பல்கலைக்கழகங்களின் படிப்பு மையங்களை மாநில எல்லைக்கு வெளியே அமைக்கக் கூடாது! - யுஜிசி புது உத்தரவு

Posted By:

சென்னை: பல்கலைக்கழகங்கள் தங்களது படிப்பு மையங்களை மாநில எல்லைக்கு வெளியே அமைக்கக் கூடாது என, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவால் ஏற்கெனவே அமைக்கப்பட்ட மையங்களின் நிலை என்னாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மையங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.

பல்கலைக்கழகங்களின் படிப்பு மையங்களை மாநில எல்லைக்கு வெளியே அமைக்கக் கூடாது! - யுஜிசி புது உத்தரவு

இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட சுற்றறிக்கை விவரம்:

சட்டப் பேரவையில் சட்டத்தை நிறைவேற்றி மாநில பல்கலைக்கழகத்தையோ அல்லது தனியார் பல்கலைக்கழகத்தையோ தொடங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது.

ஆனால், அதே நேரம் பேராசிரியர் யெஷ் பால், சத்தீஸ்கர் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நாடு முழுமைக்குமான சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதேநேரம், மாநில சட்டப் பேரவைகளைப் பொருத்தவரை அந்தந்த மாநில எல்லை வரையறைக்குட்பட்ட சட்டத்தை மட்டுமே நிறைவேற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இதனடிப்படையில், மாநில பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநில எல்லைக்குள் மட்டுமே படிப்பு மையத்தோ, விரிவாக்க மையத்தையோ ஆரம்பிக்க முடியும். மாநில எல்லைக்கு வெளியே அமைக்கக் கூடாது.

இதுபோல், தனியார் பல்கலைக்கழகங்கள் மாநில எல்லைக்கு வெளியே மட்டுமன்றி, எல்லைக்குள்ளும் படிப்பு மையங்களை ஆரம்பிக்கக் கூடாது. அவ்வாறு மாநில எல்லைக்குள் படிப்பு மையத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் யுஜிசியிடம் அனுமதி பெற வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதும், சில பல்கலைக்கழகங்கள் இந்த நடைமுறையை மீறி படிப்பு மையங்களைச் செயல்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு நடத்தப்படும் மையங்கள் மூடப்பட்டு, யுஜிசி அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த புதிய உத்தரவால் ஏற்கெனவே மாநிலங்களுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக படிப்பு மையங்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இதுபோன்ற மையங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

English summary
In an order issued on Wednesday, UGC has asked several state and private universities to ensure that no off-campus study or outreach centre is established outside the territorial jurisdiction of the state, in violation of laws. A similar policy had been enacted in 2013, which covered only off-campus centres outside state's jurisdiction. The new circular, however, requires all private universities to take prior permission before establishing any centre even within the state's jurisdiction.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia