தமிழ்நாடு மாநிலத்தின் மிகவும் பெருமைக்குரிய உயர்கல்வி நிறுவனமான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் டிப்ளமோ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். இந்த படிப்பை பயில விரும்பு மாணவர்கள் http://tnagfi.ucanapply.com என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு விண்ணப்பம் செய்யலாம்.
தமிழகத்தின் பெருமைக்குரிய பல்கலைக்கழகமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ( TNAU ) என்பது தமிழ்நாட்டின் மாநில வேளாண் பல்கலைக்கழகமாகும். இந்தியாவின் தமிழ்நாடு , கோயம்புத்தூரில் அமைந்துள்ளது .
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1868-ம் ஆண்டிலேயே தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒரு வேளாண்மைப் பள்ளியை நிறுவியதிலிருந்து அதன் உருவானது, அது பின்னர் 1906 -ல் கோயம்புத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

1920-ல், இது மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது விவசாயக் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் முழுப் பொறுப்புகளையும் டிஎன்ஏயு (TNAU) ஏற்றுக்கொண்டது. மேலும் ஆராய்ச்சி தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் மாநில விவசாயத் துறைக்கு ஆதரவளித்தது. 1958-ல், இது ஒரு முதுகலை மையமாக அங்கீகரிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை வழங்கத் தொடங்கியது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை, டிப்ளமோ, முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப இணையதளம் கடந்த மே 7-ம் தேதி தொடங்கியது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., அண்ணாமலை பல்கலை. மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை. ஆகியவற்றுக்கான வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை http://tnagfi.ucanapply.com என்ற ஒரே இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஜூன் 6-ம் தேதிக்குள் மாணவ, மாணவிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 14 பட்ட படிப்புகளுக்கும், அண்ணாமலை பல்கலை. கீழ் 2 படிப்புகளுக்கும், மீன்வளப் பல்கலை. கீழ் 9 படிப்புகளுக்கும், மூன்று விதமான டிப்ளமோ படிப்புகளுக்கும் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் 402 இடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு 129 இடங்களும், விளையாட்டு வீரர் இடஒதுக்கீட்டில் 20 இடங்களும், தொழில்முறை கல்வி பாடப் பிரிவினருக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டில் 224 இடங்களும் வழங்கப்படும்.
மேலும், இளநிலை படிப்புகளுக்கு பொது பிரிவினருக்கு ரூ.600-ம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300-ம் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ படிப்புகளுக்கு ரூ.200-ம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100-ம் விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைமுறைகள் முடிந்த பின்னர் வரும் செப்டம்பர் 15-ம் தேதி வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தின் டிப்ளமோ படிப்புகளுக்கு http://tnau.ucanapply.com என்ற இணையளத்தில் 30 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
இதில் உறுப்பு கல்லூரிகளில் வேளாண்மை தொடர்பான டிப்ளமோ படிப்புகளுக்கு 450 இடங்களும், தோட்டக்கலை படிப்புகளுக்கு 150 இடங்களும், தனியார் கல்வி நிலையங்களில் 690 இடங்களும் உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் பிஎச்.டி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது.
இங்கு 33 துறைகளில் முதுகலை படிப்பும், 28 துறைகளில் பிஎச்.டி படிப்பும் வழங்கப்படும்.
முதுகலை, பிஎச்டி படிப்புகளுக்கு ஜூன் 6-ம் தேதி வரை https://admissionsatpgschool.tnau.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications












