கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி: அடுத்த கல்வியாண்டிலிருந்து தமிழக அரசே நடத்துகிறது!

Posted By:

சென்னை: கோவை- சிங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின்(இஎஸ்ஐ) மருத்துவக் கல்லூரியை அடுத்த கல்வியாண்டு முதல் ஏற்று நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கோவையில் மிக அருமையான முறையில் நவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது இந்த இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி. இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அடுத்த ஆண்டு முதல் தனது கைக்குள் கொண்டு வரவுள்ளது தமிழக அரசு. மேலும் அடுத்த கல்வியாண்டு முதல்(2016-17) அங்கு மாணவர்களைச் சேர்க்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி: அடுத்த கல்வியாண்டிலிருந்து தமிழக அரசே நடத்துகிறது!

100 எம்பிபிஎஸ் இடங்கள்

இந்தக் கல்லூரியில் மொத்தம் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில்(எம்சிஐ) ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக ஒதுக்கீட்டின் கீழ் 85 எம்.பி.பி.எஸ். இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 15 எம்.பி.பி.எஸ். இடங்களும் இங்கு உள்ளன.

21-வது மருத்துவக் கல்லூரி

அடுத்த ஆண்டு முதல் இது தொடங்கப்பட்டால் தமிழகத்தின் 21-ஆவது அரசு மருத்துவக் கல்லூரியாக கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியாக இருக்கும்.

சென்னை இஎஸ்ஐ கல்லூரி

சென்னை, கே.கே.நகரில் ரூ. 494.62 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் (இஎஸ்ஐ) மருத்துவக் கல்லூரி கடந்த 2013-14ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ். படிப்பில் தலா 100 பேர் வீதம் மொத்தம் 200 மாணவர்களும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 38 மாணவர்களும் படித்து வருகின்றனர்.

ரூ.580.57 கோடி முதலீடு

இதைத் தொடர்ந்துதான் கோவையில் 580.57 கோடி முதலீட்டில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு, இதுவரை ரூ. 380 கோடி அளவுக்குச் செலவிடப்பட்டுள்ளது. அங்கு இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கான கட்டடம் தயார் நிலையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது.

இஎஸ்ஐ-யிடமிருந்து கைநழுவியது ஏன்?

இந்த நிலையில் தொழிலாளர்களின் நிதியில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க பெரும் நிதி செலவழித்தது சரியல்ல என்று மத்திய அரசின் தொழிலாளர் துறை கடந்த ஆண்டு டிசம்பரில் முடிவு செய்தது. எனவே ஏற்கெனவே தொடங்கிய இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் இனி எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களை அனுமதிப்பதில்லை என்றும், தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் விரும்பும் நிலையில் கல்லூரிகளை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது என்றும் இஎஸ்ஐ நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அரசே ஏற்று நடத்த முடிவு

இஎஸ்ஐ நிறுவனத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து, இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த மார்ச் மாதம் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். "சென்னை, கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை தொடர்ந்து நடத்தச் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள ரூ. 571.23 கோடியை மத்திய அரசு ஏற்றால், இந்தக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்தத் தயார்' என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டார்.

மத்திய அரசு ஒப்புதல்

அந்தக் கடிதத்துக்குப் பதில் அளிக்கும் வகையில், கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்த ஆகும் ரூ. 200 கோடியை அளிப்பதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு பதில் கடிதம் அனுப்பியது. இதையடுத்து கோவை மருத்துவக் கல்லூரி, தமிழக அரசு வந்தது.

உடன்பாடு

இதையடுத்து நிதி தொடர்பாகவும் இதர விஷயங்கள் தொடர்பாகவும் ஓர் உடன்பாட்டை மத்திய அரசுடன் விரைவில் செய்து கொண்டு, கோவையில் வரும் கல்வி ஆண்டில் (2016-17) இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருப்பதால் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடியும்.

English summary
TN Govt has decided to run Kovai ESI Medical college from newt academic year. In this regard the government i going to make an agreement with the Esi and Union Government.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia