100 நோஞ்சான்கள் வேண்டாம்.. ஒரே ஒரு ஆரோக்கியமான பிள்ளை போதும்....!

Posted By:

-ச. இளமாறன், தலைமை ஆசிரியர், ஸ்ரீ.க.வி.மேல்நிலைப்பள்ளி, பாப்புநாயக்கன்பட்டி

மேல்நிலைக்கல்வி முடிந்த உடன் கல்லூரிக்கு மனுச்செய்து விட்டு இடம் கிடைக்குமா கிடைக்காதா என மாணவர்கள் ஏங்கித் தவித்த காலம் ஒன்று இருந்தது. விரும்பிய கல்லூரி கிடைக்கும், அப்படியே கிடைத்தாலும் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும் என்பதெல்லாம் எல்லா மாணவர்களுக்கும் வாய்த்ததில்லை. இருந்தாலும் கிடைத்த கல்லூரியில் பயிற்று முறையில் அப்படி ஒரு நேர்த்தி இருக்கும். பேராசிரியர் ஒரு நடமாடும் அகராதி என்று சொல்லும் அளவிற்கு பாடம் சார்ந்த அனைத்து விசயங்களிலும் வல்லவரவராயிருப்பார்.

எவ்வளவு படித்து எவ்வளவு எழுதினாலும் முழு மதிப்பெண் கிடைப்பது என்பது அபூர்வமான ஒரு செயலாகவே இருக்கும். இது மாணவர்களை மென்மேலும் படிக்கத் தூண்டுவதாகவே அமையும். கல்லூரியை விட்டு வெளியேறும் போது மாணவர்கள் ஓரளவேனும் கற்றுத் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைய நிலையோ பரிதாபமா அல்லது கேலிக்கூத்தா எனச் சொல்ல முடியாத நிலை.

100 நோஞ்சான்கள் வேண்டாம்.. ஒரே ஒரு ஆரோக்கியமான பிள்ளை போதும்....!

இந்தியத் திருநாடு அந்நிய முதலீட்டை அனுமதித்து சில்லறை வணிகம் முதற்கொண்டு அயலான் வந்தது போல் கல்வித்துறையிலே சுயநிதிக்கல்லூரி எனும் பேரிடர் வந்தது. எத்தனை பேரிடர் மேலாண்மை படித்தாலும் காப்பாற்றமுடியாத அளவு மாணவர்களையும் பெற்றோர்களையும் அள்ளி விழுங்கிக் கொண்டிருக்கிறது.

சுயநிதிப் பிரிவா? அல்லது சுயநலப்பிரிவா? என சொல்ல முடியாத அளவு கல்லூரி முதலீட்டாளர்களின் ஆசை பரந்து விரிந்து கிடக்கிறது. கல்வி என்பது சேவை என்னும் நிலைமாறி பொருளீட்டும் துறையாய் மாறியுள்ளது.

இன்றைய நிலையில் கல்லூரி இருக்கும் ஆனால் அதில் படிக்க மாணவர்கள்தான் கிடைக்கமாட்டார்கள். ஒரு சிறு நகரம் என்றால் கூட அந்த நகருக்கு வெளியே பொறியியல் கல்லூரிகளும், பாலிடெக்னிக்குகளும் முளைத்துக் கிடக்கின்றன. நகருக்கு உள்ளே என்றால் 30 சென்ட் இடத்தில் கூட தீப்பெட்டியை அடுக்கினாற் போல கட்டிடம் கட்டி நான்கு தெருவிற்கு ஒரு மெட்ரிக் பள்ளி என்ற அளவில் தனியார் பள்ளிகள். அந்த பள்ளிகளின் விளையாட்டு மைதானமோ ஊருக்கு வெளியே குறைந்த விலையில் வாங்கப்பட்ட பொட்டல் காடாக இருக்கும்.

சரி பள்ளி கட்டியாயிற்று கல்லூரி கட்டியாயிற்று மாணவர்களுக்கு என்ன செய்வது. ஒரு மெட்ரிக் பள்ளியில்மாதம் 5000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஆசிரியர், 5 மாணவர்களைக் கொண்டுவந்து சேர்த்தால்தான் அவர் அந்த பள்ளியில் பணியைத் தொடரமுடியும். மறுத்தால் அடுத்த ஆண்டு வேறு ஒரு ஆசிரியர் அங்கு இருப்பார். இங்கு ஆசிரியர் நியமனம் என்பது அவரது கற்பித்தல் திறன் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. அவரது மாணவர் சேர்க்கைத்திறன் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. சுயநிதிக்கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் இதே நிலைதான்.

ஆள்பிடிப்பு

இப்போது கல்லூரிகள் எல்லாம் பள்ளி ஆசிரியர்களை நோக்கி களம் இறங்கியுள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டும் டிசம்பர் தொடக்கம் முதல் பிப்ரவரி இறுதி வரை ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் பெயர் ஊர் தெரியாத கல்லூரிகள் எல்லாம் படையெடுத்துச் சென்று அங்கே ஆசிரியர்களைச் சந்திக்கின்றனர். ஒரு மாணவரை அவர்கள் கல்லூரியில் சேர்த்து விட்டால் 5000 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை கல்லூரியின் வசதியைப் பொறுத்து அந்த ஆசிரியருக்கு அன்பளிப்பு என்று பேரம் பேசப்படுகிறது. ஒரு ஆசிரியர் 20 மாணவர்களைச் சேர்த்து விட்டால் நோகாமல் 2 லட்சம் ரூபாய் சம்பாதித்து விடுவார். அந்த கல்லூரியைப் பற்றி மாணவர்களிடம் ஆகா ஓகோ என்று பேசுவார். அந்தக் கல்லூரியைச் சார்ந்தவர்களும் மாணவர்களிடம் எங்கள் கல்லூரியில் 100 சதவிகித வேலை வாய்ப்பு அந்த வசதி இந்த வசதி என அளந்து விடுவார்கள்.

தூண்டில் புழுக்கள்

உண்மையில் தரமான எந்த ஒரு கல்லூரிக்கும் விளம்பரமும் பிள்ளை பிடிக்கும் விசயமும் தேவையில்லை. "மரம் பழுத்தால் வௌவாலை வா என்று அழைக்க வேண்டியதில்லையே"... மாணவர்கள் ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையே இந்த கல்லூரி வர்த்தகத்தின் முதலீடு ஆகிறது. மாணவர்களை இழுக்க கல்லூரி நிர்வாகம் போடும் தூண்டிலில் ஆசிரியர்கள் புழுக்களாய் இருப்பதுதான் கொடுமையான விசயம்.

மாணவர்களின் நிலை

கல்லூரியில் சேர்ந்த பின்னர் அக்கல்லூரி எவ்வளவு மோசமாக இருந்தாலும் அந்த மாணவர் எப்படி அந்தக்கல்லூரியை விட்டு வெளியே வரமுடியும். கிராமத்திலே ஒரு சொலவடை சொல்வார்களே "அடுப்பில் வைத்த கொள்ளிக்கட்டை எரிந்துதான் ஆகவேண்டும்" என்று... அதுபோல மாணவர்கள் கொள்ளிக் கட்டைகளாக ஆக்கப்படுகின்றனர்.

தொழில் நுட்ப அறிவு இல்லை

எப்படியோ தட்டுத்தடுமாறி வெளியே வந்தால் ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியரிங் மாணவருக்கு ஒரு சைக்கிளைக் கூட கழற்றி மாட்டத் தெரியாது. என்ற நிலையிருந்தால் வேலைச் சந்தையிலே எப்படி விலைபோவார்கள். இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் கழுத்துக்களில் பட்டங்கள் மட்டுமே கட்டிவிடப்படுகின்றன. இந்தியாவில் என்ஜீனியரிங் மாணவர்களில் எழுபது சதவிகிதம் பேர் தொழில் நுட்பம் சார்ந்த வேலை செய்ய திறனற்றவர்களாக இருக்கிறார்கள் என ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.

என்ன மாற்றம் தேவை

நம் கல்வித் திட்டத்தில் சில மாற்றங்கள் தேவை, அனைத்துப் பள்ளி பாடத்திட்டங்களிலும் ஒரு நாளைக்கு இரண்டு பாட வேளைகள் தொழில் சார்ந்த பாடங்களை செயல்முறை பயிற்சிகளுடன் கற்பிக்குமாறு அமையவேண்டும். குறைந்தபட்சம் நான்கு தொழிற்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதில் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

தொழிற்சாலையுடன் இணைந்த கல்வி

எப்படி ஒரு மருத்துவக்கல்லூரி ஒரு மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளதோ அதேபோல அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் இரண்டு அல்லது மூன்று தொழிற்சாலைகளுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். sandwich course (4 ஆண்டுகள் படிப்பு) முறையில் கல்லூரி மூலம் படிப்பறிவும் தொழிற்சாலை மூலம் பட்டறிவும் வழங்கப்பட வேண்டும். 20 ஆண்டுகளாக முதலாண்டு மாணவர் எழுதிய அதே அளவீடுகளை பார்த்து அடுத்தாண்டு மாணவர்கள் எழுதும் நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும்.

தரமான கல்விச்சாலைகள்

தொழிற்சாலையில் மாணவர் நேரடி பயிற்சி பெரும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தொழிற்சாலையுடன் இணைக்கப்படாத பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி மறுக்கும் நடைமுறை வரவேண்டும். புற்றீசல் போல பெருகும் கல்லூரிகளின் எண்ணிக்கையை குறைத்து தரமான கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அந்த கல்லூரிகளில் சேர மாணவர்களிடையே போட்டி மனப்பான்மை அதிகரிக்க வேண்டும். பள்ளிகளில் தேர்ச்சி பெற்றாலே போதும் கல்லூரிகளில் சேர்ந்து விடலாம் என்ற நிலை மாறவேண்டும். பங்கு பெற்றாலே போதும் பரிசு நிச்சயம் என்ற நிலை மாறி ஓடினால்தான் வெல்ல முடியும் என்ற நிலை உருவானால்தான் மாணவர் சக்தி ஊற்றெடுத்து பெருகும்.

ஆரோக்கியமான பிள்ளைகள்

9ஆம் வகுப்பிலேயே 10 ஆம் வகுப்புப் பாடங்களையும் 11ஆம் வகுப்பிலேயே 12ஆம் வகுப்பு பாடங்களையும் நடத்துவது மாங்காய்களை கார்பைடு கல் போட்டு பழுக்க வைப்பதற்கு சமமாகும். அரசுப் பள்ளிகள் இத்தகைய தவறுகளை செய்வதில்லை என்பது ஆறுதலான விசயம். 100 நோஞ்சான்களை உருவாக்கி வருத்தப்படுவதை விட ஒரு ஆரோக்கியமான பிள்ளையை உருவாக்கி மகிழ்ச்சியடைவதே சரியாக இருக்கும். ஆயுதங்களை உருவாக்காதீர்கள். வீரர்களை உருவாக்குங்கள்... அவர்கள் தங்களுக்கான ஆயுதங்களை தானே தயாரித்துக் கொள்வார்கள். இல்லையென்றால் யார் எப்படி போனால் என்ன பாஸ் பத்து பேரை கல்லூரியில் சேர்த்து விட்டால் ஒரு லட்சம் சம்பாதிக்கலாம் பாஸ் என்ற நிலைதான் மிஞ்சும்.!

English summary
There are many colleges and schools in the state but there is no quality education in many of them. Here is the write up from a school head master.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia