புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 12ம் வகுப்பு பாடத்திட்டம் நீட் தேர்வுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த பட்டியல் தயாராகி வருகிறது. ஆனால், அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளையும் அரசுப் பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்ற சட்ட வரைமுறைகள் எதுவும் இல்லை.
அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப தனியார் பள்ளியிலும் சேர்க்கலாம். அதனை யாராலும் தடுக்க முடியாது. இருப்பினும் அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் ஆசிரியர்களை வாழ்த்துகிறோம்.
நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 412 மையங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள 12 ஆம் வகுப்பு பாடத்திட்டமானது நீட் தேர்வுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013, 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












