கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது சூழ்நிலை சற்று சீரமைந்துள்ள நிலையில் மாநில அரசுகள் தங்களது பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப பள்ளிகளைத் திறந்துகொள்ள மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், பள்ளிகள் திறப்பிற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளைத் திறப்பதின் மூலம் மாணவர்களுக்கு இந்நோய் எளிதில் தொற்றும் அபாயம் இருப்பதால் தமிழக அரசு இந்த முடிவைத் திருப்பப்பெற வேண்டும் என பெற்றோர்கள், எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் கல்வித் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications












