அச்சம், பதற்றம் இன்றி தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு வைகோ வாழ்த்து

Posted By:

சென்னை: பதற்றமோ, அச்சமோ இன்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ளுங்கள் என்று பனிரெண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார்.

அச்சம், பதற்றம் இன்றி தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு வைகோ வாழ்த்து

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 5 அன்றும்; பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 19 அன்றும் தொடங்குகின்றன. பல இலட்சக் கணக்கான மாணவக் கண்மணிகள் இந்தப் பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். உயர்கல்விக்குஅழைத்துச் செல்லும் நுழைவாயிலாக பொதுத்தேர்வுகள் விளங்குகின்றன.

மாணவர்களின் நலன் கருதி பள்ளிப் பொதுத்தேர்வுகளை அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைத்து நடத்திட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கழக மாணவர் அணி சட்ட ரீதியான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. எனினும் அக்கோரிக்கை இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில், 2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் நாளை (05.03.2015) தொடங்குகின்றன. மாணவர்கள் பயிலும் பள்ளிகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே சென்று பதற்றமோ, அச்சமோ இன்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ளுமாறு மாணவச் செல்வங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர்கள் எழுதப்போகின்ற இத்தேர்வுகள் மட்டுமே அவர்களின் முழுத்திறனையும் ஆற்றலையும் வெளிக்கொணரும் சாதனங்கள் அல்ல. மாணவர்களின் பயிலும் திறனை ஓரளவு தெரிந்து கொள்வதற்கான ஒரு கருவிதான் தேர்வுகள் என்ற அளவிலேயே இதனை எதிர்கொள்ள வேண்டும்.

எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தேர்வு குறித்த எவ்வித அழுத்தத்தையும், கெடுபிடிகளையும் திணிக்க முயல வேண்டாம். அதனால் எதிர்விளைவுகளே ஏற்படும். தம் வாழ்வில் வெற்றிபெற ஓராயிரம் வழிகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை விதைத்து குழந்தைகளை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துங்கள்.

தேர்வுக்குப் புறப்பட்டுச் செல்லும் மாணவர்களை அனைத்துப் பேருந்துகளும் எல்லா நிறுத்தங்களிலும் நின்று ஏற்றி இறக்கிச் செல்லும் வகையில் அரசு வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டுகிறேன்.

தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிக்கூடப் பகுதிகளில் அரசியல் கட்சிகளோ, இதர அமைப்புகளோ, திருவிழா கொண்டாடுகிற குழுவினரோ சத்தமாக ஒலிப்பெருக்கியை இயக்கிடுவதை முற்றாகத் தவிர்த்திட முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

வருங்கால தமிழ்நாட்டின் வார்ப்புகளாக விளங்கிடும் என் இனிய மாணவச் செல்வங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையப்பெற என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

English summary
MDMK General Secretary Vaiko today conveyed his greetings on SSLC and Plus 2 Students for attending public examination.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia