும், பழைய கேள்வித்தாள்களுமே கணிதப் பாடத் தயாரிப்புக்கு அடிப்படை.
7. கால மேலாண்மை: இந்த மூன்று மாதம் உங்கள் வாழ்வை முழுமையாக மாற்றும் காலம். ஒவ்வொரு நாளும் வாரமும் எவ்வளவு மதிப்பெண்ணுக்குத் தயார்செய்துள்ளீர் என்பதைக் கணக்கிடுங்கள். கடினமாக உழையுங்கள். இந்த நாள்கள் உங்கள் வாழ்வில் மிக முக்கியமானவை.
8. நடப்பு நிகழ்வுகள்: பெரும்பாலான மாணவர்கள் மனதில் எழும் கேள்வி, நடப்பு நிகழ்வுகளை எவ்வாறு தயாரிப்பது, எந்த மாதத்திலிருந்து படிப்பது' என்பதுதான். TNPSC தேர்வில் பெரும்பாலான நடப்பு நிகழ்வுகள் சார்ந்த கேள்விகள் தேர்வுக்கு முந்திய மாதத்திலிருந்து அதிகபட்சம் ஒரு வருட காலத்துக்குப் படிக்க வேண்டும். அதாவது பிப்ரவரி 2018 நடைபெறும் தேர்வுக்கு ஜனவரி 2018 முதல் ஜனவரி 2017 வரை பின்சென்று படிக்க வேண்டும்.
தினமும் செய்தித்தாள்களையும், சந்தையில் காணப்படும் நடப்பு நிகழ்வு சார்ந்த தொகுப்புப் புத்தகங்களையும் வாங்கிப் படிக்கவும். நடப்பு நிகழ்வுகள் பெரும்பாலும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், முக்கிய தினங்கள், விளையாட்டுச் சார்ந்த கேள்விகள், பல்துறை சாதனைகள் இந்த ஓராண்டு பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. விகடன் பொதுஅறிவுப் புத்தகங்களைப் படியுங்கள். TNPSC தேர்வுகளுக்காக டாக்டர் சங்கர சரவணன் தொகுத்த பொதுத்தமிழ், பொதுஅறிவுப் புத்தகங்களைப் படிக்கலாம்.
9. நிறைய தேர்வு எழுதுங்கள்: TNPSC தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் இல்லை. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கலாம். எனினும், நிறைய மாதிரி தேர்வை நீங்கள் எழுதும்போது, தவறான விடையை நீக்கி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் திறனைப் பெறுவீர்கள். நான்கில் ஒரு விடையைத் தேர்ந்தெடுக்கும் வினாக்களுக்கு, சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட, தவறான விடையை நீக்கும் முறை (Elimination Method) மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க உதவும்.
10. தேர்வை எதிர்கொள்ளும் முறை: கேள்விகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம். எளிமையானவை, கடினமானவை, மிதமான கடினத்தன்மைகொண்டவை. எளிமையான வினாக்கள் பார்த்தவுடனேயே பதில் கிடைத்துவிடும். கடினமானவை என்பது நமக்குச் சரியாகத் தெரியாத பகுதி. இந்தக் கேள்விகளைக் கடைசியாக எதிர்கொள்வது நல்லது. மிதமான கேள்விகளில் ஓரிரு விடைகளை நாம் தவறு என நீக்கிவிட்டு மீதமுள்ள ஓரிரு விடைகளில் ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டும். அதிக மாதிரி தேர்வுகளில் நம்மைத் தயார்செய்யும்போது இந்தத் தடுமாற்றங்களைத் தவிர்க்கலாம்.
கேள்வியை முழுமையாகப் படித்து பதிலளிக்க வேண்டும். சில முக்கிய வார்த்தைகளைப் பென்சில்கொண்டு அடிக்கோடிட்டு, பிறகு விடையளிக்கலாம். நெகட்டிவ் மதிப்பெண் இல்லையென்பதால், அனைத்துக் கேள்விகளுக்கும் கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
11. கேள்விகள் கடினமாக இருக்கும் என எதிர்பாருங்கள்: ஆண்டுக்கு ஆண்டு, அரசுத் தேர்வுகளை எதிர்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், தேர்வும் கடினமாக்கப்படுகிறது. சில நேரங்களில் எதிர்பாராத பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படலாம். தேர்வு, கடினமாகவே இருக்கும் என எதிர்பாருங்கள். தேர்வு எளிமையாக அமையும். இல்லையெனில், மாறுதல்கள் கடினமான நிலையை உருவாக்கக்கூடும்.
12. வெற்றியைக் கைவசமாக்குங்கள்: உலகில் சாதிக்க இயலாத காரியங்கள் எதுவுமில்லை. சரியாகத் திட்டமிட்டுப் படித்தால் எந்தத் தேர்வும் எளிமையானதுதான். போட்டித்தேர்வுகளைப் பொறுத்தவரை தொடர்ச்சியான, நீடித்த (Consistent) தயாரிப்பே வெற்றிக்கு வழிவகுக்கும். தற்போது நவீன தகவல் தொழில்நுட்பத்தையும் உங்களது தேர்வுமுறைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த 12 அம்சத் திட்டங்களை சரியாகச் செயல்படுத்தும் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியும் என்று நிபுணர்களும், கல்வியாளர்களும் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். முறையான பயிற்சியும், திட்டமிட்ட அணுகுமுறையும் வெற்றிக்கு நிச்சயம் உறுதுணை புரியும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications












