எஸ்எஸ்ஏவின் தொடர் பயிற்சி: ஆசிரியர்கள் அதிருப்தி.. மாணவர்கள் பாதிப்பு

Posted By: Jayanthi

சென்னை, மார்ச் 17: அனைவருக்கும் கல்வி இயக்கம்( Sarva Siksha Abhiyan - எஸ்எஸ்ஏ) மூலம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்படுவதால், அவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் நடத்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் பெரித்தும் பாதிக்கப்படுகின்றனர்.

எஸ்எஸ்ஏவின் தொடர் பயிற்சி: ஆசிரியர்கள் அதிருப்தி.. மாணவர்கள் பாதிப்பு

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித்துறையின் சார்பில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக மாணவர்களின் திறனை வளர்ப்பது, எளிய முறையில் எப்படி கல்வி கற்பிப்பது, புதிய செயல்திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது, மொழிப்பாடங்களை எப்படி கையாள்வது என பல்வேறு வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மேற்கண்ட ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சிகள் எல்லாம் அனைவருக்கும் கல்வி இயக்கம் நடத்தி வருகிறது. மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த பயிற்சிகளால் மாணவர்களுக்கு வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று ஆசிரியர்களே புலம்புகின்றனர். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி, பயிற்சி என்று அலைக்கழிப்பதால் அந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு பல நாட்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக ஓராசிரியர் பள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் நாட்களில் பள்ளியை பார்த்துக் கொள்ளவும்,பாடம் நடத்தவும் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் கட்டாயமாக பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்ற உத்தரவால் வகுப்பில் பாடம் நடத்துவது பாதிக்கப்படுகிறது. நடுநிலைப் பள்ளிகளை பொருத்தவரை 3 ஆசிரியர்கள் கட்டாயமாக பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. அதனால் மற்ற ஆசிரியர்கள் அனைத்து வகுப்புகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இது போன்ற பயிற்சிகள் நீண்ட காலம் நடத்தப்படும் போது அந்த ஆசிரியர் தொடர்ந்து பள்ளிக்கு வர முடியாமல் போகிறது. அதனால் அந்த குறிப்பிட்ட பாட வகுப்புகளை யாரும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தவிர தேர்தல் பணி, கணக்கெடுப்பு பணி, என்று பல்வேறு பணிகளை ஆசிரியர்கள் தலையில் சுமத்துவதால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. கல்வி ஆண்டு முடியும் காலத்தில் அவசரம் அவசரமாக விடுபட்ட பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகின்றனர். அதனால் மாணவர்களும் பாடங்களை படிக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

இதுதான் அரசுப் பள்ளிகளின் நிலையாக இருக்கிறது. இது போன்ற பிரச்னைகளை சந்திக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படைக் கல்வியை முழுமையாக பெற முடியாமல் போகிறது. உயர் கல்விக்கு செல்லும் போது, அதை தொடர்வதில் மாணவர்கள் திணறுகின்றனர். பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேரும் போது மாணவர்கள் சிரமப்படுவதாக ஆசிரியர்களே கூறுகின்றனர். கல்வித்துறை இவற்றை கவனத்தில் கொண்டு ஆசிரியர்களை பாடம் நடத்துவதற்கு வசதியாக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

English summary
Due to the continuous training for teachers under Sarva Siksha Abhiyan scheme, the teachers and students suffering a lot.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia