ஸ்கூல் லீவு விட்டாச்சு... குழந்தைகளுக்கு என்ன கற்றுத்தரப்போகிறீர்கள் பெற்றோர்களே?

Posted By:

சென்னை : குழந்தைகளுக்கு இரண்டு மாதம் லீவு. இந்த நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும், அறிவார்ந்த விஷயங்களையும் கற்றுக் கொடுப்பது சாலச் சிறந்தது.

சம்மர் கோச்சிங் வகுப்புகளில் போய் அடைத்து வைக்காமல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு லீவு நாட்களில் செய்யவேண்டியது இதுதான்...

1. உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள். ஏ.டி.எம்ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.

ஸ்கூல் லீவு விட்டாச்சு... குழந்தைகளுக்கு என்ன கற்றுத்தரப்போகிறீர்கள் பெற்றோர்களே?

2. அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்துச் சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்? எனப்தை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள், அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.

3. அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச்சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.

4. அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீரை ஊற்றி வளர்க்க சொல்லுங்கள். மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.

5. இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள். அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள். இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள். (என் பெற்றோர்கள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்.)

6. மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள், விபத்தினால் அடிபட்டு சிகிச்சை பெற்றுவருபவரை காணச் செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு வாகத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்து கொள்வார்கள்.

7. ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு. அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழி வகை செய்யுங்கள். நம் முன்னோர்களின் விவசாய முறைகளையும் வாழ்க்கையையும் அவர்களின் பெருமைகளையும் அதற்காகபட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.

8. அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல்நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச்சென்று அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள். அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள். அதன்பின் அவர்களாகவே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரமித்துவிடுவார்கள்.

9. உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள். அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.

10. அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள். அனைத்து மதமும் அன்பை மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள்.

இதில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்து கொள்வார்கள்.

English summary
To the attention of parents, Two months leave for children. It is good to teach their children good habits and intellectual matters.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia