இந்த விஷயத்துல நீங்க கில்லாடியா இருந்தா, அட்டன்ட் பண்ற இன்டர்வியூ எல்லாம் தட்டித் தூக்கலாம்!

Posted By: Gowtham Dhavamani

சில விஷயங்கள் உறுதியாவும் விரைவாவும் உங்களுக்கு வேலை அமைய உதவும். இது தெரியாம வேலை கிடைக்கலன்னு பொலம்பற பல ஆட்களை நான் பாத்துருக்கேன்.

ஒரு நேர்காணல் முடிஞ்சதுக்கு அப்பறம் நீங்க அவுங்களுக்கு நன்றி சொல்லி ஒரு கடிதம் அனுப்பனும்னு ஒருத்தருக்கு தெரியல. இன்னொருத்தருக்கு தன்னோட அனுபவத்துல எல்லா வருஷத்தையும் கண்டிப்பா ரெஸ்யூம்ல போடணும்னு அவசியம் இல்லைங்கற விஷயம் தெரியல.

இந்த பட்டியல்ல இருக்கற விஷயங்கள் சின்னதா இருந்தாலும், இதுங்களால உங்களுக்கு கிடைக்கற நன்மைகள் அதிகம். அதனால இந்த 15ல உங்களுக்கு உபயோகப்படுற விஷயங்கள் என்னனு பாருங்க.

1.மேம்படுத்தப்பட்ட தேடுதல பயன்படுத்துங்க :

எந்த எந்த வலைத்தளத்துல நீங்க பதிவு செஞ்சு வெச்சு வேலை தேடறீங்களோ, அந்த தளங்கள்ல கண்டிப்பா மேம்படுத்தப்பட்ட தேடுதல்னு ஒரு தேர்வு இருக்கும் (அட்வான்ஸ்ட் ஆப்ஷன்) அத பயன்படுத்தி, எந்த ஊருல வேணும்? எந்த துறைல? எந்த நிறுவனத்துல வேலை வேணும்னு சுலபமா தேட முடியும். உங்க நேரம் இதுனால வீண் ஆகாது.

2. எல்லா வேலைக்கும் விண்ணப்பிக்கறது சரி ஆகாது:

என்ன வேலை வேணும்னு தேடறது நல்லது. சில பேர் என்ன வேலை இருக்குனு பாத்து அதுல ஒரு 10, 15 வேலைக்கு விண்ணப்பிச்சு வெப்பாங்க. அது சரியான அணுகுமுறை இல்ல. இது ஹோட்டல் இல்ல இட்லி இல்லைனா தோசை சொல்ல.

அதோட சில பேர், நிறுவனத்தோடு தொடர்பு தகவல கண்டுபுடிச்சு அவுங்க ரெஸ்யூம், கவர் லெட்டர்லாம் எழுதி அனுப்பிவெப்பாங்க. அதுவும் பல நேரங்கள்ல வீணா போகும். அதனால வேலை தேடறதுக்கு முன்னாடி என்ன விதமான வேலை உங்களுக்கு வேணும்னு முடிவு பண்ணுங்க. முடிஞ்சா இந்த நிறுவனம்னு கூட நீங்க முடிவு செய்யலாம்.

 

3. விண்ணப்பிக்கறத நிறுத்த வேண்டாம் :

எல்லா நிறுவனங்களுக்கும் எல்லா வேலைகளுக்கும் விண்ணப்பிக்கறது தவறு. ஆனா ஒரு குறிப்பிட்ட வேலைக்கு பல நிறுவனங்கள்ல விண்ணப்பம் அனுப்பி வெக்கறது தவறு கிடையாது. ஒரு வேலை கிடைக்கற முன்னாடி 15 தடவை ஒருத்தர் நிராகரிக்க படறதா ஆய்வுகள் சொல்லுது. அது மட்டும் இல்லமா, உங்க தவறுகள்ல இருந்து நீங்க கத்துக்கறதுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அதனால விண்ணப்பிக்கறத நிறுத்தாதீங்க.

