உயர் கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப் படிப்புகளுக்கான வழிகாட்டுதல்களை மீறினால் அந்தக் கல்வி நிறுவனத்தின் ஒட்டுமொத்த படிப்புகளுக்குமான அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக யுஜிசி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
உச்சநீதிமன்ற உத்தரவின் படி உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு ஆய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நீதிபதி ரெட்டி தலைமையிலான குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழு ஆய்வுகளை மேற்கொண்டு நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் தொலை நிலை மற்றும் திறந்தநிலை உயர் கல்வியின் தரத்தை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது. இதனை மத்திய அரசு முழுமையாக ஏற்றுள்ளது.
இதனால், நீதிபதி ரெட்டி குழுவின் பரிந்துரைகளை நாடு முழுவதும் தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளின் பட்டியல், கல்வி நிறுவனம் வாரியாக யுஜிசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ugc.ac.in/deb என்னும் இணையதளத்தில் ஆண்டுதோறும் வெளியிடப்படும்.
இந்தப் பட்டியலில் இல்லாத படிப்புகள் வழங்கப்பட்டால், அந்தப் படிப்பு அங்கீகாரம் இல்லாத படிப்பாகக் கருதப்படும். மேலும், இப்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், எந்தவொரு பயன்களையோ அல்லது சலுகைகளையோ பெற முடியாது.
மேலும், தொலைநிலை மற்றும் திறந்த நிலைப் படிப்புகளை வழங்கி வரும் உயர் கல்வி நிறுவனங்கள் யுஜியி-யின் தொலைநிலைப் படிப்புகளுக்கான 2017 வழிகாட்டுதலையும், அவ்வப்போது வெளியிடப்படும் சட்டத் திருத்தங்களையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றாத கல்வி நிறுவனத்தின் தொலைநிலைப் படிப்புகளுக்கான அங்கீகாரம் மட்டுமின்றி, அந்தக் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் பிற முறையான படிப்புகளுக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












