மருத்துவப் பரிசோதனைகளின் தலைநகரமாகிறது நெல்லை.. ஆராய்ச்சி மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு!

Posted By:

சென்னை: மருத்துவப் பரிசோதைகளின் தலைநகரமாக மாறி வருகிறது நெல்லை மாநகரம்.

தமிழகத்தில் அதிநவீன மருத்துவ வசதிகளை சென்னையில் மட்டுமே பெறக்கூடிய நிலை முன்பு இருந்தது. பின்பு அது சிறிது சிறிதாக மாறி மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர் போன்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இப்போது தமிழகம் முழுவதுமே பரவலாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளோடு போட்டியிடும் அளவுக்கு அரசு மருத்துவமனைகளிலும் நவீன வசதிகளை செய்துத் தந்துள்ளது மாநில அரசு.

மருத்துவப் பரிசோதனைகளின் தலைநகரமாகிறது நெல்லை.. ஆராய்ச்சி மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு!

இந்த நிலையில் திருநெல்வேலி என்று அழைக்கப்படும் நெல்லை மாநகரமும் மருத்துவத்தில் தலைசிறந்த நகரமாக மாறி வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பல்துறை மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்தின் பணிகள் முழுமை பெற்றால், தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத பரிசோதனைகளைக் கூட திருநெல்வேலியில் செய்ய முடியும். மேலும், பல நோய்களைத் தடுக்கும் ஆய்வுகளும் இங்கு தொடங்கப்பட்டுள்ளன என்பதுதான் இப்போதைய சிறப்பு.

திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 1,200 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. ரத்தம், சிறுநீர், ரத்த நுண்அணுக்கள் உள்ளிட்ட மிகச் சாதாரண பரிசோதனைகள் தொடங்கி தைராய்டு சுரப்பி குறித்த பரிசோதனைகள் வரை இம் மருத்துவமனையில் உள்ளன. ஆனால், அறுவைச்சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, மரபணு சிகிச்சை போன்றவற்றில் உயர் பரிசோதனைகள் என்றால் சென்னை, மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் வீணான காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனால்தான் மத்திய அரசின் நிதியுதவியோடு, இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம், தமிழக சுகாதாரத் துறை ஆகியவற்றின் அனுமதியுடன், பல்துறை மருத்துவ ஆராய்ச்சி மையம் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ. 5 கோடியே 25 லட்சம் மதிப்பில் இத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக ரூ.1.25 கோடி நிதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. ரூ.25 லட்சத்தில் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு குளிரூட்டப்பட்டுள்ளது. ரூ. 80 லட்சம் வரை மருத்துவக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.

அரிய பரிசோதனை வசதிகளை உருவாக்கும் நோக்கில், இந்த பல்துறை மருத்துவ ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இதுபோன்ற மையம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியது. அதன் படி இங்கு மையம் உருவாகி வருகிறது. திட்டம் முழுமை பெறும்போதுதென்தமிழகத்தில் அரிய மருத்துவப் பரிசோதனைகளின் மையமாக திருநெல்வேலி மாறும் வாய்ப்பு உள்ளது.

மிகவும் அரிதான என்டோகிரைன், அனீமியா நோய்களுக்கான பரிசோதனை உள்ளிட்டவற்றையும் இந்தக் கூடத்தில் செய்ய முடியும்.

மேலும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மூலம் 4 வகையான நோய்கள் குறித்து ஆய்வு செய்ய ஐ.எம்.சி.ஆர். அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி காக்கா வலிப்பு, மார்பக புற்றுநோய், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஆகியவை குறித்த ஆய்வுகள் இங்கு தொடங்கப்பட்டுள்ளன என்பதுதான் சிறப்பு. இந்த மையம் மூலம் ஏராளமான ஆராய்ச்சி மாணவர்கள், நிபுணர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் புதிய ஆராய்ச்சிகளைச் செய்து பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.

இதுதவிர மேலும் 17 வகையான மருத்துவ ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஒப்புதல் கேட்டு, கருத்துருக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கும் ஒப்புதல் கிடைத்துவிட்டால் நெல்லை மையம் உன்னதமான நிலைக்குச் சென்றுவிடும்.

மரபணு சோதனையும் செய்யலாம்:

மேலும் இந்த மையத்தில் மரபணு சோதனையையும் செய்ய முடியும் என்று இங்குள்ள டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலியல் குற்றச்சாட்டுகள், புகார்கள் வரும்போது அதற்கான மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனைக்கு திருநெல்வேலியில் இருந்து ஆந்திரத்துக்கு மாதிரிகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. இப்போது நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்தில் முழுமையான பணிகள் நிறைவடையும் சூழலில், மரபணு பரிசோதனையையும் இங்கேயே செய்ய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

English summary
Tirunelveli town will become a hub of medical tests which is being operationalised in the government hospital.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia