தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் அமரவேண்டும் என்பதுதான் தற்போதுள்ள தமிழக இளைஞர், இளைஞிகளின் எண்ணமாக உள்ளது. ஆனால் இந்த வெற்றி எல்லோருக்கும் அமைகிறதா என்றால் இல்லை என்றுதான் பதில் வருகிறது. ஆனால் முழு முயற்சியுடன் இறங்கிப் படித்து எழுதினால் முதல் முறையிலேயே டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறலாம் என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC) என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்து அனுப்புகிறது. ஆள்தேர்வுக்காக போட்டித் தேர்வுகளை (குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4, குரூப் 8 மற்றும் VAO) நடத்துவதற்கு பொறுப்பான மாநில தலைமை ஒழுங்குமுறை அமைப்பாக டிஎன்பிஎஸ்சி உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் குரூப் I முதல் IV வரையிலான பதவிகளுக்கான பல்வேறு ஆட்சேர்ப்புத் தேர்வுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன -
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு - I (குரூப் 1 சேவைகள்)
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு - II (குரூப்-II மற்றும் குரூப்-II A சேவைகள்)
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-III (குரூப்-III சேவைகள்)
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-IV (குரூப்-IV சேவைகள் & VAO)
ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்வு
TNPSC உதவி பொறியாளர் தேர்வு
TNPSC உதவி அமைப்பு பொறியாளர் தேர்வு
TNPSC மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு
ஒருங்கிணைந்த நூலகம் மற்றும் தகவல் சேவைகள் தேர்வு
ஒருங்கிணைந்த புவியியல் சேவை தேர்வு
ஒருங்கிணைந்த புள்ளியியல் சேவை தேர்வு ஆகியவற்றை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட 19 போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஓராண்டில் என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்பன உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணை கடந்த மாதம் வெளியானது. தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டது.
இதில், குரூப் 1, குரூப்-2, குரூப்-4 உள்பட 19 போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. முதலில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்படுகிறது. இதற்கான போட்டித்தேர்வு ஜுன் மாதம் நடைபெற உள்ளது. காலியிடங்கள் எத்தனை என்ற விவரம் கொடுக்கப்படவில்லை.
வன காப்பாளர் தேர்வுக்கான (1,264 காலியிடங்கள்) அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வு ஜுன் மாதம் நடத்தப்பட உள்ளது. குரூப்-1 தேர்வுக்கான (65 காலியிடம்) அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு ஜூலை மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெறுகிறது. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான (1,294 காலியிடம்) அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது. அதற்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டவணையின்படி எந்த தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்கள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ளலாம்.
முதல் முயற்சியில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான முக்கிய அம்சங்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்....
கீழ்கண்ட அம்சங்களைப் பின்பற்றும் மாணவ, மாணவிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறலாம் என்று அடித்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.
அம்சம் 1: பாடத்திட்டம்
முதல் முயற்சியிலேயே டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றுதான் இளைஞர்கள், இளைஞிகள் விரும்புகின்றனர். இப்படி முதல் முறையில் வெற்றி பெற வேண்டும் என்றால் டிஎன்பிசிஎஸ் தேர்வுக்குரிய பாடத்திட்டங்களை நன்றாக உள்வாங்கிப் படிக்க வேண்டும். மேலோட்டமாக நுனிப்புல் மேய்வது என்பது இந்தத் தேர்வுகளுக்கு ஒத்துவராது.
அனைத்து பாடங்களிலிருந்தும் ஒவ்வொரு தலைப்பையும் மிக விரிவாகத் தயாரிப்பதன் மூலம் மிக முக்கியத்துவத்துடன் முழுமையாக பகுப்பாய்வு செய்து விடைகளை மனதில் பதிய வைக்க வேண்டும். ஏனென்றால் பாடங்களில் தலைப்பின் எந்த மூலையிலிருந்தும் கேள்விகளை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குழுவினர் தயாரித்து இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அம்சம் 2: நாட்டு நடப்பு நிகழ்வுகள்
டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வு எழுதும் தேர்வர்கள், தேர்வுக்குத் தயாராவதில்நாட்டு நடப்பு நிகழ்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு ஆர்வலரும் தேசிய, மாநில செய்தித்தாள் மற்றும் மாத, வார இதழ்களை தவறாமல் படிப்பது அவசியமாகும். இதனால் உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகள், செய்திகள், நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ளலாம்.
நாட்டு நடப்பு விவகாரங்கள், ஜிகே மற்றும் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்த, டிவி அல்லது வானொலி செய்திகளையும் நீங்கள் கேட்டு நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
நாட்டுநடப்பு குறித்த அடிப்படை அறிவு, பொது அறிவு, மொழி அறிவு, திறனறிதல் ஆகியவையே தேர்வுக்கான அடிப்படை. அறிவியல் மற்றும் சமூக அறிவியலின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் பாட நூல்களை படிக்கலாம். தீவிரமாக தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டுமென்றால் தேர்வு பாடத்திட்டத்தை முழுமையாக அலச வேண்டும். அதற்கு ஆழமான அறிவுடன் எழுதப்பட்ட புத்தகங்களை விரிவாக படிக்க வேண்டும்.
அம்சம் 3: பிடித்த பாடங்கள்
பிடித்த பாடங்கள், தேவையான பாடங்களை அடிக்கடி படித்து விடுவது நல்லது.தேர்வுக்கான பாடங்களை நீங்கள் புத்திசாலித்தனமாக தேர்வு செய்து படிக்க வேண்டும்.மேலும், நீங்கள் ஏற்கனவே படித்ததை மீண்டும் படித்து பயிற்சி செய்யலாம். அதுமட்டுமல்லாமல் அல்லது நீங்கள் படிப்பதிலிருந்து குறிப்பு எழுதி வைத்துக் கொள்ளலாம்.
அம்சம் 4: கேள்வி பகுப்பாய்வு
கேள்வி பகுப்பாய்வு பகுதிக்குச் செல்ல, தேர்வுக்கு தயாராகும் போது அனைத்து கேள்விகளையும் குறிப்பிட்ட நேரத்தில் பகுப்பாய்வு செய்ய வேண்டிய நேர மேலாண்மை நுட்பத்தை கற்றுக்கொள்ளவேண்டும். இந்தப் பாடக் கேள்விக்கு இவ்வளவு நேரம் என்பதை மனதில் திட்டமிட்டு ஒதுக்கி அதைச் செயல்படுத்தவேண்டும்.
அம்சம் 5: நேர மேலாண்மை
முதல் முயற்சியிலேயே டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என்று திட்டமிடும்போது நேர மேலாண்மை என்பது மிகவும் முக்கியமான ஒன்றான அம்சமாக பார்க்கப்படுகிறது.
அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய கால அட்டவணையை (டைம் டேபிள்) தயார் செய்யவேண்டும். மேலும், ஒவ்வொரு தேர்வரின் பாடப்பகுதிகள் வேறுபடுவதால், தயாரிப்பின் நேர அட்டவணை குறித்து யாருடனும் விவாதிக்க வேண்டாம்.
அம்சம் 6: குழு விவாதம்
ஒரு தேர்வரானவர், பாடத்திட்டத்தில் இருந்து பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய குழு விவாதத்தை கருத்தில் கொண்டு நண்பர்களுடன் அதுகுறித்து கலந்துரையாடுவது அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. கலந்துரையாடல்களின் பகிர்வு விண்ணப்பதாரர்கள் அதிக அறிவைத் தக்கவைத்துக் கொள்ள உதவும் என்பதை மறந்துவிடவேண்டாம். மேலும் தேர்வு நேரத்தில் அதை எளிதாக மீட்டெடுத்து அதிலிருந்து பதில் அளிக்கவும் முடியும்.

அம்சம் 7: முந்தைய தேர்வு வினாத்தாள்கள்
ஒவ்வொரு ஆர்வலரும் முந்தைய ஆண்டுகளின் வெளியான வினாத்தாள்களை படித்துப் பார்த்து அதில் பயிற்சி செய்வது அவசியமாகும்.
ஒன்று அல்லது இரண்டு வினாத்தாள்களை மட்டும் நம்பாமல் அதிக அளவிலான வினாத்தாள்களுக்கான பதில்களைக் கண்டறியவேண்டும். முதல் முயற்சியில் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்று என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
அம்சம் 8: பயிற்சி மையம்
மேலும், தேர்வர்கள் இதுபோன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி மையங்களை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் பயிற்சி மையத்தால் சிறந்த பயிற்சி, வினாத்தாள் தயாரிப்பு, பழைய வினாத்தாள்-விடைத்தாள்கள், வழிகாட்டுதல் போன்றவற்றை செய்கின்றனர். மேலும் தேர்வர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்க உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை தருகின்றனர்.
அம்சம் 9: தவறாமல் பயிற்சி செய்யுங்கள்
முதன்மை மற்றும்பிரதான (ப்ரிலிம்ஸ் மற்றும் மெயின்) ஆகிய 2 தேர்வுகளுக்கும் மாதிரித் தேர்வுகள் (மாக் டெஸ்ட்) தவறாமல் எடுக்க முயற்சிக்கவும். ஒரே வினாத்தாளில் இருந்து ஒரு முறை மட்டுமே பயிற்சி செய்ய வேண்டாம். அந்த வினாத்தாளை குறைந்தது 2முறையாவது பயிற்சி செய்யுங்கள்.
இதன் மூலம் முந்தைய மதிப்பெண்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்த்து, டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வில் சிறப்பாகச் செயல்பட உங்கள் பலவீனமான பிரிவுகளை மேம்படுத்தத் தொடங்கலாம்.
அம்சம் 10: உணவு, தூக்கம்
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கும் போது தேர்வர்களுக்கு நல்ல உணவு, ஆழ்ந்த தூக்கம் அவசியம். தேர்வுக்கு ஆயத்தம் செய்யும் போது நல்ல உணவு, தூக்கம் உங்கள் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.மேலும், சுவாசப் பயிற்சிகளுடன் யோகா செய்தல் நல்லது. இது உங்கள் மனதைப் புதுப்பித்து, படிப்பில் கவனம் செலுத்த உதவும். மேலும் படித்த பாடங்களை நினைவில் நீண்ட நாள் வைக்கவும் உதவும்.
இந்த 10 அம்சங்களை நீங்கள் பின்பற்றும்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நீங்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறலாம் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். ஒரு தேர்வரானவர் முழு கவனத்துடன் படித்து, அதைச் செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்...!


Click it and Unblock the Notifications