4. கவர் லெட்டர் என்ற கவசம் :

இந்த கவர் நம்ம வாழ்க்கைல பல இடங்களை வேலை ஆக பயன்படும். அதே போல கவர் லெட்டர் உங்களுக்கு நேர்காணல் வாய்ப்பு வாங்கித்தரும். பல நிறுவனங்கள்ல மனித வளத்துறை அதிகாரிகள் உங்களோட ரெஸ்யூம் கூட நீங்க கவர் லெட்டர் வெச்சுருக்கீங்களானு பாக்கறாங்க. அப்படி இருந்தா அதுல முதல் பத்தில நீங்க சொல்ல வர கருத்து என்னனு பாக்கறாங்க. வளவளா கொழகொழானு இருந்தா அப்படியே ரிஜெக்ட்.

அதனால கவர் லெட்டர் வெக்கணும். அத விட முக்கியமா அந்த கவர் லெட்டர கண்ணுல விளக்கெண்ணெய ஊத்திட்டு எழுதணும், முடியலைன்னா நல்லா எழுத தெரிஞ்சவங்ககிட்ட குடுத்து எழுதுங்க. கவர் முக்கியம் பாசு.

 

5. ரெஸ்யூம் மேட்ச் ஆகணும் :

எந்த வேலைக்கு நீங்க விண்ணப்பிக்கறீங்களோ அந்த வேலைக்கு ஏத்த மாதிரி ஒரு ரெஸ்யூம் எழுதறது அவசியம். ஏன்னா நிறுவனங்கள் "அப்ளிகன்ட் ட்ராக்கிங் சிஸ்டம்" உபயோகிக்கறாங்க. அதுல உங்க ரெஸ்யூம் முன்னாடி வரணும்னா கண்டிப்பா நீங்க அத சரியா எழுதறது அவசியம். அதனால என்ன வார்த்தைகள் பயன்படுத்தனும்னு தெரிஞ்சுக்குங்க.

6. அனுபவம் அவசியம், ஆனா அவசியம் இல்ல

உங்க அனுபவம் என்னனு நிறுவனம் தெரிஞ்சுக்கறது முக்கியம். ஆனா எல்லாமே தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல. சில பேர் 40 வருஷ அனுபவித்த ரெஸ்யூம்ல போட்டு நான் பாத்துருக்கேன். அது ரெஸ்யூம் இல்ல உங்க வரலாறு. அது மட்டும் இல்லாம நீங்க ரொம்ப வயசானவரா தெரியுவீங்க. அதுனால கூட வேலை கிடைக்காம போகலாம்.

7. வே.மு - வே.பி :

அதாவது வேலை கிடைக்கும் முன், வேலை போன பின். இந்த விஷயத்த உங்க ரெஸ்யூம்ல நீங்க எப்பிடி கொண்டு வரப்போறீங்களோ அத வெச்சு உங்க வேலை வாய்ப்புகள் இருக்கு. வேலை இல்லாம இருந்த நேரத்த முடிஞ்ச அளவுக்கு ஏதாவது திறமைகளை வளர்க்க பயன்படுத்திக்கிட்டேன்னு சொல்லி நிரப்ப பாருங்க.

8. வேலைல சேந்துட்டதா நெனச்சு உடை உடுத்துங்க :

நேர்காணல் தேதி அன்னைக்கு, வேலை கிடைச்சுருச்சு. இன்னைக்கு முதல் நாள் வேலைக்கு போறேன்னு மனசுல நெனச்சுட்டு அதுக்கு ஏத்த மாதிரி உடை உடுத்துங்க. எந்த நிறுவனத்துக்கு போறிங்களோ அதுக்கு ஏத்த மாதிரி உடை உடுத்துங்க. மிடுக்கா அதே சமயம் கொஞ்சம் பணிவா நேர்காணலுக்கு போனா கண்டிப்பா வேலை கிடைக்கற வாய்ப்புகள் அதிகரிக்கும்.

9. நீங்களா இருங்க :

எந்த கேள்விக்கு எந்த பதில் சொல்லணும்? எல்லா நேரமும் சிரிக்கணும், அவுங்க என்ன கேக்கணும்னு நெனைக்கறாங்களோ அத பதிலா சொல்றது, இதுலாம் அவசியம் இல்ல. இதுலாம் செஞ்சு நீங்க வேலைல சேந்துட்டாலும், அதுக்கு அப்பறம் வேலை செய்யறது இயலாத காரியம். அதனால நீங்க நீங்களா இருங்க. நிறுவனங்களும் அதத்தான் விரும்பறாங்க. நேர்காணல்ல பாத்த மனிதரும், முதல் நாள் வேலைக்கு வர மனிதரும் ஒரே ஆளா இருக்கறது அவசியம்.

10. ஒரு கதை சொல்லட்டுமா சார் :

நேர்காணல்ல உங்க கிட்ட கேள்விகள் கேட்கப்படறப்போ, அதுக்கு வெறும் பதிலா சொல்லாம, விக்ரம் வேதால வர வேதா மாதிரி ஒரு கதையா சொல்லுங்க. என்ன சிக்கல் வந்துச்சு? அது எதனால சிக்கலா மாறுச்சு? நீங்க அத எதிர்கொண்ட விதம் என்ன? அத சமாளிச்ச விதம் எப்பிடி? இப்பிடி பல தகவல்களை நீங்க பதிலா சொன்ன கண்டிப்பா உங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகும்.

11. முன்னாள் நிறுவனத்த பத்தி எதிர்மறையா சொல்ல வேண்டாம்

உங்க மேலதிகாரி பத்தியோ, உங்க முன்னாள் நிறுவனத்த பத்தியோ நீங்க தப்பா பேசுனா அது உங்க பிம்பத்த பாதிக்கும். அது மிகப்பெரிய தவறு. இந்த நிறுவனத்துல இருந்து நீங்க போகும்போது இதே மாதிரிதான் பேசுவீங்கனு நினைக்க வெக்கும்.

12. நன்றி சொல்லி கடிதம் அனுப்புங்க :

ஒரு நேர்காணல் முடிஞ்ச உடனே, வேலை கிடைக்குதோ இல்லையோ. உடனே நன்றி சொல்லி உங்களுக்கு மெயில் அனுப்பிச்ச மனிதவள துறை அதிகாரிக்கு பதில் மெயில் அனுப்புங்க. இதுனால ஒரு நல்ல அவிப்பராயம் உங்க மேல உருவாக வாய்ப்பு இருக்கு. அந்த மெயில்ல நேர்காணல்ல சொல்ல மறந்த விஷயங்கள நீங்க சொல்ல முடியும்.

13. நெட்வொர்க்கிங் என்னும் தாரக மந்திரம் :

பல தரம் நெட்வொர்க்கிங் மூலமா தான் பல நபருக்கு வேலை கெடச்சுருக்கு. அதனால உங்களுக்கு யார் மூலமா எப்பிடி ஒரு வேலை கிடைக்கும்னு சொல்லவே முடியாது. அதனால முடிஞ்ச அளவுக்கு வேலை தேடற விஷயத்த உங்க நட்பு வட்டத்துல சொல்லி வையுங்க. உங்க நட்பு வட்டத்த பெரிசாக்கியும் வையுங்க.

14. ரெப்ரென்ஸ் முக்கியம் :

வேலைக்கு விண்ணப்பிக்கும் போது நீங்க குடுக்கற ரெப்ரென்ஸ் ரொம்ப முக்கியம். வேலை குடுக்கற நிறுவனம் அத கண்டிப்பா பரிசோதிப்பாங்க. உங்க முன்னாள் நிறுவன மேலதிகாரி சரியான பரிந்துரை குடுக்கமாட்டாருன்னு தெரிஞ்சா, அவரோட முடிஞ்ச அளவுக்கு சமரசம் ஆகிறது நல்லது.

15. கஜினியா இரு :

ஒரு தரம் முயற்சி செஞ்சு உங்களுக்கு அந்த வேலை கிடைக்கலைனு அப்படியே விற்ற கூடாது. மறுபடியும் கொஞ்சம் இடைவெளி விட்டு முயற்சி செய்யணும். அடுத்த தரம் முயற்சி செய்யும் போது கொஞ்சம் ரெஸ்யூம மேம்படுத்தீட்டு விண்ணப்பிக்கறது நலம்.

கொசுறு :

என்ன விதமான காலணி நீங்க உபயோகிக்கறீங்கன்றது முக்கியம். வேலை குடுக்கறவங்களுக்கு உங்க மேல ஒரு அவிப்பராயம் உருவாக்க கூடியது நீங்க அணிய கூடிய காலணி. அதனால கடன்வாங்கியாச்சும் பளபளன்னு போட்டுட்டு போங்க. தலை முதல் கால் வரை ஒரு கெட்டப்பா தெரியணும்.

 

 

English summary
15 Quick Tips to Get Hired Fast!

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia