2019-20-ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று (ஜூன் 25) தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் நடத்தப்படும் இந்த கலந்தாய்வில், முதல் மூன்று நாட்கள் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு மற்றும் 12ம் வகுப்பு தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகியவை சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேரடி கலந்தாய்வு முறையில் நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து, வரும் ஜூலை 3-ஆம் தேதியன்று பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்-லைன் முறையில் நடத்தப்படும். இக்கலந்தாய்வில் மாணவர்கள், அவர்களின் வீட்டிலிருந்தபடியே பங்கேற்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையில் இன்று நடைபெற்று வரும் முதல் நாள் கலந்தாய்வில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இரண்டு பிரிவுகளாக காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரையில் 80 பேருக்கும், மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் மீதமுள்ள 58 பேருக்கும் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
இரண்டாம் நாளான புதன்கிழமை (நாளை) முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 7 பிரிவுகளாகச் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
அடுத்தகட்டமாக, மூன்றாம் நாளில் 8 பிரிவுகளாக விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. 12ம் வகுப்பு தொழில் பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 26 முதல் 28 வரையில் சேர்க்கை நடைபெறும்.