தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனவர்களுக்கான துணைத்தேர்வு ஜூலை 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 11,172 மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர். இதில் மொத்தம் 7 லட்சத்து 39,539 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.17 சதவிகிதமாகும்.
இதில் 4 லட்சத்து 4,143 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 3 லட்சத்து 35,396 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை காட்டிலும் 7.43 சதவிகிதம் மாணவியர் தேர்ச்சி விகிதம் கூடுதலாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 தேர்ச்சி விகிதம் 85.75 சதவீதமாக உள்ளது.
தமிழ் பாடத்தில் 8 பேர் செஞ்சுரி (100 மதிப்பெண்கள்) எடுத்துள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 3,431 பேர் சதம் எடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 96.02 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஈரோடு 95.56 சதவிகிதத்துடன் இரண்டாமிடமும், திருப்பூர் 95.23 சதவிகிதத்துடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளது.
சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை 91.68 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 17-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் 89.41 சதவிகிதம் தேர்ச்சி பெற்று விழுப்புரம் மாவட்டம் உள்ளது.
இந்நிலையில் பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடைபெறும் தேதி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான துணைத்தேர்வுகள் ஜூலை 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் மே 16-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், பிளஸ் 1 வகுப்புக்கான தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டவாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவுசெய்து கொள்ளலாம்.
இதில் விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் ஜூன் 3, 4-ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். அதற்கு தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 தனிக்கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வுக்கால அட்டவணை, கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவச் செல்வங்கள் அறிந்து கொள்ளலாம்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்களைப் பயன்படுத்தியே மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை (தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு) பதிவிறக்கம் செய்ய முடியும்.
இவ்வாறு தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












