இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது நேரு கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக குழந்தைகள் தினம் பல்வேறு நிகழ்வுகளுடன் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு குடிமகனும், தங்களுடைய குழந்தை மீது மட்டும் அன்பையும், நேரத்தையும் கொண்டிருப்பதைத் தாண்டி அனைத்து குழந்தைகள் மீதும் நேசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதையே நேருவின் வாழ்நாள் வரலாறு காட்டுகிறது. இன்றைய தினத்தில் குழந்தைகள் தினம் குறித்த பல சுவாரசியமான விசயங்களையெல்லாம் பார்க்கலாம் வாங்க.

பண்டிதர் நேரு பிறந்த நாள்
முன்ளாள் பிரதமர், இந்தியாவின் முதல் பிரதமர், பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்படுபவர் ஜவஹர்லால் நேரு. பண்டிதர் ஜவர்ஹலால் 1889, நவம்பர் 14ம் தேதி அலகாபாத்தில் நேரு பிறந்தார். அவரது பிறந்த நாளே இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகளின் கல்விக்கே முக்கியத்துவம்
நம் குழந்தைகளால் அன்போடும், உரிமையோடும் மாமா என்றழைக்கப்படுபவர் நேரு. அன்னாரது பிறந்த நாள் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவத்தையும், முன்னுரிமையும் அளிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

குழந்தைகள் தின கொண்டாட்டம்
குழந்தைகள் தினத்தை நாம் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு சிறந்த கல்வி, வாழ்வாதாரம், குழந்தைகளுக்கான அடிப்படை உரிமை உள்ளிட்டவற்றைக் கிடைக்க வழிசெய்வதே. இன்றைய நாளில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பேச்சு போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரை, நடனப் போட்டி, விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்தியாவின் குழந்தைகள்
உலக மக்கள் தொகையில் அதிக குழந்தைகளைக் கொண்டுள்ள நாடாக இந்தியா சிறந்து விளங்குகிறது. நேரு தன் பொறுப்பில் இருந்த போதும் சரி, மக்கள் பணியாற்றும் போதும் சரி அவரது அனைத்துப் புகைப்படங்களிலும் சிறப்பு பெற்றது மாணவர்கள், குழந்தைகளோடு அவர் இருக்கும் புகைப்படங்கள் தான். அரசியலில் உயரிய பதவி வகித்தாலும் அவர் என்றும் குழந்தை மனதுடனேயே இருந்ததால் குந்தைகளுக்கான கல்வி, வளர்ச்சியில் அதிக ஈடுபாட்டைக் காட்டியுள்ளார்.

நாம் என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு ஆண்டும் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடி வந்தாலும் ஒரு புறம் நம் நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும், அவர்கள் மீது காட்டப்படும் வன்மமும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இவற்றை முற்றிலும் ஒழித்து குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து உரிமைகளையும் கிடைக்கச் செய்ய நாம் உறுதியெடுக்க வேண்டும்.