தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் மே மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என தொழில்நுட்பக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை 7 லட்சத்து 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவு மே 6-ம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.

பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோரின் விருப்பமாக இருப்பது பொறியியல் படிப்புகளாக உள்ளது தமிழ்நாட்டில் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இவை ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கவனம் பொறியியல் மாணவர் சேர்க்கை மீது திரும்பியுள்ளது. பொது கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கும் என்று மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து பொது கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி 10 நாட்களுக்குள் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வு முடிவு மே முதல் வாரத்தில் வெளியாவதால் பொறியியல் சேர்க்கைக்கான அறிவிப்பு மே 2-வது வாரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆன்லைன் மூலமே கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications












