ஏ.சி, ஸ்மார்ட் கிளாஸ்ரூம், பயோமெட்ரிக்... மாணவர்களை அசரடிக்கும் புதிய மருத்துவக் கல்லூரி!!

Posted By:

சென்னை: ஏ.சி. வகுப்பறைகள், ஸ்மார்ட் கிளாஸ்ரூம், பயோமெட்ரிக் வசதிகள் என சென்னை ஓமந்தூர் அரசு தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் அனைவரையும் அசத்தி வருகிறது.

2011-ல் அறிவிப்பு

கடந்த ஆட்சிக்காலத்தில் தலைமைச் செயலகத்துக்காக ஓமந்தூரார் அரசு வளாகத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் இனி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையாக செயல்படும் என்று 2011-ல் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

மருத்துவமனை தொடக்கம்

இதைத் தொடர்ந்து அங்கு மருத்துவமனை தொடங்கப்பட்டது. பின்னர் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்காக அகில இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பிக்கப்பட்டது.

மருத்துவக் கவுன்சில் அனுமதி

மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அங்கு மருத்துவக் கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

20-வது மருத்துவக் கல்லூரி

இது தமிழகத்தில் செயல்படும் 20-ஆவது அரசு மருத்துவக் கல்லூரியாகும்.இந்த மருத்துவக் கல்லூரியில், நிர்வாகக் கட்டடம், தொழில்முறைப் பணியாளர்கள் கூடம், மாணவர்கள் விடுதிக் கட்டடம், நூலகம், வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.

ரூ.200 கோடி செலவு

ரூ.200 கோடி செலவில் இந்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் ரூ. 107.48 கோடியில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை சார்ந்த கட்டடங்கள் உள்ளிட்டவற்றை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

55 ஆண்டுகளுக்குப் பின்...

சென்னையில் 55 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய அரசு மருத்துவக் கல்லூரியாக ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது.

5-வது மருத்துவக் கல்லூரி....

சென்னை மருத்துவக் கல்லூரி 1835-ஆம் ஆண்டிலும், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி 1836-ஆம் ஆண்டிலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி 1960-ஆம் ஆண்டிலும் தொடங்கப்பட்டன. அவற்றுக்குப் பின் சென்னையில் நான்காவது அரசு மருத்துவக் கல்லூரியாக 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் இந்தக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல் மருத்துவக் கல்லூரியும் சென்னையில் அமைந்துள்ளது. ஆக மொத்தம் சென்னையில் 5 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

100 எம்பிபிஎஸ் இடங்கள்

இங்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர கலந்தாய்வு மூலம் மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய 15 எம்.பி.பி.எஸ். இடங்களில் 11 இடங்களுக்கு மாணவர்கள் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்தும் நவீனம்

இங்கு ஏசி வகுப்பறைகள், நவீன ஸ்மார்ட் கிளாஸ் ரூம், பயோமெட்ரிக் வசதிகள் என மாணவர்களை அசரடிக்கும் விதமாக இந்த கல்லூரி அமைந்துள்ளது.

தனியாருக்கு இணையாக இந்தக் கல்லூரியை அரசு உருவாக்கியுள்ளது.

அனைத்து வகுப்பறைகளிலும் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆய்வகங்கள், நூலகம், நிர்வாகப் பிரிவுகள், பேராசிரியர் அறைகள் உள்ளிட்ட அனைத்து அறைகளும் குளிரூட்டப்பட்டுள்ளன.

 

ஸ்மார்ட் கிளாஸ்ரூம்

கரும்பலகை இல்லாமல் கணினி உதவியுடன் செயல்படும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களை மாணவ, மாணவிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.

பயோ மெட்ரிக் முறை

மேலும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டை பயோமெட்ரிக் முறையில் கண்காணிக்கத் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
நவீன உபகரணங்களைக் கொண்டு ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் கல்லூரியில் காலெடுத்து வைத்துள்ளனர்.

English summary
World class amenities has been created in New Medical college which has inaugurated in Chennai Omandoorar Government garden Campus. AC Classrooms, Smart Classrooms has been constructed in the New College.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia