வழிகாட்டுகிறது தாராபுரம் அரசு பள்ளி.. அசத்தும் ஆசிரியப் பெருமக்கள்!

Posted By:

சென்னை: அரசுப் பள்ளிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து மற்ற அரசு பள்ளிகளுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறது இந்த அரசு உயர்நிலைப் பள்ளி. தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி போதிப்பதுடன் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தந்து அசத்தி வருகின்றனர் ஆசிரியர்கள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நல்லிமடம் கிராமத்தில் அமைந்துள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. 7 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அன்று முதல் இன்று வர 10-ம் வகுப்பில் தொடர்ச்சியாக 100 சதவீத தேர்ச்சியைப் பெற்று சாதித்துக் காட்டியுள்ளது பள்ளி.

வழிகாட்டுகிறது தாராபுரம் அரசு பள்ளி.. அசத்தும் ஆசிரியப் பெருமக்கள்!

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் சாதித்துக் காட்ட முடியும் என்ற நிலையை உருவாக்கியவர்கள் இந்தப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள்.

இந்தாண்டு இப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஜி.தாரணி 482 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். மாணவி எஸ்.பாரதிபிரியா 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி கே.சங்கமித்ரா 471 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

வழிகாட்டுகிறது தாராபுரம் அரசு பள்ளி.. அசத்தும் ஆசிரியப் பெருமக்கள்!

மேலும் இப்பள்ளி தாராபுரம் வட்டார அளவில் இரண்டாமிடத்தையும், குண்டடம் ஒன்றிய அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.

எப்படி இந்தப் பள்ளியால் தொடர்ந்து 7 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியைப் பெற்று சாதிக்க முடிகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. இதற்குக் காரணம் இந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியப் பெருமக்கள்தான்.

பத்தாம் வகுப்பு நெருங்கும் நேரத்தில் 3 மாதத்துக்கு அனைத்து மாணவ, மாணவியரும் பள்ளியிலேயே தங்க வைக்கப்பட்டு இரவு நேர படிப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் தங்கும் அனைவருக்கும் இரவு நேர உணவு, உள்ளூர் பிரமுகர்களின் சார்பில் இலவசமாக வழங்க ஆசிரியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக உள்ளூர் பிரமுகர்களை நேரில் சந்தித்து மாணவர்களுக்கு உதவுமாறு ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ள அதற்காக மனமுவந்து உணவு தந்து உதவி வருகின்றனர் கிராமத்து பெரியவர்கள்.

மேலும் தேர்வுக்கு 3 மாதங்களுக்கு முன்பிருந்தே மாணவர்களை கண்காணிக்க தினம் ஒரு ஆசிரியர் வீதம் பணிக்கு நியமிக்கப்படுவர். இதேபோல், பேருந்து வசதியில்லாததால் இரவு வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சரிவர இயலாத நிலை ஏற்பட்டபோது ஆசிரியர்கள் மனம் தளரவில்லை. மாணவர்களின் தேர்ச்சி மட்டு அவர்களது ஒரே குறிக்கோளாக இருந்தது.

தாராபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பள்ளி உரிமையாளர் பாலகிருஷ்ணன் தனக்கு சொந்தமான வேனை பள்ளிக்கு இலவசமாக அளித்து மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்தார். வேனுக்கு ஆகும் டீசல் செலவை பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து பங்கிட்டு கொண்டனர்.

பின்பு மாலை நேரங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் கொண்டு போய் அவர்களது இல்லத்தில் சேர்த்து வருகின்றனர். இதுதவிர காங்கயம் நகர்மன்றத் தலைவர் வெங்கு மணிமாறன் சார்பில் பள்ளிக்கு யுபிஎஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டால் கூட மாணவர்களால் தடையில்லாமலும், ஒழங்காகவும் படிக்க முடிகிறது.

குண்டடம் ஒன்றிய மாவட்டக் குழு உறுப்பினர் எம்.பி.சண்முகசுந்தரம் மூலம் இப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி இலவசமாக பெறப்பட்டுள்ளது.

மேலும் இப்பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் தர்மர் என்பவர் பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுவோருக்கு இருசக்கர வாகனம் தனது சொந்த செலவில் பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தார். தற்போது தேர்வு முடிவு வெளியான நிலையில் மாவட்ட அளவில் மாணவிகள் இடம் பெறாததால் தனது ஊதியத்தின் பாதி தொகையான ரூ. 15 ஆயிரத்தை முதலிடம் பெற்ற மாணவிக்கு ரூ. 10 ஆயிரம், இரண்டாமிடம் பெற்ற மாணவிக்கு ரூ. 5 ஆயிரம் என பகிர்ந்து வழங்கியுள்ளார்.

இதைப் பார்த்த இப்பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியை ஆர்.விஜய பாலலட்சுமி, ஆசிரியர் தர்மர் வழங்கிய பரிசுத் தொகை போல் தானும் மாணவிகளுக்கு வழங்கி மாணவர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் குலத்துக்கும் பெருமைத் தேடித் தந்துள்ளார்.

இதுதவிர ஆசிரியர் தர்மர், இப்பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் கல்லூரிக் கட்டணத்தை செலுத்தி இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை படிக்க வைத்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் தர்மர் கூறியதாவது:

வறுமையான சூழ்நிலையில்தான் படித்தேன். இன்று அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன். அதனால் அரசுப் பள்ளியில் சிறப்பாக படிக்கும் மாணவ, மாணவியருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். எனது இரு குழந்தைகளையும் அரசுப் பள்ளியிலேயே படிக்க வைத்துள்ளேன். அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன் வரவேண்டும் என்றார்.

அரசுப் பள்ளிகளாலும் சாதிக்க முடியும் என்பதை சாதித்துக் காட்டியுள்ளனர் இந்த ஆசிரியர்கள். அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் இதுபோன்ற முடிவை எடுத்தால் பெற்றோர் இனி தனியார் பள்ளிகளைத் தேடிச் செல்லவே மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

English summary
Tharapuram Govt school and teachers become role models for all govt schools in the state.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia