தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2019 செப்டம்பர் 1-ம் தேதியன்று நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

இதனிடையே, இத்தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில் பல்வேறுகட்ட விசாரணைகளுக்குப் பிறகு தற்போது 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் - 4 தேர்வு கடந்த 2019 செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் 16,29,865 பேர் தேர்வு எழுதினர். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பதவிகளுக்காக நடத்தப்பட்ட இத்தேர்வின் முடிவுகள் நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது.
முதல் 100 இடங்களில் சந்தேகம்
முடிவுகளின் அடிப்படையில், முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தது பிற தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
முறைகேடுகள் புகார்
இதனைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 100 இடங்களுக்குள் 35 இடங்களைப் பிடித்தவர்களை நேரடியாக அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.
சிபிசிஐடி விசாரணை
இதனிடையே, முறைகேடுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கினை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்தனர். இதில், முதற்கட்டமாக ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் இருவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
99 தேர்வர்கள் தகுதி நீக்கம்
இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வுப் பணியாளர்கள் காரணம் ?
மேலும், குரூப் 4 தேர்வின் போது தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் துணையுடன் தான் விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மாற்றுத் தேர்வர்களுக்கு அழைப்பு
முறைகேட்டில் ஈடுபட்டதாக பலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு பதில் தகுதியான 39 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு 39 பேருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தகவல் வெநிளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications












