தேர்வைக் கண்டு மாணவ, மாணவிகள் கலங்கவோ, பயப்படவோ கூடாது என்பதுதான் ஆசிரியப் பெருமக்கள், கல்வியாளர்கள், நிபுணர்களின் கூற்றாக உள்ளது. ஆனால் தேர்வு பயம் என்பது அனைத்து வயதினருக்கும் உள்ள பொதுவான பிரச்சினையாக உள்ளது. தேர்வுகள் நெருங்கும்போது மாணவர்கள் பதற்றம் அல்லது பீதி அடைகிறார்கள். ஆனால் தேர்வு பயத்திலிருந்து மாணவர்களை மீட்டு அவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியும் என நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்.
தேர்வுக்கு முன்பு வரை நன்றாகப் படிக்கும் மாணவர்கள், தேர்வு நெருங்கிவரும்போது பயத்தால் தாங்கள் படித்ததை மறந்துவிடுகின்றனர். தேர்வு பயத்தால் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியாமல் அவர்கள் தோல்வியுறும் நிலை ஏற்படுகிறது.
மாணவ, மாணவிகள் பொதுவாக தேர்வு நேரத்தில் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர் என்பது தெரிந்த விஷயம்தான், மேலும் தேர்ச்சி பெற முடியாமல் போய்விடுமோ என்ற பயம் அவர்களின் மனதில் தொடர்ந்து இருந்து அவர்களை நோகடிக்கிறது. தேர்வு மன அழுத்தம் மாணவர்களின் உடல்நலம் மற்றும் கல்வித் திறனிலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இதை தவிர்க்க, மாணவர்கள் தங்கள் மனதை அமைதியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும் . பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்கள் பதட்டம் மற்றும் பயத்தைப் போக்க உதவலாம். மேலும் அவர்களின் தேர்வுகளுக்கு பயமில்லாமல் தயாராக உதவலாம்.
தேர்வு நேரத்தில் மாணவச் செல்வங்களின் பயத்தைப் போக்குவதற்காக 2018-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பரீக்சா பே சர்ச்சா என்ற திட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். அவரது பேச்சு மாணவச் செல்வங்களின் பயத்தைப் போக்கி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம், தேர்வுகளின் போது ஏற்படும் மன அழுத்த சூழலை சிறப்பாக நிர்வகிக்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை தயார்படுத்தும் அதே வேளையில், தேர்வு அழுத்தத்தை சமாளிக்க மாணவர்களுக்கு ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க உதவும் சில குறிப்புகளை நிபுணர்கள் தந்துள்ளனர்.
அவற்றை கீழே காணலாம்...

சீக்கிரமே மீண்டும் படிக்கத் தொடங்குங்கள்:
தேர்வு நேரத்தில் படிக்காமல் அன்றைய தின பாடங்களை அன்றைய தினத்திலேயே படித்து முடித்து தெளிவாக வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் முழுமையான மறுபரிசீலனை செய்யவோ, மீண்டும் படிக்கவோ அவர்களுக்குப் போதுமான நேரத்தைக் கொடுக்கும் மாணவர்கள் தங்கள் தேர்வுகளை நன்றாக எழுத முடியும் என்ற நம்பிக்கையைத் தரும். இதனால் அவர்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள், மேலும் தேர்வு மன அழுத்தம் மற்றும் பயம் ஆகியவை தவிர்க்கப்படும். மாணவர்கள் தங்கள் ரிவிஷனை (மீண்டும் படித்தல்) முன்கூட்டியே தொடங்கினால், அது அவர்களுக்கு நன்றாகப் புரிந்துகொள்ளவும் நினைவுபடுத்தவும் உதவும்.
தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் நன்கு தயாராகத் தொடங்கினால், அவர்களால் அனைத்து தலைப்புகளிலும், பாடங்களிலும் கவனம் செலுத்த முடியும். கடைசி நிமிட நேரத்தில் ரிவிஷன் செய்யவிடக்கூடாது.
மேலும் ஒரே நாளில் அதிகப்படியாகப் படிப்பதைத் தவிர்த்து விடவேண்டும்:
தேர்வு நேரம் என்பது இரவு முழுவதும் விழித்திருப்பது அல்ல என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். தேர்வு நெருங்கும் சமயங்களில் மாணவர்கள் இரவு முழுவதும் ஓய்வெடுக்காமல் படிப்பது வழக்கம். இதனால் அவர்கள் உடல் சோர்வடைந்து அவர்கள் தேர்வு எழுதும் போது கவனம் செலுத்த முடியாமல் போவதால், இது மாணவர்களுக்கு நல்லதல்ல. மாணவர்கள் இரவு மற்றும் மதிய நேரங்களில் சரியான ஓய்வை எடுக்க வேண்டும், அது அவர்களின் மூளை மற்றும் கண்களுக்கு ஓய்வு கொடுக்கும். புத்துணர்ச்சியையும் வழங்கும்.
போதுமான தூக்கம் மாணவர்களுக்கு ஓய்வெடுக்கவும், கவனம் செலுத்தவும், சிறப்பாக செயல்படவும் உதவும். தேர்வு அழுத்தத்தைச் சமாளிக்க மாணவர்கள் இரவில் குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணிநேரம் தூக்கம் அவசியம்.

ஆரோக்கியமாக உணவு பழக்க வழக்கம்:
பொதுவாக, தேர்வு நேரத்தில் மாணவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை புறக்கணிப்பார்கள். சரியாக சாப்பிடாமல் படித்துக் கொண்டே இருக்கும் நிலை வரும். மேலும் மாணவர்கள் நொறுக்குத் தீனி அல்லது காஃபின் கலந்த பானங்களை நாடுகின்றனர். இது அவர்களுக்கு தூக்கம் மற்றும் மந்தமான உணர்வை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும், இது அவர்களின் கல்வித் திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
மாறாக, அவர்கள் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் . முட்டை, பால் பொருட்கள், கோழி, புதிய பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் ஆகியவை இதில் அடங்கும். வால்நட்ஸ் என்ற அக்ரூட் மற்றும் மீன் போன்ற உணவுகளும் மூளைக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் வழங்கும்.
மற்றவர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்த்தல்:
தேர்வு, படிப்பு விஷயங்களில் மாணவர்கள் பொதுவாக மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தில் உள்ளனர். அவர்கள் தங்கள் நண்பரின் முன்னேற்றம், தயாரிப்பு நிலை, தேர்வுக்குத் தயாராகும் விதம் ஆகியவற்றைப் பற்றி விசாரிக்க முனைந்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் எவ்வளவு நேரம் படிக்கிறார்கள் என்று அடுத்தவருடன் தங்களை ஒப்பிடும் விஷயத்தில் நேரத்தைச் செலவழிக்கின்றனர்.
இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும் என்பதால் இதைத் தவிர்த்து விடுதல் நல்லதாகும்.அதற்கு பதிலாக, நீங்கள் உங்கள் தயாரிப்பிலும் தேர்வுக்குப் படிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். தேர்வு நேரத்தில் உங்களுக்குக் கிடைத்த பொன்னான நேரத்தை நன்கு பயன்படுத்த வேண்டும்.
நேர்மறையாக இருத்தல் அவசியம்:
நம்பிக்கையுடன் இருப்பது வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் முக்கியமானது. தேர்வு நேரம் முழுவதும், நேர்மறையான மனநிலையைக் கொண்டு இருப்பது முக்கியம். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன், தேர்வில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். சில சுவாசப் பயிற்சிகள் மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டால் மாணவர்கள் நேர்மறையாக இருக்க முடியும்.
இது மாணவ, மாணவிகளின் திறன்களையும் அதிகரிக்கச் செய்கிறது. அவர்கள் நன்றாக சிந்திக்க உதவுகிறது. இது அவர்கள் தேர்வில் சிறந்து விளங்க மட்டுமல்ல வாழ்வில் சிறந்து விளங்கவும் உதவுகிறது. எனவே தேர்வு காலங்களில் மாணவர்கள் தங்களை அமைதிப்படுத்தும் வழிகளில் ஈடுபடவேண்டும்.

தியானம் செய்தல்:
தியானம் செய்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. அவை மனதை அமைதிப்படுத்தக்கூடியவை. உடலையும் அமைதிப்படுத்தி உங்களின் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. மனஅழுத்தம் குறைந்தாலே உங்கள் மூளையின் இயக்கம் தன்னாலே அதிகரிக்கத்துவங்கிவிடும். அது நீங்கள் தேர்வுக்கு தயார் செய்ய உதவும்.
சிறிய தியானப்பயிற்சிகள், மெழுகுவர்த்தி அல்லது எரியும் தீபத்தை பார்ப்பது அல்லது கண்ணாடியைப் பார்ப்பது போன்றவை கூட உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடுமளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு அது மிகவும் உதவும். மன ஆரோக்கியத்தை நன்றாக பராமரித்தாலே போதும் அது உள்ளார்ந்து செயல்பட்டு, தேர்வில் வெற்றி பெறவும், படிப்பில் சிறந்து விளங்கவும் உதவும். அதுமட்டுமின்றி சமூக பண்புகளை வளர்த்து, நம்பிக்கைளை மாணவச் செல்வங்களுக்கு அளிக்கிறது.
மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா போன்றவை உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாத்து உங்களுக்கு இயற்கையிலேயே ஏற்படும் அச்ச உணர்வை போக்குகிறது. எனவே. மாணவர்கள் இவை மூன்றையும் கட்டாயம் செய்யவேண்டும். உங்கள் மனம் மற்றும் உடலை ரிலாக்ஸ் செய்ய சிறிய நுட்பம் கூட உதவுகிறது. அது மூச்சை உற்றுநோக்குதல் போன்ற சிறிய பயிற்சிகளால் உங்கள் உடல் மற்றும் மனம் அமைதி பெற்று ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிறது.
அதேபோல் தியானமும் குழந்தைகளின் கவனம் ஓரிடத்தில் குவிந்து அவர்களின் ஆற்றல் பெருக உதவுகிறது. தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை நிபுணர்களின் வழிகாட்டுதலில் கற்றுக்கொண்டு மாணவர்கள், உதட்டில் சுவாசிப்பது, வயிற்றில் சுவாசிப்பது மற்றும் உணர்வுகளை மதிப்பது ஆகியவற்றை பழகவேண்டும். இந்தப்பயிற்சிகள் அவர்களை மனகிளர்ச்சி அடையவிடாமல், எதற்கும் பொறுமையாக யோசித்து நிதானமாக செயல்படும் நிலையை மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறது.
மன அழுத்தத்தை போக்கிக்கொள்ள மாணவர்கள் யோகா செய்ய வேண்டும். கவனிக்கும் திறன் அதிகரிக்கும். பத்மாசானம், ஹலாசனம், பிரம்மரி பிராணயாமம், சாவாசனம் ஆகியவை நினைவாற்றலை அதிகரிக்கக்கூடிய யோகாக்கள் ஆகும். அது திடமான மனநிலையையும் உண்டாக்கும் வல்லமை பெற்றது.
மனதை நன்றாக அமைதிப்படுத்தி, கவனத்தை அதிகரிப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. ஹலாசனா நரம்பு மண்டலத்தை தூண்டி, ரத்த ஓட்டத்தை சீராக்கி, மூளையை சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கிறது. மூளையில் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்போது அது நினைவாற்றலுக்கு உதவுகிறது. அது நல்ல கவனிக்கும் திறனை வளர்க்கிறது.
மன அழுத்தம் மற்றும் பயம் இரண்டும் தேர்வு காலத்தில் உள்ளுக்குள் மறைந்திருக்கும் இரண்டு முக்கிய பாகங்கள் ஆகும். எனவே இதுபோன்ற செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தி அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட வழிவகை செய்வது அவசியம். யோகா மற்றும் தியானத்தின் நன்மைகளாக மன அமைதி ஏற்படுத்தி, கல்வியை மேம்படுத்த உதவுகிறது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
உடல்நலன் முக்கியம்:
தேர்வு நெருங்கும் சமயத்தில், நமது உடல்நலனை நல்லபடியாக பராமரித்துக் கொள்வது முக்கியமானதென்றால், உடலில் காயமேற்படுத்தக்கூடிய வேறெந்த காரியத்தையும் செய்வதை தவிர்ப்பதும் நல்ல விஷயமாக இருக்கும். பொதுவாக, கிராமப்புற மாணவர்கள், ஆறுகள், கிணற்றில் குதித்து நீந்துவது, டைவ் அடிப்பது, குளிப்பது, மரம் ஏறுவது, முள் வெட்டுவது, விறகு வெட்டுவது, மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போன்ற சில காரியங்களில் வழக்கமாக ஈடுபடுவார்கள்.
அவை, அந்த மாணவர்களுக்கு வழக்கமான ஒன்றுதான் என்றாலும், எதிர்பாராத சில நேரங்களில், அத்தகைய செயல்களில், விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, தேர்வின்போது, அதுபோன்ற செயல்களை தயவுசெய்து செய்ய வேண்டாம். அந்தச் செயல்களை சில நாட்களுக்கு ஒத்தி வைக்கவும். தேர்வு முடிந்த பிறகு, அதுபோன்ற காரியங்களில் ஈடுபடலாம்.
அதேபோல், கிராமப்புற மாணவர்கள் தவிர, நகர்ப்புற மாணவர்களும் சேர்ந்து, வேறுசில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும். கூர்மையான ஆயுதங்களை வைத்து ஏதேனும் வேலை செய்தல், மோட்டார் சைக்கிள்களில் சாகச பயணம் செல்லுதல், அல்லது வேகமாக செல்லுதல், நெருப்பு தொடர்பான வேலைகளில் ஈடுபடுதல், தேவையற்ற அல்லது பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லுதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
ஏனெனில், தேர்வின்போது, கண்களும், கைகளும் மிக முக்கியமானவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
உங்களின் நடவடிக்கைகளால், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுமானால், அது தேர்வையே பாதித்துவிடும். உங்களின் விரல் நகங்களை, பிளேடு பயன்படுத்தாமல், நகவெட்டிக் கொண்டு வெட்டி, தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.
இந்த முறைகளையும், டிப்ஸ்களையும் கடைப்பிடிக்கும்போது மாணவச் செல்வங்கள் தேர்வு நேரத்தில் பயத்தை முற்றிலுமாக விட்டொழிக்க முடியும் என்று நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்.


Click it and Unblock the Notifications












