தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் கல்விக் கட்டண உயர்வு இல்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நிலவி வரும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொறியியல் கல்விக் கட்டண உயர்வு செய்ய அனுமதி கேட்டு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சார்பில், நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையிலான கட்டணக் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம், அதன் 4 பிரிவுகள் மற்றும் 13 உறுப்புக் கல்லூரிகளுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கட்டணத்தை நடப்பு கல்வியாண்டில் உயர்த்தியது.
இதனைத் தொடர்ந்து, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணமும் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இது பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல் நாள் கலந்தாய்வினை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர் கூறியதாவது:
விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி, கல்விக் கட்டண உயர்வு கோரி சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கட்டணக் குழுவிடம் மனு அளித்திருந்தன. ஆனால், சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கல்விக் கட்டணம் மாற்றியமைக்கப்படும்.
எனவே, நடப்பு கல்வியாண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. அந்தக் கல்லூரிகளில் ஏற்கெனவே உள்ளதுபோல அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் ரூ. 55,000 மட்டுமே கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 பிரிவுகள் மற்றும் அதன் 13 உறுப்புக் கல்லூரிகளுக்கு மட்டுமே கல்விக் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை ரூ. 9 ஆயிரம் என்ற அளவிலிருந்த கல்விக் கட்டணம், தற்போது ரூ. 15 ஆயிரம் என்ற அளவில் உயர்த்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


Click it and Unblock the Notifications












