பரீட்சை வருது.. பயமா இருக்கா. மாணவக் கண்மணிகளே.. கவலையை விடுங்க.. பிடிங்க 10 டிப்ஸ்!

Posted By: Staff
சென்னை: பரீட்சை நெருங்கி விட்டது. பலருக்கு மனதில் கவலை குடி கொள்ளத் தொடங்கும். ஆனால் கவலையை விட்டு உதறுங்கள். உங்களுக்காகவே இந்த 10 டிப்ஸ்.

தேர்வு மிகவும் நெருங்கி வந்து விட்ட நிலையில் இன்னும் மீதம் இருக்கும் நாட்களை எப்படி பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் திட்டமிடுவது மிகவும் அவசியமானதாகும். இறுதித் தேர்வு அல்லது பொதுத்தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுக்காக பரபரப்பாக தயார் செய்து கொண்டிருக்கும் இந்த இறுதிக் கட்ட நாட்கள் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்,

தேர்வுக்கு இன்னும் மிகவும் குறுகிய நாட்களே உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 எளிய குறிப்புகள் மீதம் இருக்கும் நாட்களில் நீங்கள் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,

உணவு பழக்க வழக்கம்

தேர்வு நேரங்களில் நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உண்ணுங்கள். கீரைகள் மற்றும் பழங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கட்டாயம் காலை உணவை தவிர்க்க கூடாது அது ஞாபக மறதியை ஏற்படுத்தும். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சற்று வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் உங்கள் உணவில் குளிர் பானங்களை அவரவர் உடல்நிலைக்கேற்ப எடுத்துக் கொள்வதும் நலம் பயக்கும்.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம் என்பது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். மாணவர்கள் தேர்வு நேரங்களில் அதிக நேரம் கண்விழித்து படிக்கும் போது தூக்கத்தை தவிர்ப்பதற்காக காபி மற்றும் தேநீர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளுகிறார்கள் அது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் மற்றும் பித்தத்தை ஏற்படுத்தும். இரவு முழுவதும் விழித்து இருக்கும் போது மூளையின் செயல்பாடு சீராக இருக்காது. எனவே தேர்வின் போதும் மற்றும் தேர்வுக்குத் தயாராகும் போதும் நன்கு உறங்க வேண்டும். இரவு முழுவதும் படித்து விட்டு காலையில் சென்று தேர்வு எழுதும் மிகவும் தூக்கமாகவும் தளர்ச்சியாகவும் இருக்கும் புத்துணர்ச்சி இருக்காது. நீங்கள் நல்ல உறக்கத்தை மேற்கொள்ளும் போது மனதும் உடலும் சுறுசுறுப்பாக இருக்கும்.

குழுவாக படித்தல்

குழுவாக சேர்ந்து படிக்கும் போது உங்கள் ஆர்வம் மற்றும் ஆற்றல் அதிகரிக்கும். தனியாகப்படிக்கும் போது உங்களுக்கு மனச்சிதறல் ஏற்படலாம். ஆனால் குழுவாகப் படிக்கும்போது அது தவிர்க்கப்படும் உங்களுக்கு தெரியாதது மற்றவருக்கு தெரிந்து இருக்கலாம் அப்போது நீங்களும் அதனை அவர்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஒருவருக்கு முன் ஒருவர் படித்து விட வேண்டும் என்ற சிறு போட்டியும் அங்கு ஏற்படும் அது படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாக அமையும் எனவே குழுவாகப் படிப்பது மிகவும் பயனுள்ளதாகும்.

நீர்ச் சத்து அவசியம்

தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் ஒரே இடத்தில் இருந்து ரொம்ப நேரம் படிப்பது என்பது உடலை மிகவும் வெப்பப்படுத்தும். அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர் இரண்டுமே உடலுக்கு நல்லது கிடையாது இரண்டும் சீராக இருப்பது அவசியமாகும். நீர்ச்சத்து உடம்பில் குறைந்து விட்டால் உடல் சோர்வு அடைந்து விடும். உற்சாகமாக இருக்க முடியாது எனவே நன்கு தண்ணீர் குடிப்பது அவசியமாகும்.

ஓய்வு மற்றும் இடைவெளி

படிக்கும் போது அவ்வப்போது ஓய்வு மற்றும் சிறு இடைவெளி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கும் போது உடலும் மனமும் சோர்வடைவது இயல்பானதாகும். எனவே சிறு சிறு ஓய்வு மற்றும் இடைவெளி தேவை. ஓய்வின் போது சற்று எழுந்து நடப்பது உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் பாடுவது இனிப்பு பண்டங்கள் சிறிது உண்ணுவது போன்றவை உற்சாகத்தை தூண்டக்கூடிய செயல்களாகும். அதற்காக அதில் அதிக நேரம் செலவழித்து விடக்கூடாது.

படிப்பு படிப்பு படிப்பு

நீங்கள் உங்களுக்கு கிடைக்கும் நேரம் முழுவதையும் படிப்பில் செலவழிப்பது மிகவும் முக்கியமானதாகும். புத்தகத்தைப் பார்த்துப் படித்தல் பின்பு புத்தகத்தை மூடி வைத்து அதனை பார்க்காமல் சொல்லிப் பார்ப்பது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வேதியியல் குறியீடுகள் மற்றும் கணக்குப் பாடங்களை எழுதி எழுதிப் பார்ப்பது மிகவும் நல்லதாகும். உங்களுக்கு படிக்க போர் அடிக்கும் நேரத்தில் படங்களை வரைந்து பார்க்க வேண்டும். சோர்வான நேரங்களில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு மறுபடியும் படிக்க ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் அதிகாலையில் படிப்பது மிகவும் நல்லதாகும். நல்ல அமைதியான மற்றும் உற்சாகமான இடத்தை தேர்வு செய்து படியுங்கள்.

நல்ல நம்பிக்கை மற்றும் நல்ல உடல்நிலை

நல்ல நம்பிக்கை மற்றும் நல்ல உடல்நிலை மிகவும் அவசியமான ஒன்றாகும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், நீங்கள் நல்ல படித்து விட்ட நிலையில் இருக்கும் போது தேர்வு நாளில் உடல்நலக்குறைபாடு வந்து விட்டால் அது முதலுக்கே மோசமாகிவிடும். எனவே மனதையும் உடலையும் ரிலாக்சாக வைத்துக் கொள்ளுவது மிகவும் அவசியம் நீங்கள் தேர்வுக்கு செல்லும் போது கட்டாயம் உணவு சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும். நன்றாக என்னால் பரீட்சை எழுத முடியும் நான் என்னால் முடிந்தவரை நன்றாக படித்துள்ளேன். கட்டாயம் கடவுள் என் முயற்சிக்கு ஏற்ற பலனைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

படிக்கும் நேரத்தைப் பலப்படுத்துங்கள்

ஒவ்வொரு மனிதனும் உடல் மற்றும் மன பலமுள்ளவர்களாக இருந்தால்தான் சந்தோசமாக இருக்க முடியும். அது போல ஒவ்வொரு மாணவர்களும் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் போதுதான் சாதிக்க முடியும் சரித்திரம் படைக்க முடியும். பொதுத் தேர்வு என்பது உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியத் தருணமாகும். ஆதலால் நீங்கள் படிப்பதற்கு தேர்வு செய்யும் நேரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். படிக்கும் நேரத்தை நீங்கள் பலப்படுத்த வேண்டும். அதாவது பாடங்களை நீங்கள் படிக்கும் போது அதை புரிந்து கொண்டு படிக்க முயற்சிக்கும் போது அது உங்களுக்கு பலனுள்ளதாக அமையும், எளிதில் மறக்காது. உங்களுக்கு எந்தப் பாடம் மிகவும் கடினமாக உள்ளதோ அந்தப்பாடத்தை முதலில் படித்து விடுங்கள். ஏனென்றால் கடைசியாகப் படிக்கலாம் என நினைக்கும் போது நாம் மற்றப் பாடங்களை படித்து களைப்படைந்து இருக்கும் நேரத்தில் கடினமான ஒன்றை படிக்க முடியாது. எனவே உங்களுக்கு எது கடினம் என நினைக்கிறீர்களோ அவற்றிற்கு அதிக நேரம் ஒதுக்குங்கள் மற்றும் பலமுள்ள நேரத்தை ஒதுக்குங்கள்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள்

தேர்வு நடைபெறும் மாதம் என்பது அனைத்து மாணவர்களும் ஏற்கெனவே அறிந்த ஒன்றாகும். நீங்கள் ஒரு வருடமாகப் படித்து படித்து பல பள்ளித் தேர்வுகளை கடந்த பின்புதான் பொதுத் தேர்வை மேற்கொள்ள விருக்கிறீர்கள். எனவே முன்கூட்டியே திட்டமிட்டுதல் என்பது மிகவும் நல்லதாகும். தேர்வு மிகவும் நெருங்கிய நிலையில் இருப்பதால் புதிதாக எதையும் படிக்காதீர்கள். அது உங்களைப் பதட்டத்திற்குள்ளாக்கும். எனவே ஏற்கெனவே படித்தப் பாடங்களை மறுபடியும் நினைவுப்படுத்துங்கள் படியுங்கள். நீங்கள் படித்தவற்றை இரவில் தூங்கும் முன்பாக சிறிது நேரம் அசை போடுங்கள். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அமைதி மற்றும் சுவாசப் பயிற்சி அவசியம்

பல மணி நேரம் கூட தொடர்ந்து படிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் இருக்கீறார்கள். அவ்வாறு படிக்கும் போது இடை இடையே சிறிது நேரம் அமைதியாக இருப்பது நல்லது. மேலும் மூச்சை நன்றாக இழுத்து விடுவதும் நல்லது. அமைதியாக இருப்பது நமது மூளையை சீர் செய்யும், மூச்சுப்பயிற்சி உடலை சீராக்கும்.

நீங்கள் பொது தேர்விற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்களுடைய மனதையும் உடலையும் சரியாக வைத்துக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானதாகும். தேர்வு நடை பெறும் நாளுக்கு முந்தைய நாள் நன்றாக உறங்குங்கள் குறைந்தது 6 மணி நேரம் கட்டாயம் தூங்குங்கள்.

 

வெற்றி உங்களுக்கே

தேர்வு எழுதும் அறைக்கு செல்லும் வரையிலும் படித்துக் கொண்டே இருக்காதீர்கள் அது நல்லதல்ல, தேர்வு கூடத்திற்கு செல்லுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பிலிருந்தே அமைதியாக இருங்கள். எதைப் பற்றியும் உரையாடாதீர்கள். நீங்கள் தேர்வுக் கூடத்திற்குள் நுழையும் போது அமைதியாக செல்வது உங்கள் மன தைரியத்தை அதிகரிக்கும். கேள்வித்தாளை வாங்கிய உடன் நன்றாக வாசித்துப் பாருங்கள் உங்களுக்கு நன்றாக தெரிந்ததை முதலில் எழுதுங்கள். தெரியாததை கடைசியாக யோசித்து எழுதுங்கள். தேர்வு நேரம் முடிவதற்கு 10 அல்லது 15 நிமிடங்கள் முன்னதாகவே தேர்வை எழுதி முடித்து விட்டு சரிபாருங்கள். தைரியமுடன் இருங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் வெற்றி உங்களுக்கே.

English summary
Dear students here are some of the tips to you to face the examinations without any fear in the mind.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia