வாட்ச்மேன் வேலை பார்த்துக் கொண்டே படித்தவருக்கு ஒரே நேரத்தில் 2 அரசு வேலை.!!!
மற்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞர் கோலே பிரவீன் குமார். தெலங்கானா மாநிலத்தில் வாட்ச்மேன் வேலை பார்த்துக்கொண்டே அரசு வேலைக்கு படித்து தேர்ச்சி பெற்று அரசு வேலையில் விரைவில் இணையவுள்ளார். ஒரே நேரத்தில் இவருக்கு 2 அரசு வேலை கிடைத்துள்ளது.
வாட்ச்மேன் வேலை பார்த்தபோதும், மனம்தளராமல் அரசு போட்டித் தேர்வுகளுக்காக படித்து தேர்ச்சி பெற்று அனைவருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார் கோலே பிரவீன் குமார்.

தெலங்கானாவின் மான்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் இந்த கோலே பிரவீன் குமார். 31 வயதான இந்த இளைஞரின் தந்தை கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவரது தாயார் பீடி சுற்றும் வேலை செய்து வருகிறார். வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் பிரவீன் குமாரை அவரது பெற்றோர்கள் நன்றாக படிக்க வைத்தனர். எம்.காம், பி.எட், மற்றும் எம்.எட் ஆகிய படிப்புகளை முடித்து இருந்த பிரவீன் குமாருக்கு எந்த வேலையுமே கிடைக்கவில்லை. இதனால் கிடைத்த வாட்ச்மேன் வேலையைப் பார்தது வந்தார்.
ஹைதராபாத்திலுள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில்தான் இரவு நேர வாட்ச்மேன் பணியை அவர் செய்து வந்தார். இரவில் வாட்ச்மேன் வேலை பார்த்துக் கொண்டே பகலில் போட்டித் தேர்வுகளுக்கு படித்து தன்னை மெருகேற்றி வந்தார்.
இந்நிலையில் இவர் 2 போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளார். முதுகலை ஆசிரியர் மற்றும் இளநிலை பேராசிரியர் என இரண்டு பணிகளுக்கு நடந்த போட்டித்தேர்வில் இரண்டிலுமே வெற்றி பெற்று தற்போது தேர்வாகியுள்ளார். வாட்ச்மேன் வேலை பார்த்தபோது இவருக்கு மாதம் ரூ. 9 ஆயிரம் மட்டுமே கிடைத்தது.
தற்போது ரூ. 73 ஆயிரம் முதல் ரூ. 83 ஆயிரம் வரை ஊதியம் உள்ள அரசு வேலை கிடைக்கவுள்ளது.
இதுகுறித்து பிரவீன் குமார் கூறியதாவது:
வாட்ச்மேனாக பணி செய்யும் போது நான் ஒருபோதும் வேலை பார்ப்பதாக நினைக்கவில்லை. எனக்கு படிக்க நேரம் கிடைத்து இருப்பதாகவே எண்ணி படித்தேன். தற்போது 2 தேர்வுகளில் வெற்றி பெற்றேன். இதைப் போலவே எந்த இளைஞரும் தாங்கள் பார்க்கும் வேலையை சாதாரணமாக எண்ணாமல் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி காரணவேண்டும்.
அரசு தேர்வுக்காக படித்து வரும் இளைஞர்களுக்கு இவர் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார் என்று இவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவரது பேட்டி அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications












