ஐஐடி, என்ஐடி, ஐஐஎம், ஐஐஐடி உள்ளிட்டு மத்திய பல்கலைக் கழகத்தில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு கல்வித் தொகைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் செயல்பட்டு வரும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஎம், ஐஐஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்குக் கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வரையில் முதற்கட்டமாக 100 பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல் தளம், அறை எண் 108-ல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரைத் தொடர்புகொண்டு பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.