அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 8-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் புதிய நிபந்தனைகளால் இடமாறுதல் கோரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதத்துக்கு மேல் குறைந்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், ஒரு பள்ளியில் குறைந்தது ஓர் ஆண்டு பணியாற்றியவர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்ற நிலையில் இருந்து, இந்த ஆண்டு முதல் குறைந்தது 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமே இடமாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியும் என மாற்றப்பட்டது.
மேலும், ஒவ்வொரு பணிப் பிரிவிலும் 100 இடங்களுக்கு மேல் காலி ஏற்பட்டால் மட்டுமே பொதுக் கலந்தாய்வு நடத்தப்படும், நிர்வாக காரணங்களுக்காக, தகுதி வாய்ந்த அலுவலர்களால் ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் உத்தரவு எந்த நேரத்திலும் வழங்கப்படலாம் என்பது போன்ற புதிய நியதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் புதிய நிபந்தனைகளினால் பல ஆசிரியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே விண்ணப்பிப்பதில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதிவரை கல்வித் துறை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் பெறுவது கடந்த 28-ஆம் தேதியுடன் முடிந்தது. பல மாவட்டங்களில் வழக்கமாக விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை விட 30 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வரும் ஜூலை 8-ஆம் தேதியன்று ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு தொடங்குகிறது. முதல் நாளில், வட்டார கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள் நடக்கவுள்ளது. 15-ஆம் தேதி கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.


Click it and Unblock the Notifications












