என்னது, நாங்க சத்துணவு சமைக்கணுமா? அதெல்லாம் முடியாதுங்க! - ஆசிரியர்கள் எதிர்ப்பு

Posted By: Jayanthi

சென்னை: சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை அடுத்து பள்ளி ஆசிரியர்கள் சத்துணவு சமைத்துப் போட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சத்துணவு மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர்.

என்னது, நாங்க சத்துணவு சமைக்கணுமா? அதெல்லாம் முடியாதுங்க! - ஆசிரியர்கள் எதிர்ப்பு

அதனால் தமிழக பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்கள் செயல்படாத நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு பள்ளி ஆசிரியர்கள் கோடை விடுமுறை எடுப்பதை விட்டுவிட்டு பள்ளிகளை திறந்து சத்துணவு சாப்பிடும் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவ மாணவியருக்கு சத்துணவு சமைத்துப் போட வேண்டும் என்றும், இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை வழியாக சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலம் வாய்மொழியாக இந்த உத்தரவு பள்ளிகளுக்கு சென்றுள்ளது. இதனால் ஆசிரியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். சத்துணவு சமைத்துப் போட முடியாது என்றும் ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பிரச்னை குறித்து தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஆசிரியர்கள் பாடம் கற்றுக் கொடுக்கத்தான் நியமிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு சமைப்பது ஆசிரியர்களின் பணியல்ல. அப்படி செய்தால் ஆசிரியர்களுக்கும், சத்துணவு பணியாளர்களுக்கும் இடையே தேவையற்ற விரோத மனப்பான்மை வளரும். ஊழியர் விரோத நடவடிக்கை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும்.

சத்துணவு வழங்குவதை மேற்பார்வையிடும் தலைமை ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களை சத்துணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்த முடியாது. ஆனால் அதற்கு ஆசிரியர்களை உட்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வழியாக அரசு உத்தரவிடுவதை நாங்கள் கண்டிக்கிறோம். சத்துணவு ஊழியர்களின் பிரச்னையை பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சாமி சத்தியமூர்த்தி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Govt school teachers opposed the order of Education Department to cook nutrition meals for students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia