விடைத்தாள் திருத்தும் 'கூலி' பிரச்னை.. தேர்வு முடிவுகள் தள்ளிப் போகுமா?

Posted By: Jayanthi

சென்னை: விடைத்தாள் திருத்த தாள் ஒன்றுக்கு ரூ.20 வழங்க வேண்டும் என்று முதுநிலைப் பட்டதாரிகள் கேட்கின்றனர். இதனால் விடைத்தாள் திருத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிளஸ்2 தேர்வுகள் கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தது. மொழித்தாள்கள் முடிந்ததுமே விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கின. தமிழகத்தில் மொத்தம் 64 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி தொடங்கியதில் இருந்தே திருத்துக் கூலியை உயர்த்தி தர வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டு வருகின்றனர்.

விடைத்தாள் திருத்தும் 'கூலி' பிரச்னை.. தேர்வு முடிவுகள் தள்ளிப் போகுமா?

ஆனால் தேர்வுத் துறை அது குறித்து மவுனமாக உள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நாள் தோறும் ஒவ்வொரு மையத்திலும் ஆசிரியர்கள் வாயிற் கூட்டங்களை நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கற்பிக்கும் பணியைக் காட்டிலும் அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்தும் பணியைத்தான் அதிகம் செய்கின்றனர். இதனால் வகுப்புக்குச் செல்ல முடியவில்லை. மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே மாணவர்கள் கற்பிக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உத்தரவுகளை பள்ளிக் கல்வித்துறை பிறப்பிக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு தாள் ஒன்றுக்கு ரூ.7.50 தான் கொடுக்கின்றனர். அருகில் உள்ள கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தாள் ஒன்றுக்கு ரூ.20 தருகின்றனர். அதைப் போல இங்கும் தாள் ஒன்றுக்கு ரூ.20 வழங்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் தேர்வுத்துறைக்கு மனு கொடுத்துள்ளோம். இது வரை நடவடிக்கை இல்லை. இது தவிர இரவு 8 மணி வரையும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால் அவர்களுக்கு பயணப் படியும் வழங்க வேண்டும். இது குறித்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்போம். அடுத்த ஆண்டில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு போதிய ஆசிரியர்கள் வரவில்லை என்று காரணம் கூறி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
The result releasing date of plus two examinations may be delayed due to the protests of teachers who are engaging in paper correction.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia