பிளஸ்2 படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்கலாமே? உயர் நீதிமன்றம் கேள்வி

Posted By:

சென்னை : சென்னை ஐகோர்ட்டில் காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த ராமச்சந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதால், மாநில கல்வி வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறியிருந்தார்.

சிபிஎஸ்இ மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள். எனவே மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண்ணுடன், பிளஸ்2 மதிப்பெண்ணையும் சேர்த்து கணக்கிட உத்தரவிட வேண்டும் என்று சிபிஎஸ்இ இயக்குனருக்கு மனு அனுப்பியும், பதில் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை கடந்த மாதம் விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன் வி. பார்த்திபன் ஆகியோர், இது தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ இயக்குனர் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் ஆகியோருக்கு உத்ரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் வி.பி.ராமன், மனுதாரர் கோரிக்எகையை ஏற்க முடியாது என்று பதில் அளிக்கப்பட்டு விட்டது. எனவே, இந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்றார். இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை.

மாணவர்கள் மத்தியில் நிலவும் குழப்பமான சூழ்நிலை

நாடு முழுவதும நடத்தப்படும் இந்த நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். பல்வேறு மாநிலங்களில், சிபிஎஸ்இ மாநில பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன், ஐ.சி.எஸ்.இ என்று பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. நாடு முழுவதும் ஒரே பாடத்திட்ட முறை இல்லை. மருத்துவ படிப்பில் ஊழல் மூலம் மாணவர்கள் சேர்ந்துவிடக் கூடாது என்பதை தடுப்பதற்காகத்தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் அனைத்து மாணவர்களுக்கும் சரிசமமான போட்டியை நடத்தி அதன் மூலம் திறமையானவர்களை தேர்வு செய்ய வேண்டும். அந்த சூழ்நிலை நீட் தேர்வில் இல்லை. எனவே, மாணவர்கள் மத்தியில் நிலவும் குழப்பமான சூழ்நிலையை போக்கும், விதமாக பொது நலனுக்காக கீழ்க்கண்ட கேள்விகளை கேட்கிறோம் என நீதிபதிகள் கூறினர்.

மாணவர்களின் திறமை ஆற்றலை பரிசோதிக்க முடியுமா?

பல்வேறு பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களை, ஒரு நீட் தேர்வின் மூலம் அவர்களது திறமை, அறிவாற்றல் உள்ளிட்டவைகளை பரிசோதிக்க முடியுமா?
நீட் தேர்வுக்கான கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்தின் கீழ் தயாரிக்கப்படும் போது அது சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எளிதாகவும், பிற பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடினமாகவும் இருக்காதா? இதனால் 5 முதல் 10 சதவீதம் சிபிஎஸ்இ மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான இடங்களை அதிக அளவில் அபகரித்துக் கொள்ள மாட்டார்களா?

நீட் தேர்வு மாணவர்களின் திறமையை நிர்ணயிக்குமா?

ஒவ்வொரு மாநிலங்களிலும் பலவித பாடத்திட்டங்களில் படித்து வரும் மாணவர்களுக்கு நீட் தேர்வு சரிசமமான, பொதுவான போட்டியாகத்தானே இருக்க வேண்டும்? மருத்துவ படிப்புக்கு, பிளஸ்1, பிளஸ்2 மதிப்பெண் தேவையில்லை. நீட் தேர்வு மதிப்பெண் மட்டுமே முக்கியம் என்றால் மாணவர்கள் பள்ளிப்படிப்பில் அக்கறை காட்டாமல், நீட் தேர்வுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்களா? செய்முறை தேர்வு இல்லாமல், நீட் தேர்வின் மூலமாக திறமையான, தகுதியான மாணவர்களை தேர்வு செய்துவிட முடியுமா

நாடு முழுவதும் பிளஸ்1 பிளஸ்2வுக்கு ஒரே பாடத்திட்டம்

நீட் தேர்வு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்ணை, சரிசமமாக கணக்கிடாமல், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்பபடையில் மட்டும் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யலாமா? மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதை தவிர்ப்பதற்காக, பிளஸ்2 பொதுத்தேர்வோடு, நீட் தேர்வை ஏன் நடத்தக்கூடாது நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறோம் என்று தனியார் பயிற்சி நிறுவனங்கள் காளான்களை போல பெருகிவிடாதா? நீட் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி எதிர்கொள்ளும் விதமாக, நாடு முழுவதும் பிளஸ்1, பிளஸ்2 படிப்புக்கு ஒரேவிதமான பாடத்திட்டத்தை ஏன் உருவாக்கக் கூடாது? அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு ஏன் பயிற்சி அளிக்கக்கூடாது?

திறமையான ஆசிரியர்கள்

நீட் தேர்வில் பங்கேற்கும் விதமாக, கல்வித் தரத்தை உரிய காலத்தில் தரம் உயர்த்தாமல், கல்வித்தரத்தை நீர்த்துப் போக செய்யும் விதமாக தமிழக அரசு செயல்படலாமா? அனைத்து பள்ளி மாணவர்களும் நீட் தேர்வை எளிதாக அணுகும் விதமாக திறமையான ஆசிரியர்களை ஏன் தமிழக அரசு நியமிக்கக் கூடாது? இந்த கேள்விகளுக்கு எல்லாம், இந்திய மருத்துவ கவுன்சில், சிபிஎஸ்இ மத்திய மாநில அரசுகள் 27ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும. இந்த வழக்கை முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடும்படி ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
The High Court has raised the question of creating a single syllabus across the country for plus 2 study.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia