தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.2 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் குஷியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறையின் கீழ் மாநிலம் முழுவதும் தற்போது 37,576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக அரசு ஆசிரியர்கள் 2.25 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்கள் தொடக்க, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் (பட்டதாரி ஆசிரியர்கள்) என பிரிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வந்தது. இந்நிலையில் வரும் கல்வியாண்டில் (2024-25) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை கணிசகமாக அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான புதிய திட்டங்களையும் தமிழக அரசு வகுத்தது.

இதைத் தொடர்ந்து வழக்கத்தைவிட முன்னதாக இந்த ஆண்டு சேர்க்கைப் பணிகள் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு அதிதீவிரமாக நடைபெற்றன. மேலும் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை முன்வைத்து பல்வேறு விழிப்புணர்வு விளம்பரப் பணிகளையும் பள்ளிக் கல்வித்துறை முன்னெடுத்தது.
இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதன் காரணமாக தமிழக மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். இதுவரை 3.2 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் இணைந்துள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இத்தகவலை பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை மூத்த அதிகாரிகள் ஒருவர் கூறியதாவது
வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பணிகள் முழுமையாக முடிந்தபின் மாணவர் சேர்க்கை பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் மாநிலம் அங்கன்வாடி மையங்களில் படித்த, படித்து வரும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோரைஆசிரியர்கள் மூலம் தொடர்பு கொண்டு அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கான பணியில் அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு 4.5 லட்சம் பேர் வரை பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குஷியில் உள்ளனர். மேலும் அதிக அளவில் மாணவர்கள் சேர்வதால் கூடுதலாக பள்ளிகள் ஏற்படுத்தப்படும், மேலும் பலருக்கு ஆசிரியப் பணி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் வேலை தேடும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












