மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவா்களுக்கு மத்திய அரசின் உதவித் தொகை திட்டத்தை (UGC) பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் வரும் 2020 பிப்ரவரி 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

யுஜிசி-யின் கீழ் எம்.ஃபில் உள்ளிட்ட படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 25,000 என உதவித் தொகையுடன், இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ. 10,000 முதல் 12,000 வரையில் வழங்கப்படும்.
அதேப் போன்று, பி.எச்.டி மேற்கொள்ளும் மாணவா்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது வழக்கம். இவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 25,000 ரூபாய் உதவித் தொகையும், இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.10,000 முதல் 12,000 வரையிலும் உதவித் தொகை வழங்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, மூன்றாம் ஆண்டிலிருந்து மாதம் ரூ. 28,000 உதவித் தொகையும், வருடத்திற்கு ரூ. 20,500 முதல் 25,000 வரையிலும் உதவித் தொகை வழங்கப்படும். அதுமட்டுமின்றி, வீட்டு வாடகைப் படியும், உதவியாளர்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் தொகையும் கூடுதலாக வழங்கப்படும்.
முதுநிலை படிப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் எம்.ஃபில்., பி.எச்.டி. ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை அளிக்கப்படவுள்ளது.
யுஜிசி-யின் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான இந்த உதவித் தொகையைப் பெற விருப்பம் உள்ளவர்கள் https://www.ugc.ac.in/page/Scholarships-and-Fellowships.aspx என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் பிப்ரவரி 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.