தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்று அழைக்கப்படும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைசி நாள் நெருங்கி வருவதால் (பிப்ரவரி 28) இந்தத் தேர்வுக்கு மறக்காமல் தேர்வர்கள் விண்ணப்பித்து வெற்றி பெறவேண்டும் என்று கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும்.
இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1929-ல் சென்னை மாகாண சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு இது செயல்பட்டு வருகிறது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission ஆகும். மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957-ல் இது மதராஸ் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்" என்று மாறிவிட்டது.
தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தேர்வாணையம் ஒரு தலைவர், மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது. இவர்களின் பணிவிதிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒழுங்குமுறை சட்டம்,1954-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன.

தேர்வாணையம் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன என்பதன் விவரங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 320-இல் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய அளவில் மத்திய அரசுப் பணியாளர் பொதுப் தேர்வாணையம் செயல்படுவது போல் தமிழக அளவில் இது செயல்படுகிறது. அரசு அலுவலகங்களில் உதவியாளர் முதல் வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் அல்லது இது போன்ற முதன்மைப் பணிகளுக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யும் பணிகளைச் செய்கிறது.
தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் உள்ள அனைத்து வகையான பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி.) தேர்வுகளை சீரிய முறையில் நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. இதன்படி ஆண்டு தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளின் செயலாளர்களிடம் இருந்து காலிப்பணியிட விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன, அதற்கேற்றபடி ஆண்டு அட்டவணை வெளியிட்டு, தேர்வுகள் நடத்தி ஆட்கள் பணியிடங்களில் நிரப்ப படுவார்கள்
அந்த வகையில் 2023-24-ம் ஆண்டில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்களை பட்டியலிட வேண்டும் என சமீபத்தில் நடந்த துறைசார்ந்த செயலாளர்கள் கூட்டத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பாக முன்வைக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் அனைத்து துறைசார்ந்த செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் , அனைத்து அரசு துறை செயலாளர்களும் நேரடி ஆட்சேர்ப்பின் கீழ் உள்ள பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் விவரங்களை அனுப்பும் செயல் முறையை விரைவுபடுத்த வேண்டும். மேலும் 2023-24-ம் ஆண்டு வரையில் குரூப்-2, 2ஏ, 4 ஆகிய பணியிடங்களுக்கான காலியிடங்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவரங்களை கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து. தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு பணியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசில் தற்போது காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்காகவே தற்போது 'குரூப் - 4' தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ளது.
குரூப்-4 தேர்வில் உள்ள பணியிடங்கள் என்ன?
தற்போது நடைபெறவுள்ள குரூப்-4 தேர்வில் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், வனக்காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்குத்தான் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் - 4 தேர்வுகளை அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வின் மூலம் மொத்தமாக 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில், 108 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களும், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்களும், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வின் மூலமாக 6244 காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டு இருக்கிறது.
குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி வெளியிடப்பட்டது. பிப்ரவரி 28-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களில் மாற்றங்கள், திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் மார்ச்4-ம் தேதி முதல் ஆறாம் தேதிக்குள் அந்தத் திருத்தங்களைச் செய்ய நமக்கு வாய்ப்பளிக்கப்படும். எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 9-ம் தேதி காலை ஒன்பதரை மணி முதல் நண்பகல் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பாக, இந்த இணையதளத்தில் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.
அதாவது தேர்வர்கள் தங்களது சொந்த விவரங்களை அதில் பதிவு செய்யவேண்டும். பெயர், தந்தை பெயர், பிறந்ததேதி, கல்விச் சான்றிதழ் விவரங்கள், எந்தப் பிரிவைச் சேர்ந்தவர், திருமணமானவரா, ஆதார் விவரங்கள் போன்றவற்றை பிழையில்லாமல் பதிவு செய்யவேண்டும்.
மேலும், தேர்வர்கள் இதனை ஒருமுறை செய்தால் போதுமானது. தேர்வர்கள் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்த பிறகே, விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய முடியும் என்பதால் இதை அவசியம் செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் நேரடியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்குச் செல்லலாம்.

எப்படி விண்ணப்பிக்கலாம்....
TNPSC குரூப் 4 ஆட்சேர்ப்பு 2024 விண்ணப்பத்தை TNPSC இணையதளம் வழியாக ஆன்லைனில் தேர்வர்கள் சமர்ப்பிக்க வேண்டும். TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது:
படி 1: TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in க்குச் செல்லவும்.
