இந்த ஆண்டு முதல் 2 ஆண்டு பி.எட். படிப்பு: நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் கல்லூரிகள்!

Posted By:

சென்னை: நடப்பு:கல்வியாண்டு முதல் பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டு என்பதை அமல்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்பார்த்து கல்லூரிகள் காத்திருக்கின்றன.

இத்தகவலை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல் 2 ஆண்டு பி.எட். படிப்பு: நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் கல்லூரிகள்!

ஆசிரியர் பணியில் சேர்வதற்கு பி.எட். படிப்பு முக்கியமான தேவையாக இருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஏராளமான பி.எட் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.

நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலானது(என்சிடிஇ.), பி.எட். படிப்பு காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்தி கடந்த ஆண்டு அறிவித்தது. ஆனால் என்சிடிஇ-யின் இந்த முடிவுக்கு பயங்கர எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பி.எட். படிப்புக்கு 2 ஆண்டு காலம் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மேற்கொண்டு வருகிறது. மேலும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுமா அல்லது தொடர்ந்து ஓராண்டாகவே நீடிக்குமா என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் பி.எட். படிப்பில் சேரவும் மாணவ, மாணவிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் தயாரித்த 2 ஆண்டு கால பாடத்திட்டத்துக்கு, பல்கலை ஆட்சிமன்றக் குழு கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது. மேலும், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் கல்விக் குழு கூட்டத்திலும் பி.எட். படிப்பு காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறியதாவது: பி.எட். படிப்பு காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்துவதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் தீர்ப்புக்காக கல்லூரிகள் காத்திருக்கின்றன. நீதிமன்ற உத்தரவைத்தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தீர்ப்பு 2 ஆண்டு காலம் என வந்துவிட்டால் என்சிடிஇ அறிவித்த வழிகாட்டி நெறிமுறைகள், விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.

English summary
Taminadu Teachers education university has waiting for the court verdict on B.ed course duration, University Vice-chancellor G. Viswanathan told to reporters.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia