இனி பிளஸ் 1க்கும் பொதுத்தேர்வு...! பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை...

Posted By:

சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்தப்படுவதுப் போல பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

தமிழக அரசு விரைவில் இந்த திட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டு வரஉள்ளது. தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி வகுப்பு கடந்த 1978ம் ஆண்டு வரை பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது.

அதன் பிறகு அந்த வகுப்பு முறை நீக்கப்பட்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு முறைகள் கொண்டு வரப்பட்டன. அதற்கு பிறகு தமிழகத்தில் இதே முறைதான் நடைமுறையில் இருந்து வருகிறது.

ப்ளஸ் 1 பாடங்களை பல பள்ளிகளில் நடத்துவதில்லை என்ற புகார் உள்ளது. எனவே ப்ளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தலாமா என்ற ஆலோசனை நடைபெறுவதால் இனி ப்ளஸ் 1 பாடங்களை கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும்.

பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை

5 ஆண்டுக்கு ஒரு முறை பாடப்புத்தகங்கள் மாற்றப்படும். இவை எல்லாம் மனப்பாடம் செய்யும் முறையில் இருப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பாடப்புத்தகங்கள் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.

மொழிமாற்றம் செய்யும் பணி

மேலும், சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகத்தில் சிபிஎஸ்இ பாடங்கள் போல தரம் இல்லை என்றும் கல்வியாளர்கள், பெற்றோர் குறை கூறி வருகின்றனர். இதையடுத்து, சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களை அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்யும் பணி நடந்துவருகிறது.

அடுத்த கல்வியாண்டில் மாற்றம்

முதலில் 7, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்த புத்தகங்களை அறிமுகம் செய்துவிட்டு அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து மற்ற வகுப்புகளுக்கு அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்து இருந்தது. ஆனால், இப்போது அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு, 2018-2019ம் கல்வி ஆண்டில் 7, 8, 9, 10, பிளஸ் 1 வகுப்புகளுக்கு மட்டும் மொழி மாற்றம் செய்யப்பட்ட புத்தகங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பிளஸ் 1 மார்க் இணைப்பு

அதற்கு அடுத்த கல்வியாண்டில் மற்ற வகுப்புகளுக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்களை பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களுடன் இணைக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

விரைவில் அறிவிப்பு

அதற்காக அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்தலாம் என்றும், அந்த தேர்வு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் போல நடத்தவும் ஆலோசித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வர உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிட பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

English summary
The school education counseling for public examination plus 1. Plus 1 quarterly, half yearly and yearly marks will be added to Plus 2.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia