மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புக்கும், இத்தொகுப்பில் அடுத்து வரும் சில பதிவுகளும் தொடர்பின்றி இருப்பது போல உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், ஏதேனும் ஓர் காரணத்திற்காக நீங்கள் தவறவிட்ட ஒன்று, முயற்சியை கைவிட்டதால் இழந்த உங்களது லட்சியம், அதேசமயம் தொடர் போராட்டத்திற்கு பிறகு பலருக்குக் கிடைத்த வெற்றி என ஒவ்வொன்றும் இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது.
பொதுவாகவே இந்தக் கேள்வி தற்போது பள்ளிப் படிப்பை முக்கப் போகும் மாணவர்களுக்கு ஏற்கனவே எழுந்திருக்கும். எப்படியோ, அல்லது திட்டமிட்டபடியே ஒரு வழியாக 12-வது முடிக்கப் போகிறோம். அடுத்து கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி பயில வேண்டும். ஆனால், என்ன படிப்பது, நமக்கு ஏற்ற துறை என்ன ? என அன்றாடம் நமக்குள்ளேயே இதுபோன்ற பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்போம்.

எந்தக் கல்லூரி ?
ஒவ்வொரு துறைக்கும், அல்லது ஒட்டுமொத்தமாகவே ஒரு கல்லூரி சிறந்த கல்விக்காக புகழ் பெற்றிருக்கும். அவற்றில் நமக்கு எந்த உயர் கல்வி பொருத்தமானது? இதை மாணவர்கள் சிந்திக்கிறார்களோ இல்லையோ..! பெற்றோர்கள் ஆல்ரெடி கணக்கு போட ஆரம்பித்திருப்பர். எப்படியேனும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பானது எதிர்காலத்தை மனத்தில் வைத்து வேலைவாய்ப்பிற்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். நீங்கள் இதுபற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் நம்மை நாமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
அத்தகைய கேள்விகளும், உங்களுடைய அடுத்தகட்ட வாழ்வினை செழிமையாக்கும் துறைகள் குறித்தும் இங்கே ஆலோசிக்கப்பட்டுள்ளது. அறிந்துகொள்ளுங்கள்.

பெற்றோருக்காகவா இந்த படிப்பு ?
உங்கள் பெற்றோர் என்ன காரணங்களுக்காக ஒரு படிப்பை உங்களிடம் பரிந்துரைக்கிறார்கள் என முதலில் அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் சொல்லும் காரணங்கள் உங்களுக்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தால் அல்லது அந்த படிப்பு உங்களுக்கு ஏற்றதல்ல என்று நீங்கள் நினைத்தால் அதற்குரிய காரணங்களை உங்கள் பெற்றோருக்கு பொறுமையாக விளக்குங்கள்.

இப்பவிட்டா அவ்வளவுதான்...!
மாணவர்களாக இன்று நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு, உங்கள் வேலைவாய்ப்பின் திசையை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. வாழ்நாள் முழுதும் நீங்கள் அதனுடன் பயணிக்க வேண்டும். எனவே பெற்றோர் சொன்னார்கள் என்பதற்காக விருப்பம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளாமல், அவர்கள் தேர்ந்தெடுத்ததில் உள்ள பின்புலங்களை கேட்டு அறியுங்கள். உங்கள் பெற்றோர் உங்கள் எதிர்காலத்தை பற்றி உங்களைவிட அதிகம் அக்கறை உள்ளவர்கள் என்பதையும், உங்களுக்கு தேவையான பக்குவம் வரும் வரை உங்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு உடையவர்கள் என்பதையும் உணரவும்.

பெற்றோர்கள் கவனத்திற்கு..!
உங்களது பிள்ளைகள் உங்களுடைய குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கும் ஒரு சிறப்புப் பரிசாகத் திகழ்கிறவர்கள். அவர்கள் என்னவாகப் போகிறார்கள் என்று அறிந்து வழிகாட்டுங்கள். அவர்கள் எதில் ஆர்வம் செலுத்துகிறார்களோ, எதைச் சிறப்புத் தகுதியாக வளர்த்துக் கொள்கிறார்களோ அதை மட்டுமே அவர்களால் சாதிக்க முடியும்.

பிடித்ததை படியுங்கள்..!
ஒரு சிறுவனுக்கு கணிதத்தில் ஆர்வம் இல்லாமல் அக்கவுண்டன்சி படிக்க விரும்பினால் அவரை அதில் என்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை அறிந்து அதில் சேர்க்க வேண்டும். நீ என்ஜினீயர் ஆகவேண்டும் என வற்புறுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், அவர் உங்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக படிப்பார், தன்னுடைய எதிர்காலத்திற்காகவும், லட்சியத்திற்காகவும் அல்ல!

உறவினர்கள் அல்லது நண்பர்களுக்காக தேர்ந்தெடுத்துள்ளீர்களா ?
ஆம், இது காலம் காலமாக தொடரும் விசயம் தான். 12-வது தேர்வு முடிவு வெளியான அன்று உங்களது கண்ணில் தென்படும், அழைபேசியில் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு உறவினருமே தேர்ச்சிக்கு வாழ்த்து சொல்கிறார்களோ இல்லையோ... அடுத்து என்ன படிக்கப் போற ? அது வேணாம், இதப்படி-ன்னு டார்ச்சராகத்தான் இருக்கும். ஆனால், அதை காதிலேயே வாங்காதீர்கள். குறிப்பாக, உங்களது நண்பன் ஒரு படிப்பை தேர்வு செய்துள்ளான் என்பதற்காகவும் நீங்கள் பின்னாலேயே செல்ல வேண்டும் என அவசியம் இல்லை.

எதில் அதிக சம்பளம் ?
ஒரு படிப்பைத் தேர்ந்தெடுக்க சம்பளம் மட்டுமே சரியான அளவுகோல் இல்லை. நம்முடைய சந்தை என்பது சுழற்சிபோல மாறி மாறி வரும். ஒருகாலத்தில் வங்கியில் பணிபுரிவது மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. அதன்பிறகு மருத்துவர்கள், இப்போது ஐடி, தற்போது தகவல் தொழில்நுட்பம் கொஞ்சம் தொய்வுடன் காணப்படுகிறது. ஆகவே, நீங்கள் இப்போது விரும்பித் தேர்ந்தெடுக்கும் படிப்பு முடியும்போது அல்லது அதன்பிறகு இதேமாதிரி மதிப்பு இருக்கும் என்பது நிச்சயமில்லை. அது உங்கள் பணியும், வாழ்க்கையைப் பாதிக்குமா என்று நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள்.

ஐடி-க்கு இணையான இதர படிப்புகள்!
ஒவ்வொரு துறையிலும் அதிகச் சம்பளம் பெறும் வேலைகள், குறைந்த சம்பளம் பெறும் வேலைகள் உள்ளன. நீங்கள் எவ்வளவு உயரம் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களது ஊதிய விகிதமும் மாறும். இன்றைக்கு C.A., Animation, Bio Technology போன்ற பிற பல துறைகளும் ஐ.டி.க்கு இணையாக அதிகச் சம்பளம் தரக்கூடியவையாக இருக்கின்றன. ஆரம்பத்தில் நீங்கள் சம்பளத்திற்காக உள்ளே நுழையும்போது நன்றாக இருக்கலாம். ஆனால் நீங்கள் வளர வளர அந்த உற்சாகம் நின்றுவிடும்.

பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற பாடம்..!
தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவது அவசியமும், கட்டாயமும் கூட, ஆனால் அதை வைத்து மட்டுமே உங்கள் எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக கணிதத்தில் அதிக மதிப்பெண் எடுப்பதால் B.Sc. Maths சேரலாம் என்று முடிவெடுப்பதைவிட, B.Sc, முடித்து மேற்கொண்டு என்ன படிக்கப் போகிறீர்கள்? என்ன வேலைவாய்ப்பு சாத்தியம் இருக்கிறது? அது உங்களுக்கு விருப்பமானதா? போன்ற பலவற்றை ஆராய வேண்டும்.

செலவு அதிகமுங்க!
உங்கள் குடும்ப நிலையை உணரும் பக்குவம் உங்களிடம் இருந்தால் நல்லதுதான். இப்போதெல்லாம் கல்விக் கடன் மிகவும் சகஜமாகிவிட்டது. ஆகவே உங்கள் பெற்றோரால் செலவழிக்க முடியாது என்று எண்ணி ஒரு குறிப்பிட்ட படிப்பைத் தவறவிடாதீர்கள். எதையும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசியுங்கள். ஆனால் ஒருவேளை அந்தத் தொகை கல்விக் கடனாலும் பெறமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்குமானால் அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது பற்றி நீங்கள் நன்றாக யோசித்துக்கொள்ள வேண்டும்.

சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாத பலர் மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஓனர்!
ஒரு காலத்தில் சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாத பலர் மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகளின் உரிமையாளர்களாக உயர்ந்திருக்கிறார்கள். ஆகவே உங்கள் திறமைக்கு வானமே எல்லை. ஒருவேளை நீங்கள் விரும்பும் விசயம் இப்போது, உடனடியாகக் கிடைக்காவிட்டாலும் அதோடு உலகம் முடிந்துவிடாது. உங்கள் இலக்கை அடைய வேறு வழிகளை அணுகுங்கள். அது நிச்சயம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.

தேர்ந்தெடுத்துள்ள படிப்பு குறித்து முழுமையாகத் தெரியுமா ?
நீங்கள் தேர்வுசெய்துள்ள படிப்பு குறித்து முழுமையாக உங்களுக்குத் தெரியுமா ? இந்தப் படிப்புக்குத் தேவையான செலவுகள், கல்விக்கடன், உதவித்தொகை போன்றவற்றைப்பற்றித் தெரிந்து கொண்டீர்களா? உங்களுடைய பின்னணிக்கு இது எந்த அளவு பொருந்தும் என்று யோசித்துவிட்டீர்களா? இதற்கான படிப்புச் செலவுகளைச் சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு சரியான பதிலை தெடுங்கள். அதுவே உங்களை அடுக்க வெற்றிப் பாதையை நோக்கி நகர்த்தும்.