கொரோனா ஊரடங்கின் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள பள்ளிகள் வரும் நவம்பர் 16ம் தேதியன்று திறக்கப்படும் என தமிழக கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதின் மூலம் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பினை தமிழக அரசு பின்வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி நிறுவனங்களை முடக்கிய கொரோனா
நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது, இந்நோயின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் மீண்டும் கல்வி நிறுவனங்களைத் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் திறக்கப்படும் பள்ளிகள்!
இதனிடையே, தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தொடர்ந்து அறிவித்து வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திடீரென சமீபத்தில் பள்ளி திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு மாணவர்களை அதிர்ச்சியடைச் செய்தார்.
முதலமைச்சர் அறிவிப்பு!
முன்னதாக கடந்த அக்டோபர் 31-ம் தேதியன்று தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதில், தமிழகத்தில் பல்வேறு புதிய தளர்வுகளுடன் நவம்பர் 30 -ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
9, 10, 11, 12 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள்
மேலும், 9, 10, 11, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதோடு, அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் நவம்பர் 16 -ம் தேதி முதல் நிலையான வழிகாட்டுதலைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டிருந்தது.
கல்வித் துறை அமைச்சர் ஆலோசனை
முதலமைச்சரின் அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, பள்ளிகளைத் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
பள்ளிகளைத் திறக்க திமுக எதிர்ப்பு
இதனிடையே, கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை மீண்டும் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதின் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
அவசர முடிவெடுக்கும் தமிழக அரசு
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும், அனைத்துக் கல்லூரிகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் நவம்பர் 16 முதல் திறந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அவசர கோலத்தில் அறிவித்திருக்கிறார். மாணவ - மாணவியரின் பாதுகாப்பை முழுமையாக ஆய்வு செய்த பிறகு எடுக்கப்பட்ட முடிவாக இது தெரியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
மாணவர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு
மேலும், இந்த அறிவிப்பைக் கண்டதிலிருந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருமே பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது, விடுதி மாணவர்களுக்கான தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளுக்கான எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பை எந்த வகையில் மேற்கொள்வது என்பது குறித்த அச்சத்தில் உள்ளனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை வீசும்
கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் என ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் பெரும் பாதிப்பில் உள்ள நிலையில் தமிழகத்தில் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டுமா என்ற நியாயமான கேள்வி அனைத்துத் தரப்பிலும் எழுந்திருப்பதை முதலமைச்சர் பழனிசாமி உணராமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
பொங்கலுக்குப் பிறகு திறந்தால் போதும்
மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் நவம்பருக்குப் பதில் பொங்கல் விடுமுறை முடிந்து, 2021 ஜனவரி இறுதியில், அப்போதிருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளைத் திறக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றின் ஆய்வறிக்கைகளும் எச்சரிக்கின்றன. இவற்றை எல்லாம் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காமல், ஒதுக்கித் தள்ளிட இயலவில்லை என அவர் கூறியுள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிப் போகிறதா?
இந்நிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் வரும் 16ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்த உத்தரவு தள்ளிவைக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் திடீர் ஆலோசனை
தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க தற்போது சூழ்நிலை சரியாக இல்லை என்ற பல்வேறு கருத்துகளைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் திடீரென ஆலோசனை நடத்தியதாகவும், பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications












