அடிப்படை வசதிக்கு நிதியில்லை... தள்ளாடும் தரம் உயர்ந்த பள்ளிகள்!

Posted By: Jayanthi

சென்னை: தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளை கண்டு கொள்ளாமல் போனதால் தரம் உயர்ந்த பள்ளிகள் டல்லடிக்கின்றன. மாணவர்கள் படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு பட்ஜெட்டுக்கு பிறகும் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

நிதி வேண்டும்

தரம் உயர்த்தப்படும் போது, மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளி கட்டமைப்பு, இதர செயல்பாடுகள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இவை தவிர தரம் உயர்த்தப்படும் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக இருந்தால் அவற்றை சரி செய்ய போதிய நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும்.

கட்டமைப்பு வசதி இல்லை

ஆனால், நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இதுவரை செய்யாமல் விட்டுவிட்டதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில்

குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் தற்போது வரை 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் இதுவரை நான்கு பள்ளிகளில் மட்டுமே கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

 

 

சேர்க்கையும் குறைவு

இந்நிலையில 2012 - 2013ம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதேசமயம் போதிய மாணவர் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் உள்ள பள்ளிகள் தரம் உயர்த்தப்படாமல் உள்ளன.

 

 

லோக்கல் அரசியல்

அந்தந்த பகுதிகளில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சொல்லும் பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்படுவதால் தகுதி உள்ள பள்ளிகள் தரம் உயர்த்தப்படாமல் அப்படியே உள்ளன. இதற்கு காரணம் பள்ளிக்கல்வித்துறை போதிய கவனம் செலுத்தாமல் இருப்பது, ஒத்துழைப்பு தராமல் இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இடமிருந்தாதானே...

பள்ளிகளில் உள்ள இட வசதியை பொருத்தே கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும். தரம் உயர்த்திய சில பள்ளிகள் சிலவற்றில் மட்டுமே அதற்கான இட வசதி இருந்தது. கட்டமைப்பு வசதிகள் செய்ய பள்ளிக் கல்வித்துறை சம்மந்தப்பட்ட பள்ளிகளில் ஆய்வு செய்து ஒப்புதல் தர வேண்டும். ஆனால் அதற்கான ஆய்வு நடக்கிறதா என்றால் இல்லை என்றே பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Due to lack of funds most of the govt schools which upgraded to higher level have suffered with out basic amenities.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia