தீர்த்தகிரி, கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள் போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, ஒட்டுமொத்த நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வை தியாகம் செய்த வீரர்கள்.

தீர்த்தகிரி கவுண்டர், தீர்த்தகிரி சர்க்கரை என்று அழைக்கப்படும் தீரன் சின்னமலை, வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரையில் எதிரிகளுக்கு அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீரன் சின்னமலையின் பங்கு என்வென்று காணலாம் வாங்க.

ஆங்கிலேயரை அதிரச் செய்த தீரன் சின்னமலை
சிலம்பம், மல்யுத்தம், வாள்வீச்சு உள்ளிட்ட அனைத்து வீர விளையாட்டுக்களிலும் தனிச் சிறப்பை பெற்றிருந்தவர் தீரன் சின்னமலை. அவரது சொந்த ஊர் மேலப்பாளையம். அவரது வீரஞ்செரிந்த நிகழ்வுகள் அவர் வசித்த பகுதியையும் தாண்டி ஈரோடு, காங்கேயம், சென்னிமலை, சங்ககிரி என கொங்கு மண்டலத்தில் ஒலிக்கத் தொடங்கியது. ஒருகட்டத்தில் இந்தியாவையே ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்களை அதிரச் செய்தது.

கொங்கு மண்டலம்
தீரன் சின்னமலையில் இயற்பெயர் தீர்த்தகிரி. கொங்கு மண்டலம் முழுவதும் மைசூர் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தில் மைசூர் அரசால், மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப்பணம் முழுவதும் சங்ககிரி வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, தீர்த்தகிரி அப்பணத்தை பறித்து ஏழை மக்களுக்கு கொடுத்தாராம். வரிப்பணத்தைக் கொண்டு சென்ற தண்டல்காரனிடம், சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை வரிப் பணத்தை பறித்ததாகச் சொல், எனக் கூறியதாக வரலாற்றுப் பதிவு உள்ளது. அன்றிலிருந்து தான் தீர்த்தகிரி சின்னமலை என அழைக்கப்பட்டதாக தெரிகிறது.

திப்புவுடன் கைகோர்த்த தீரன்
1782-ல் மைசூரை ஆண்டு வந்த ஹைதர் அலி மறைவுக்குப் பிறவு அவரது மகன் திப்பு சுல்தான் அரசராக பதவியேற்றார். அவரும் தொடர்ந்து ஆங்கிலேயர்களுடன் யுத்தத்திலும் ஈடுபட்டு வந்தார். அப்போது திப்புவின் நன்மதிப்பை பெற்றிருந்த வீரர் தீரன் சின்னமலை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஒடுக்க திப்பு படையினருடன் கைகோத்தார்.

கொங்கு மண்டலத்தில் பெரும் செல்வாக்கு
கொங்கு மண்டலத்தில் பெரும் செல்வாக்கு படைத்திருந்தவர் தீரன் சின்னமலை. ஒருமுறை பயிற்சி பெற்ற கொங்கு இளைஞர் படையுடன் மைசூர் போர்களில் ஆங்கிலேயரை எதிர்த்து திப்பு சுல்தானின் படையினருன் இணைந்து போரிட்டார். அதில் ஆங்கிலேயர்களை திணறடித்து வெற்றி வாகைச் சூட முக்கிய பங்காற்றியது சின்னமலையில் கொங்குப் படை.

கோட்டை கட்டிய சின்னமலை
1799-ம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், களத்திலேயே திப்பு சுல்தான் மரணமடைந்தார். திப்புவின் மரணத்துக்குப் பிறகு அரச்சலூர் அருகே ஓடாநிலையில் கோட்டைக் கட்டிய சின்னமலை, பிரிட்டிஷாரை எதிர்ப்பதற்காக சிவன்மலை அருகே இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கத் துவங்கினார்.

கோவைக் கோட்டையை தகர்க்க முயற்சி
திப்பு சுல்தானின் படையில் முக்கிய வீரர்களாக இருந்த தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி, விருப்பாச்சி கோபால நாயக்கர் ஆகியோருடன் இணைந்து 1800 ஆம் ஆண்டு கோவைக் கோட்டையைத் தகர்க்க திட்டமிட்டார் சின்னமலை. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து தன் முயற்சியைக் கைவிடாத தீரன் சின்னமலை, 1801-ம் ஆண்டில் பவானி - காவிரிக் கரையில் நடைபெற்ற போரில் தன் முழுபலத்தையும் கொண்டு ஆங்கிலேயப் படைகளை தகர்த்தார்.

மலைகளுக்கு இடையே நடந்த போர்
1802 ஆம் ஆண்டு சென்னிமலைக்கும், சிவன் மலைக்கும் இடையே நடந்த போரிலும், 1804ஆம் ஆண்டு அரச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையையும் வென்று வெற்றிகளை பதிவு செய்தார் அவர். தீரன் சின்னமலையில் பீரங்கி தாக்குதல், குண்டுகள் வீசுதல் உள்ளிட்ட போர் யுத்திகளைக் கண்டு பிரிட்டிஷ் படையே கலங்கி நின்றதாம்.

சூழ்ச்சியில் வீழ்ந்த வீரன்
அழிக்கும் எண்ணம் கொண்டு யாரும் நெருங்க முடியாத தீரன் சின்னமலை வீழ்ந்தது சூழ்ச்சியில் தான். சின்னமலையை அழிக்க திட்ட மிட்ட ஆங்கிலேய அரசு, அவரது சமையல்காரர் மூலம் சூழ்ச்சி செய்து பிடியில் சிக்க வைத்தனர். இறுதியாக அவரது சகோதரர்களுடன் கைது செய்யப்பட்ட தீரன் சின்னமலை, எந்த சங்ககிரியில் தனது முதல் வேட்டையைத் தொடங்கினாரொ அதே சங்ககிரியில் உள்ள மலைக் கோட்டைக்கு அழைத்துச் சென்று 1805-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

எப்போதும் நிலைத்திருக்கும் புகழ்
கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக திகழ்ந்து, இந்திய விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றிய தீரன் சின்னமலை என்றும் போற்றப்பட வேண்டிய மகத்தான தலைவர் என்றால் மிகையாகாது.