படி 2: தேர்வுக்கு குரூப் 4 ஐ தேர்வு செய்யவும்.
படி 3: உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தேவையான தகவல்களை வழங்குவதன் மூலம் தேர்வுக்கு பதிவு செய்யவும்.
படி 4: பதிவுசெய்த பிறகு, தேவையான அனைத்து தகவல்களுடன் பொருத்தமான பதவிக்கான விண்ணப்பப் படிவத்தை சரியாகப் பூர்த்தி செய்யவும்.
படி 5: தேவையான ஆவணங்கள், உங்கள் புகைப்படம் மற்றும் உங்கள் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்
படி 6: கட்டண முறைக்குச் செல்வதற்கு முன் உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்யவும்.
படி 7: விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த நீங்கள் தகுதி பெற்றிருந்தால், நீங்கள் ஆன்லைன் பேமெண்ட் கேட்வேக்கு அனுப்பப்படுவீர்கள்.
படி 8: பணம் செலுத்திய பிறகு விண்ணப்பதாரருக்கு அவர்களின் விண்ணப்ப எண் மற்றும் பதிவு எண் வழங்கப்படும்.
படி 9: உங்கள் பதிவுகளுக்கான விண்ணப்பத்தின் நகலை அச்சிடவும்.
கவனிக்கவேண்டியது என்ன...
தேர்வர்கள் ஒரு முறை பதிவின் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
TNPSC விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி தளத்தில் தங்களுடைய தகவல்களை முதல் முறையாகப் பதிவுசெய்யும் போது, மூன்று மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட தங்கள் புகைப்படத்தை ஸ்கேன் செய்து தயாராக வைத்திருத்தல் அவசியமாகும். இதில் பதிவு செய்வது, எந்தப் பதவிக்கும் விண்ணப்பிப்பது ஆகாது என்பதையும் மனதில் வைத்திருக்க வேண்டும். மேலும் மின்னஞ்சல் (இமெயில்) முகவரியும் மொபைல் எண்ணும் கண்டிப்பாக பதிவு செய்வதற்குத் தேவைப்படும்.
தங்கள் வசம் எந்த மின்னஞ்சல் முகவரியும் இல்லாதவர்கள், புதிதாக ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
ஆதார் எண்ணையும் பதிவுசெய்ய வேண்டும்.
கடைசி நாள் நெருங்குகிறது
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதி கடைசி நாளாகும். எனவே, இந்தத் தேர்வுக்கு கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்தத் தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்
டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் விவரம் வருமாறு:
1. ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்) ஆகும். ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.
2. தேர்வுக் கட்டணம் ரூ.100/- , இது TNPSC குரூப் 4 தேர்வுக்கு மட்டுமே. மேலும், ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசித் தேதி அல்லது அதற்கு முன் நெட் பேங்கிங் / கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு மூலம் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தப்படும்.
3. TNPSC குரூப் 4 தேர்வுக் கட்டணத்திலிருந்து பட்டியல் சாதியினர்/ பட்டியலிடப்பட்ட சாதியினர் (அருந்ததியர்கள்)/ பட்டியல் பழங்குடியினர்/ பெஞ்ச்மார்க் குறைபாடுள்ள நபர்கள்/ ஆதரவற்ற விதவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
4. பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ அடையாளப்படுத்தப்பட்ட சமூகங்கள்/ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் தவிர)/ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) 3 இலவச வாய்ப்புகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 2 இலவச வாய்ப்புகள் உள்ளன.
எனவே, தேர்வர்கள் உடனடியாக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்து பயன் பெறவேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் விண்ணப்பித்து விட்டு தேர்வுக்குத் தயாராக வேண்டும் என கல்வியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஹால் டிக்கெட் எனப்படும் அனுமதி அட்டை
தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து அனுமதி அட்டை எனப்படும் ஹால்டிக்கெட்டை கமிஷன் வெளியிடுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களின் நுழைவுச்சீட்டை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும், இல்லையெனில் அவர்கள் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். TNPSC குரூப் 4 க்கான விண்ணப்பப் படிவத்தை வெற்றிகரமாகச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டு/ ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது . முந்தைய நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அடுத்த தேர்வுகளுக்கான அனுமதி அட்டை வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












