பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று முதல் (மே 7-ம் தேதி) மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார். மேலும் தோல்வியுற்ற மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிவடைந்தன. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ம்தேதி முதல் 13-ம் தேதி வரை நடந்தது. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தப் பணிகள், 83 மையங்களில், 30,000-த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் வாயிலாக சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து விடைத்தாள் மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும், மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்புப் பணியும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், திட்டமிட்டபடி 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணிக்கு (மே 6-ம்தேதி) வெளியிடப்பட்டன. பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகளை, தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் (மே 7-ம் தேதி) மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மா நிருபர்களிடம் கூறியதாவது:
பிளஸ்-2 தேர்வில் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அரை சதவீதம் அதிகமாகும்.
மாணவ, மாணவிகள் தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்வதற்கு மே 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் வழியாக விண்ணப்பிக்க முடியாதவர்கள், பள்ளிகள் மூலமும் விண்ணப்பங்களை அனுப்பலாம். மாணவ, மாணவிகள் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினாலோ, விடைத்தாள் நகல் பெறவோ பள்ளிகள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் துணைத் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தத் துணைத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் இதே கல்வியாண்டிலேயே படிப்பைத் தொடர முடியும். துணைத் தேர்வுகளுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications












