பி.இ. பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 30 ம் தேதியுடன் நிறைவுற்ற நிலையில் 82,819 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. இதில், கடந்த ஆண்டை விட 5 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்க்கை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.71 லட்சம் பி.இ பொறியியல் படிப்பிற்கான சேர்க்கையை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தியது. முதலில் நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வும், 12ம் வகுப்பு தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான 4 சுற்றுகளைக் கொண்ட ஆன்லைன் கலந்தாய்வும், 12ம் வகுப்பில் தோல்வியடைந்து உடனடி சிறப்புத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குமான கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இந்த நான்கு கட்ட கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 81,319 பேர் இடங்களைத் தேர்வு செய்து, பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான சேர்க்கைக் கடிதம் பெற்றுச் சென்றனர்.
இதனையடுத்து நடைபெற்ற பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு மற்றும், துணைக் கலந்தாய்வில் பங்கேற்க முன்பணம் செலுத்திவிட்டு, பங்கேற்கத் தவறியவர்களுக்கான இறுதி சிறப்புக் கலந்தாய்வு ஜூலை 30ம் தேதியன்று (செவ்வாய்க் கிழமை) நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் 1500 பேர் நேரில் பதிவு செய்திருந்த நிலையில் இவர்கள் அனைவருக்கும் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு 90 ஆயிரம் இடங்கள் சேர்க்கையின்றி காலியாக விடப்பட்டிருந்தன. அதுபோல, கலந்தாய்வு மூலம் 77,000 இடங்கள் மட்டுமே நிரம்பியிருந்தன. ஆனால், இந்த ஆண்டு 5,819 இடங்களுக்கு கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 88,181 இடங்கள் சேர்க்கை இன்றி காலியாக விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












